அதைத் தடுக்கும் வகையில் நம் வாக்குகள் அமைந்துவிடக் கூடாது !
வாக்களிக்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் சில எண்ணங்களை அசைபோடுவது பயன்தரும்.
தமிழ்நாடு ஒரு சீரான பாதையில் முன்னேறிப் போய்க்கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கும் வகையில் நம் வாக்குகள் அமைந்துவிடக் கூடாது.
திமுகவை வீழ்த்தினால்தான் தங்களுக்கு வாழ்வே என்பதால் பிற கட்சிகள் ஆளுக்கொரு புறத்தில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைப்பது இயல்பு. அவற்றில் எதெல்லாம் நியாயம்?
- பெண்கள் பாதுகாப்பு
ஏதோ சமூகத்தில் குற்றம் நடப்பதற்கே திமுக அரசுதான் காரணம் என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்கின்றனர்.
குற்றங்களைக் குறைக்க முயல்வதுதான் பண்பட்ட மனிதச் சமூகத்தின் அடிப்படைச் செயல்பாடு. அரசாங்கத்தின் தலையாயக் கடமைகளுள் ஒன்று.
குற்றவாளிகளும், வக்கிரபுத்தி கொண்டவர்களும், வன்புணர்வாளர்களும், தீவிரவாதிகளும் நம்மைச் சுற்றி இருந்துகொண்டேதான் இருப்பார்கள். ஒரு கொடுமையான குற்றம் நிகழும்போதுதான் அவர்களை அடையாளம் காணமுடியும்.
நிகழ்ந்தவுடன் ஒரு அரசு எப்படி செயல்படுகிறது என்பதுதான் ஒரு அரசை எடைபோடும் இரு வாய்ப்புகளுள் ஒன்று. இன்னொன்று முந்தைய அரசைவிட குற்றங்கள் குறைந்திருக்கிறதா, கூடியிருக்கிறதா என்று பார்ப்பது.
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் கொடுமை, தூத்துக்குடி படுகொலை, சாத்தான்குளம் காவல் நிலையக் கொலை, கொடநாடு தொடர் கொலை போன்ற குற்றங்கள் நிகழ்ந்தபோது அவற்றை மறைக்க எப்படி அந்த அரசு முயன்றது என்பதைக் கண்டோம். இதுதான் தவறான் அரசின் நிரூபணம்.
திமுக அரசின் காலத்தில் இரு பெரும் குற்றங்கள் – அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.
டிசம்பர் 23, 2024 அன்று நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், மே 2025-இல் (6 மாதங்களுக்குள்) ஞானசேகரன் (37) என்ற நபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.
கோவை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து 125 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை விரைவாக, உறுதியாகச் செயல்படாமல் இது சாத்தியம் இல்லை.
ஓர் ஒப்பீட்டுப் புள்ளிவிவரம்:
கொலைக் குற்றங்கள்
2021-ம் ஆண்டில் 1,597
2025-ம் ஆண்டில் 1,461
வன்புணர்வு குற்றங்கள்
2021-ம் ஆண்டில் 422
2025-ம் ஆண்டில் 401
*முழுமையான விவரங்களை ஒன்றிய அரசின் NCRB இணையதளத்தில் பெறலாம்.

குழந்தைகள், மூதாட்டிகளிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி என அங்கும் இங்கும் இவ்வகையான கொடுங்குற்றங்கள் நிகழத்தான் செய்கின்றன. இது சமூகத்தில் இருக்கிற அவலங்களின் வெளிப்பாடு.
சரியான வளர்ப்பு இல்லாத, கெட்ட சேர்க்கை கொண்ட, வக்கிர மனப்பான்மையுள்ள கேவலமானவர்களின் காமவெறித் தாக்குதல்கள் இவை.
கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் இருந்தாலும் வெறியின் உச்சத்தில் இவர்கள் இதையெல்லாம் சிந்திப்பதில்லை. அன்றாடம் நாம் இத்தகைய செய்திகளைக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். சமூகம் இதைப் பலவிதமாக அணுக வேண்டும். சட்டம் மட்டுமே இதைத் தடுக்கவோ, குறைக்கவோ முடியாது என்பதை உலக அளவில நாம் பார்த்து வருகிறோம்.
கடும் தண்டனைகள் இருக்கிற நாடுகளிலும் இவை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகமே ஏன் தூக்குதண்டனையை எதிர்க்கிறது என்பதும் இதே தத்துவத்தின் அடிப்படையில்தான் – Punishments alone can never be deterrent.
வீடுகளுக்குள் சிறு பிள்ளைகளுக்கு அவர்கள் உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மூலம் நடக்கிற பாலியல் கொடுமைகளை எந்தச் சட்டம் தடுத்துவிட முடியும்?
இந்த ஒழுக்க நெறி வீடுகளில் தொடங்கி, பள்ளிகளிலும், சமூகத்திலும், கற்றுத்தரப்பட வேண்டும். தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
(தொடரும்)
— ஜேம்ஸ் வசந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.