அங்குசம் பார்வையில் ‘அன்பே டயானா’
தயாரிப்பு: சத்யா கரிகாலன், இரா.சரவணன், யுவராஜ் கணேசன், டைரக்டர் & ஹீரோ: பாரி இளவழகன், ஹீரோயின்: ரம்யா ரங்கநாதன், மற்ற நடிகர்கள்: ரோஜா செல்வமணி, சேத்தன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, ‘பரிதாபங்கள்’ கோபி, சுதர்சன் காந்தி, செல்முருகன், ஒளிப்பதிவு: ஷெல்லி காலிஸ்ட், இசை: பரத் சங்கர், எடிட்டிங்: பார்த்தா, ஆர்ட் டைரக்டர்: மகேந்திரன், பிஆர்ஓ: யுவராஜ்
சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் வேலை இல்லா வெட்டி தெலுங்குப் பையனுக்கு அதே ஏரியாவில் உள்ள ஆங்கிலோ-இந்தியன் பெண்ணை லவ் பண்ண வேண்டும் என்பது தான் ஒரே லட்சியம்.( அடடா இதுவல்லவோ லட்சியம்? அந்த லட்சியத்துடன் பாதையில் தொடர்ந்து பயணித்து ‘மேஜிக்’ ( ரம்யா ரங்கநாதன்) என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணைப் பார்த்து லவ்வில் விழுகிறார் ஹீரோ கிருஷ்ணா ( பாரி இளவழகன்). ஹீரோவின் அம்மா ரோஜா செல்வமணிக்கு சாதிப் பாசம் அதிகம். அப்பா சேத்தனோ மகன் லவ்வுக்கு சப்போர்ட். இந்த ‘கிராஸ் லவ்’ ஜெயிச்சுதா? இதான் இந்த இரண்டு மணி நேரம் டயர்டாக்கிய ‘அன்பே டயானா’ .
“உங்களை சிறுவயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்” டைட்டிலில் கார்டு போடும் முன்பே முழுத்திரையின் அரை அளவுக்கு முதல்வர் ஜோசப் விஜய்யின் லைன் டிராயிங் போட்டு நன்றி சொன்னார் பாரி இளவழகன். அப்பவே தெரிஞ்சு போச்சு இந்தப் படம் என்ன லட்சணத்தில் இருக்கும்னு.விஜய்யைப் பார்த்து வளர்ந்த எவனாவது நிதானமான மனநிலையில் வாழ்கிறாரானா? அட விஜய்யே அப்படி வாழ்றாராங்கிறது உலகத்துக்கே தெரியும். சரி அதை விட்டுத் தொலைங்க.
நாம இப்ப விமர்சனத்தை எழுதுவோம். இந்தப் படத்தின் முதல் பலவீனமே பாரி இளவழகன் தான். ‘ஜமா’ படத்தில் நடிப்பில் குறிப்பாக க்ளைமாக்ஸில் நடிப்பில் ஜமாய்த்த பாரிக்கு இதில் ‘யங் லவ்வர் பாய்’ கேரக்டர் டோட்டலா செட் ஆகவில்லை என்பது தான் நிஜம். முகத்தில் இருக்கும் முதிர்ச்சி, நோ ரொமான்ஸ் ஃபீலிங், பாடி லாங்குவேஜ் என எல்லாமே எதிராகப் போய்… டயானாவை டயர்டாக்கிவிட்டது. படத்தை ஓரளவு ரசிக்க வைத்தது ரம்யா ரங்கநாதனின் மேஜிக் நடிப்பும் கவர்ந்திழுக்கும் முக அழகும் தான். இதற்கடுத்து… கடைசி பத்து நிமிடங்கள் காமெடியில் கலக்கி இருப்பவர் சேத்தன் தான். சீனியர் நடிகையான ரோஜா செல்வமணியே பல சீன்களில் செயற்கையான நடிப்பால் சலிப்பை ஏற்படுத்துகிறார். இவரின் சாதி வெறி தணிவதற்காக மகள் இஸ்மத் பானுவின் புருஷன் குடும்பத்துடன் நடக்கும் பஞ்சாயத்து சீன்….சலிப்போ… சலிப்பு….
பாரியின் ஃப்ரெண்ட் பெங்களூரு பாபாவாக பரிதாபங்கள் கோபி, காமெடி பண்ண ரொம்பவே ட்ரை பண்ணியும் எடுபடவில்லை. பாரிக்கு நிச்சயிக்கப்பட்ட மாமா செல் முருகனின் மகள் நிகிலா சங்கரை கோபியுடன்ஓட வைத்திருப்பதையெல்லாம் எந்த லிஸ்டில் சேர்ப்பதுன்னு தெரியல. ஹீரோவும் ஹீரோயினும் க்ளைமாக்ஸில் சேரணும்கிறதுக்காக இப்படிக் கூட யோசிப்பாய்ங்களா? ஒரே ஒரு பாடலில் மியூசிக் டைரக்டர் பரத் சங்கர் கவனம் ஈர்க்கிறார். பெரம்பூருக்குள் மட்டுமே கதை சுத்துவதால் முடிந்த வரை பல்வேறு ஆங்கிள் வைத்து சமாளிக்கிறார் கேமரா மேன் ஷெல்லி காலிஸ்ட். படத்தில் வரும் லவ்வர்களுக்கும் லவ் ஃபீலிங் வரல. படம் பார்க்கும் ரசிகனுக்கும் ‘குட் ஃபீலிங்’ தரல. ஆமா… எதுக்கு இந்தப் படத்துக்கு ‘அன்பே டயானா’ன்னு பேர் வச்சாய்ங்க? ‘அன்பே மேஜிக்’ னே டைட்டில் வச்சிருக்கலாமே…..?
அங்குசம் பார்வையில் ‘ அன்பே டயானா’ 36/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.