யார் இந்த திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார்?
திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகவே திருவெறும்பூர் பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு முறையும் திமுக சார்பில், இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் வரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தொகுதி இது.
இந்த முறையும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குத்தான் சீட் என்று சொல்லப்படும் நிலையில், அவருக்கு டஃப் கொடுக்கும் வேட்பாளரை நிறுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் அதிமுகவுக்கு. அந்த வகையில்தான், சுமார் எட்டு ஆண்டுகளாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவியை தக்க வைத்து வரும் முன்னாள் எம்.பி. ப.குமாரை டிக் செய்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.
அரச குடும்பத்தை சேர்ந்தவர், காங்கிரஸ் பேரியக்கத்தின் திருச்சியின் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக அறியப்பட்ட, சாருபாலா தொண்டைமானை வெறும் 4,335 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறையாக எம்.பி.யானவர் ப.குமார்.
2009 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறையும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வென்று பத்தாண்டு காலம் எம்.பி.யாக பணியாற்றிய அனுபவத்தோடு, 2021 இல் இதே திருவெறும்பூர் தொகுதியில் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் 50,000 ஓட்டு வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவினார். இந்தமுறையும் மோதிப்பார்த்துவிடுவது என்றே, இவரையே மீண்டும் களமிறக்கியிருக்கிறது அதிமுக.

எம்.பி.யாக இரண்டுமுறை வென்றவரை, சட்டமன்றத் தேர்தலில் களம் இறக்கியிருப்பதற்கு முக்கிய காரணமே, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதான் என்கிறார்கள். மணப்பாறை தொகுதியிலும் இவரது பெயர் அடிபட்டு வந்த நிலையில், கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே, இவரை மீண்டும் திருவெறும்பூரில் களமிறக்கியிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். மேலும், பெல், துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலை அமைந்த தொகுதி என்பதால், எம்.பி.யாக பணியாற்றிய அனுபவம் கை கொடுக்கும் என்பதாலேயே இந்த தேர்வு என்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்த புனல்குளத்தை பூர்வீகமாக கொண்டவர். திருச்சி எம்.பி.யான பிறகு திருச்சி மொராய்சிட்டியில் வசித்து வருகிறார். 1971 ஆம் ஆண்டு பிறந்த ப.குமார் அடிப்படையில் வழக்கறிஞர். இவருக்கு, ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள்.
மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு இணைச் செயலாளராக அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். பிறகு, அதிமுக –வில் இளைஞர்களை குறிவைத்து தொடங்கப்பட்ட தனிப்பிரிவான, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில செயலாளராக பதவி வகித்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு முதலாக தற்போது வரை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக தொடர்ந்து வருபவர். கட்சியினர் மத்தியில் எந்த வம்பு தும்புக்கும் போகாத, அமைதியானவர் என்ற பெயருடன் வலம் வருவதாலேயே, மாவட்டத்தில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட செயலாளராக நீடிக்கவும் முடிகிறது என்கிறார்கள்.
திமுக தரப்பில், திருவெறும்பூர் தொகுதியில் தனக்கென தனி அடையாளத்தோடு வலம் வந்த நவல்பட்டு விஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வருகைக்குப்பிறகு கட்சியில் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவே கருதினார். எதிர்முகாமான அமைச்சர் கே.என்.நேருவோடு வலம் வந்தவர், தற்போது த.வெ.க. பக்கம் சென்றிருக்கிறார். த.வெ.க.வின் வேட்பாளராக நவல்பட்டு விஜி களம் காணும் சூழல் வந்தால், திருவெறும்பூர் சட்டமன்றத் தேர்தலில் அணல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.