சரிதா ஜோ, M.A., M.Ed., M.Sc (Psychology) – எழுத்தாளர், கதைசொல்லி, மேடைப் பேச்சாளர் மற்றும் பதிப்பாளர்.
ஆலா பதிப்பகம் தொடங்கி நூல்களை வெளியிட்டு வருவதுடன், குழந்தைகளுக்கான கதைகள், பாடல்களைaala publication என்ற youtube சேனல் வழியாக அனிமேஷன் வடிவிலும் வழங்கி வருகிறார். 25க்கும் மேற்பட்ட நூல்கள், எழுதி 25க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளராக உள்ளார். சிற்றுளி காலாண்டு இதழ் மற்றும் இயல் இணைய இதழின் துணை ஆசிரியராக உள்ளார். இவரது நூல்கள் அரசு வாசிப்பு இயக்கம், இளம் தளிர் திட்டங்களில் இடம்பெற்று அரசு பள்ளி நூலகங்களைச் சென்றடைந்துள்ளன. இவரின் பல படைப்புகள் தமிழ்நாடு அரசின் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வழியாக ஹிந்தி மற்றும் மராட்டி உள்ளிட்ட இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில நூல்கள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1000க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்வுகள், 100க்கும் மேற்பட்ட பயிற்சிப் பட்டறைகள் நடத்தியுள்ளார். அரசு பள்ளி கலைத் திருவிழாக்களில் மாவட்ட, மாநில நடுவராகப் பணியாற்றியுள்ளார். கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும், தமிழகம் முழுவதும் இலக்கியப் பயணங்கள் மேற்கொண்டு கதைசொல்லியுள்ளார். பல இதழ்கள், இணைய இதழ்கள், தொலைக்காட்சிகள், YouTube, FM வானொலிகளில் கதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. Saritha Jo Storyteller YouTube, கதை கதையாம் WhatsApp குழுக்கள் மூலம் 3000+ குழந்தைகள், 1000+ பெரியவர்களுக்குக் கதைகளை தோழமைகளோடு இணைந்து வழங்கி வந்தார். வலைத்தமிழ் வழியாக வெளிநாட்டுக் குழந்தைகளுக்கும் வாரந்தோறும் இணையவழிக் கதைசொல்லல் நிகழ்த்தியுள்ளார் . RJ வாக ஆசிரியராக விலங்குகள் உரிமை அமைப்பின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

1.நீங்கள் பிறந்த ஊர், கல்வித்தகுதி மற்றும் கதை சொல்லியாக உங்களுடைய பயணம் எங்கே எப்போது தொடங்கியது?
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் என்ற கிராமத்தில்.
நான் படித்தது எம்.ஏ., (தமிழ்)
எம். எஸ். சி., (சைக்காலஜி) எம்.எட்.,
என்னுடைய கதை சொல்லல் பயணம் ஈரோடு நவீன நூலகத்தின் நூலகர் ஷீலா அக்காவினால் 2018 ஆம் ஆண்டு ஈரோடு நவீன நூலகத்தில் தொடங்கியது.
- உங்களுடைய இலக்கியப் பயணத்தில் குறுகிய காலகட்டத்தில் 25க்கும் மேற்பட்ட புத்தகங்கள் 25க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியமானது என்று நினைக்கிறீர்கள்?
எழுத்தின் மீதான ஆழமான விருப்பமும், வாசிப்பின் மீதான தொடர்ந்த ஈடுபாடும், சிறார் இலக்கியத்தின் மீதான அர்ப்பணிப்பும் இணைந்துதான் இந்தப் பயணத்தை சாத்தியமாக்கியிருக்கின்றன.
எழுதுவது எனக்கு ஒரு கடமை அல்ல. அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு செயல்பாடு. அதேபோல், தொடர்ந்து வாசிப்பது என்னுடைய சிந்தனையை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக சிறார் இலக்கியத்திற்குள் தொடர்ந்து பயணித்ததும், குழந்தைகளைச் சந்தித்ததும், அவர்களின் உலகத்தையும் கேள்விகளையும் புரிந்துகொள்ள முயன்றதும் என் எழுத்தை மேலும் செழுமைப்படுத்தியிருக்கிறது.
25-க்கும் மேற்பட்ட புத்தகங்களும் விருதுகளும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் விருதுகளை இலக்காக வைத்து நான் பயணிக்கவில்லை. தொடர்ந்து எழுத வேண்டும், நன்றாக எழுத வேண்டும், இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் பயணிக்கிறேன்.
அதே நேரத்தில், கிடைத்த விருதுகள் எனக்கு வெறும் அங்கீகாரமாக மட்டும் இல்லை. இன்னும் அதிகமான பொறுப்புணர்வை அளித்திருக்கின்றன. என்னுடைய எழுத்தை இன்னும் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையையும் உருவாக்கியிருக்கின்றன.
- ஆயிரத்திற்கு மேற்பட்ட சிலர் கதை சொல்லல் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். தங்கள் அனுபவத்தின் வழியாக கதை சொல்லின் அவசியம் என்ன?
என்னைப் பொறுத்தவரை, கதை சொல்லலின் அவசியம் என்பது முதலில் குழந்தைகளை மகிழ்விப்பது. அதோடு ஒரு குழந்தையின் கற்பனையை வளர்ப்பது, கேள்வி கேட்கும் மனநிலையை உருவாக்குவது, புதிய விஷயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவது, கவனிக்கும் திறனை வளர்ப்பது என குழந்தையின் அறிவுசார் வளர்ச்சியில் கதை சொல்லலுக்கு முக்கியமான இடம் இருக்கிறது.
அதோடு, கதை சொல்லல் குழந்தைக்கு இன்னொரு மிக முக்கியமான திறனையும் கொடுக்கிறது. ஒரு குழந்தை கதையின் வழியாக வேறொருவரின் வாழ்க்கைக்குள் பயணிக்கும்போது, அவர்களின் மனநிலையையும் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும், வலியையும், குழப்பங்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. அதன் வழியாக சக மனிதர்களைப் புரிந்துகொள்ளும் தன்மையும், உணர்வுகளை மதிக்கும் பண்பும் உருவாகிறது.
அதனால் கதை சொல்லல் என்பது கற்பனைக்காக மட்டுமல்ல. சிந்திக்க, கேள்வி கேட்க, கவனிக்க, உணர, புரிந்துகொள்ள, புதிய உலகங்களை அறிந்துகொள்ள, மகிழ்ச்சியாக இருக்க இவை அனைத்திற்கும் குழந்தைகளுக்கு கதை சொல்லல் அவசியம் என்று நான் நம்புகிறேன்.
- சிறார்களுக்குக் கதை எழுதும் போது கதைகளை எங்கிருந்து எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
சிறார்களுக்காகக் கதை எழுதும்போது, இந்தக் கதையை எழுத வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்துகொண்டு நான் கதையைத் தேடுவதில்லை. எனக்கு ஒரு தருணம் கிடைக்கிறது. அந்தத் தருணம் என்னுள் ஒரு சிறிய ஸ்பார்க்கை உருவாக்குகிறது. அந்த ஸ்பார்க்கிலிருந்துதான் கதை தொடங்குகிறது.
அந்தத் தருணங்கள் எனக்கு அதிகமாகக் கிடைப்பது குழந்தைகளிடம் இருந்துதான். கதை சொல்லச் செல்லும் இடங்களில் குழந்தைகளோடு உரையாடும்போது அவர்கள் கேட்கும் கேள்விகள், பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்களுடைய சிரிப்பு, தயக்கம், உடல் மொழி, ஒரு கதைக்கு அவர்கள் கொடுக்கும் எதிர்வினை இவை எல்லாமே எனக்கு கதைக்கான விதைகளாக இருக்கின்றன.
அதேபோல், என்னுடைய மகன்கள் சச்சின் மற்றும் சஞ்சய் இவர்களோடு உரையாடும்போதும் நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. அவர்கள் கேட்கும் எதிர்பாராத கேள்விகள், அவர்கள் சொல்லும் புதுமையான தகவல்கள், அவர்களுடைய மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களோடு பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் இவை குழந்தைகளின் உலகத்தை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
எந்தக் கதைகள் அவர்களுக்குப் பிடிக்கும்? என்பதை மட்டும் நான் பார்க்கவில்லை. எந்தக் கதையை அவர்களிடம் கொண்டு சென்றால், அவர்கள் கதைக்குள் பயணித்துக்கொண்டே தங்களைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் ஏதாவது புதிதாகப் புரிந்துகொள்வார்கள்? என்பதையும் யோசிப்பேன். சில நேரங்களில் அவர்களோடு இதைப் பற்றியே விவாதிப்பதும் உண்டு.
அதைத்தாண்டி, நான் வாசிக்கும்போது அல்லது உலகத்தை கவனிக்கும்போது கண்ணில் படும் ஒரு புதிய தகவல், வித்தியாசமான சம்பவம், மனிதர்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் இதைக் குழந்தைகளுக்கு கதையின் வழியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோன்றினால், அதையும் கதையாக வடிவமைப்பதுண்டு.
அதனால், கதை எங்கிருந்து வருகிறது என்று கேட்டால்—குழந்தைகளிடமிருந்து, வாசிப்பிலிருந்து, வாழ்க்கையிலிருந்து, என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களிலிருந்து.
எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்று கேட்டால் அதில் குறிப்பிட்ட விதிமுறைகள் கிடையாது. ஒரு விஷயம் என்னுள் கேள்வியை எழுப்ப வேண்டும். குழந்தைகளிடம் அதை கொண்டு செல்ல வேண்டும் என்ற உந்துதலை உருவாக்க வேண்டும். அந்தச் சிறிய ஸ்பார்க் கிடைத்தவுடன், அது என்னை விடாமல் தொடர்ந்து வந்தால், அதை கதையாக எழுதத் தொடங்குவேன்.
எந்த ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காகக் கதையை உருவாக்குவதில்லை. ஒரு சிறிய அனுபவம் அல்லது கேள்வி என்னுள் கதையாக மாறும்போது, அதன் வழியாக அந்த உலகத்தை குழந்தைகளிடம் பகிர்கிறேன்.
- தற்போது பெரியவர்களுக்கும் கதை எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் சிறார்களுக்குக் கதை எழுதுதல் பெரியவர்களுக்கான கதை எழுதுதல் இந்த இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?
சிறார் இலக்கியத்தைப் பொறுத்தவரை, எந்த வயதுக் குழந்தைக்காக எழுதுகிறேன் என்பது முதல் கேள்வியாக இருக்கும். அந்த வயதுக் குழந்தைக்கு இது புரியுமா? இந்தக் கருத்து அவர்களுக்குத் தேவையா? இந்த மொழிநடை அவர்களுக்கு எளிதாக இருக்குமா? இந்த வார்த்தை அவர்களுக்குப் புரியுமா? ஒரு வரி எவ்வளவு நீளமாக இருக்க வேண்டும்? படங்கள் எப்படி இருக்க வேண்டும்? என ஒவ்வொன்றையும் கவனித்துத்தான் எழுத வேண்டியிருக்கிறது.
உண்மையில், பெரியவர்களுக்கு எழுதுவதைவிட சிறார்களுக்கு எழுதுவது மிகவும் கடினமானது என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் குழந்தையின் கவனத்தை ஒரு கணம் கூட நாம் இழந்துவிடக்கூடாது.
குழந்தைகளுக்காக எழுதும்போது, அடுத்து என்ன?என்ற ஆர்வம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு பக்கத்தில் மட்டுமல்ல. சில நேரங்களில் ஒரு வரியிலிருந்து அடுத்த வரிக்குக்கூட அந்தக் கியூரியாசிட்டியை உருவாக்க வேண்டியிருக்கிறது. கற்பனை, மாயாஜாலம், சாகசம், மர்மம் என கதைக்குள் தொடர்ந்து ஏதாவது ஒரு இயக்கம் இருக்க வேண்டும். ஒரு சிறிய இடைவெளியில்கூட அந்த சுவாரசியம் குறைந்துவிட்டால், குழந்தை அடுத்த பக்கத்திற்குச் சென்றுவிடும். அல்லது வாசிப்பிலிருந்தே விலகிவிடக்கூடும்.
அதனால், குழந்தை புத்தகத்தை கையில் எடுத்தவுடன் கீழே வைக்க முடியாத அளவுக்கு, எழுத்துக்குள்ளேயே ஒரு சிறிய மாயாஜாலத்தை உருவாக்க வேண்டும். அதற்குப் பின்னால் நிறைய உழைப்பும், தொடர்ந்து குழந்தைகளோடு பயணிக்கும் அனுபவமும் தேவைப்படுகிறது.
பெரியவர்களுக்காக எழுதும்போது அந்தச் சவால் வேறுவிதமானது. அங்கே மனித உறவுகளின் நுட்பங்கள், சமூகச் சிக்கல்கள், உளவியல், நான் வாழ்ந்த அல்லது சந்தித்த மனிதர்கள், என்னுடைய மண், என்னைச் சுற்றியுள்ள வாழ்க்கை ஆகியவை முக்கியமானதாகின்றன. அதனால் பெரியவர்களுக்கான எழுத்தில் கற்பனையைவிட நிஜத்தின் அடர்த்தி எனக்கு அதிகமாக இருக்கிறது. நான் பார்த்த மனிதர்களும், கேட்ட கதைகளும், வாழ்வில் சந்தித்த முரண்பாடுகளும் அங்கே அதிகமாக வந்து நிற்கின்றன.
ஒன்று என் கற்பனையை விரிவுபடுத்துகிறது. இன்னொன்று வாழ்க்கை சார்ந்த புரிதலை ஆழப்படுத்துகிறது. இரண்டும் சேர்ந்து என்னை ஒரு எழுத்தாளராக இன்னும் கூர்மையாக்குகின்றன.
- நவீன சிறார் இலக்கியம் பற்றி உங்கள் பார்வை என்ன?
நவீன தமிழ் சிறார் இலக்கியம், தன்னுடைய இலக்கியப் பரப்பை ஒவ்வொரு அடியாக விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அது மிகச் சிறப்பாகவும் வீரியமாகவும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
ஒரு சிறார் எழுத்தாளராக இந்த வளர்ச்சியைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கிறது. அதைவிட, இந்தப் பயணத்தின் ஒரு சிறிய பகுதியாக நானும் இருக்கிறேன் என்ற பொறுப்புணர்வுதான் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், நாம் எழுதுவது இன்றைய குழந்தைக்காக மட்டுமல்ல. நாளைய சமூகத்தை உருவாக்கப்போகும் குழந்தைக்காக. அந்த உணர்வோடு எழுதப்படும் ஒவ்வொரு கதையும் இலக்கியமாக மட்டுமல்லாமல், ஒரு சமூகப் பொறுப்பாகவும் மாறுகிறது.
நவீன சிறார் இலக்கியம் இன்று ஒரே மாதிரியான கதைகளுக்குள் நின்றுவிடாமல், அறிவியல், சூழலியல், பகுத்தறிவு, சமூகப் பிரச்சனைகள், சமத்துவம், வரலாறு, ஆளுமைகள், சாகசம், மர்மம், கற்பனை என பல்வேறு தளங்களில் விரிவடைந்து வருகிறது. பழைய நீதிக்கதைகள், போதனைக் கதைகள் என்ற எல்லைகளைக் கடந்து, குழந்தையை சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் வைக்கும் புதிய கதைப்பரப்புகள் உருவாகி வருவது ஆரோக்கியமான மாற்றம் என்று நினைக்கிறேன்.
அதே நேரத்தில், விமர்சனங்கள் இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கின்றன. சிறார் இலக்கியத்திலும் எழுத்தின் தரம் தொடர்பான விமர்சனங்கள் இருக்கின்றன. எல்லாப் படைப்புகளும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. ஆனால் அந்த விமர்சனங்களைத் தாண்டியும், நவீன சிறார் இலக்கியத்தின் வளர்ச்சியை மறுத்துவிட முடியாது.
இன்னும் நாம் கவனம் செலுத்த வேண்டிய சில பகுதிகள் இருக்கின்றன. குறிப்பாக படக்கதைகளிலும், புதிய புதிய வடிவங்களிலும் அதிகமான படைப்புகள் வர வேண்டும். பதின்பருவக் குழந்தைகளுக்கான நூல்கள் இன்னும் அதிகமாக உருவாக வேண்டும். அவர்களுடைய உலகம் மிகவும் சிக்கலானதும் தனித்துவமானதுமாக இருக்கிறது. அந்த உலகத்தைப் புரிந்துகொண்டு எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது. அதேபோல், பதிப்பாளர்கள் புத்தகங்களின் வடிவமைப்பிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் கையில் ஒரு புத்தகம் செல்வதற்கு அதன் உள்ளடக்கத்தைப் போலவே அதன் வடிவமும் முக்கியமானது.
இன்னொரு முக்கியமான மாற்றமாக நான் பார்ப்பது, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் உருவாக்கத்தை. நவீன சிறார் இலக்கியத்தின் வளர்ச்சியில் இதை ஒரு முக்கியமான மைல்கல்லாக நான் பார்க்கிறேன். அமைப்பின் தொடர்ச்சியான செயல்பாடுகளும், அதன் சமூகப் பார்வையும், சிறார் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்று நம்புகிறேன்.
மொத்தத்தில், நவீன தமிழ் சிறார் இலக்கியம் இன்று ஒரு சீரான நடைபோட்டுக் கொண்டிருக்கும் துறை அல்ல. தொடர்ந்து தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கி, புதிய பாதைகளைத் தேடி, புதிய வடிவங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு உயிருள்ள இலக்கியப் பரப்பு.
அதன் பயணம் இன்னும் நீண்டது. அந்தப் பயணத்தில் ஒரு எழுத்தாளராக பங்களிப்பது மட்டுமல்ல, அந்தப் பொறுப்பை உணர்ந்து தொடர்ந்து கற்றுக்கொள்வதும் எழுதுவதும் எனக்கு முக்கியம்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.