அங்குசம் பார்வையில் ‘பாட்டல் ராதா’
தயாரிப்பு : ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ பா.இரஞ்சித் & ‘பலூன் பிக்சர்ஸ்’ டி.என்.அருண்பாலாஜி. டைரக்ஷன் : தினகரன் சிவலிங்கம். நடிகர்—நடிகைகள் : குருசோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான்விஜய், மாறன், ஆண்டனி, பாரி இளவழகன், மாலதி அசோக், அபி ராமையா, வசந்த் மாரிமுத்து, சுஹாசினி சஞ்சீவ். ஒளிப்பதிவு : ரூபேஷ் ஷாஜி, இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : இ.சங்கத்தமிழன், ஆர்ட் டைரக்டர் : ஏ.ராஜா, காஸ்ட்யூம் : ஏகன் ஏகாம்பரம். பி.ஆர்.ஓ. : குணா.
கட்டிடத் தொழிலாளியாக இருக்கும் ராதாமணி [ குரு சோமசுந்தரம் ] முழு நேரக் குடிகாரனாகிவிடுகிறார். இதனால் குடும்பத்தை நடத்த ரொம்பவே அல்லாடுகிறார் மனைவி சஞ்சனா நடராஜன். ஒருகட்டத்தில் ராதா குடிநோயாளியாகவே மாறிவிடுகிறார். இதனால் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கிறார் சஞ்சனா நடராஜன். அங்கிருந்து திரும்பி வரும் போது, பாட்டல் ராதா திருந்துகிறாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நான்கு மொழிகளிலில் இருந்து மெகா ஸ்டார்கள், நானூறு கோடி பட்ஜெட், நான்கு நாட்களில் சக்சஸ் மீட், இதையெல்லாம் நம்பாமல், குடிக்கு அடிமையாகிவிட்ட இப்போதைய ஆண் சமூகத்தின் மீதுள்ள கோபம்,பச்சாதாபம், குடிகாரர்களால் நொம்பலப்படும் பெண் சமூகத்தின் மீதான அக்கறை இவற்றையெல்லாம் கதையாக்கி, அதை சிறிய அளவு பட்ஜெட்டில் எடுத்திருக்கும் டைரக்டர் தினகரன் சிவலிங்கத்தையும், இவரின் சமூகப் பொறுப்புக்கு துணை நின்ற இயக்குனர் பா.இரஞ்சித்தையும் தயாரிப்பாளர் டி.என்.அருண்பாலாஜியையும் பாராட்டியே ஆகவேண்டும்.
எல்லா சீன்லயும் எப்படியும் ஒரு ஆஃப் அடிச்சுட்டுத் தான் நடிச்சிருப்பாருன்னு நினைக்கும் அளவுக்கு குடி நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார் குருசோமசுந்தரம். ‘நான் குடிகாரன் இல்ல, எப்பவாவது ஒரு கட்டிங் அடிப்பேன்” என வாய் குளறியபடி சொல்லும் சீன்களில் எல்லாம் குரு…. சூப்பர் குரு என சொல்ல வைத்துவிட்டார். குறிப்பாக க்ளைமாக்ஸில் குடியின் கேடு பற்றி சஞ்சனா நடராஜன் வெடித்து அழும் சீனில், அவரின் தோள் தொட்டு ஆற்றுப்படுத்தும் சீனில் அசத்திவிட்டார் குரு சோமசுந்தரம்.
மகா குடிகாரனிடம் மாட்டிக் கொண்டு குழந்தைகளுடன் அல்லல்படும் தாயாக சஞ்சனா நடராஜனும் நடிப்பில் வெளுத்துக்கட்டுகிறார். இவரின் ஒல்லியான உடல்வாகும் முகத்தோற்றமும் குடிகாரக் கணவனால் சிக்கிச் சீரழியும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தலைவிகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் சஞ்சனா நடராஜன். “ஒன்னோட கேடுகெட்ட தனத்தால, நான் மூஞ்சியக் கழுவி நெத்தில பொட்டுகூட வைக்க முடியல”, “நீ அயோக்கியங்கிறது உண்மை தான். அதனால் தான் கண்ட நாயெல்லாம் என்னை படுக்கக் கூப்பிடுது. ஆனா யாரு கூட போகணும்கிறத நான் தான் முடிவு பண்ணனும்” சஞ்சனா பேசும் பொளேர் வசனங்கள், பெண்ணினத்தின் சத்திய வார்த்தைகள்.

இந்த இருவருக்கு அடுத்து மனதில் நிறைந்திருப்பவர் ஜான் விஜய் தான். குடிபோதை மறுவாழ்வு மையம் நடத்தும் அவரின் கண்டிப்பு, முறைப்பு ஒரு ரகம் என்றால், குருசோமசுந்தரத்திடம் “நீயாவது குடிகாரன். ஆனா நான் கொலைகாரன்” என தனது ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லும் சீனில் பின்னியெடுத்துவிட்டார் ஜான்விஜய்.
இந்த மூன்று கேரக்டர்களுக்கு அடுத்து முக்கியக் கேரக்டர் என்றால், அது ஷான் ரோல்டனின் பின்னணி இசை தான். முக்கால்வாசி சீன்களின் ஜீவனே இவரின் இசைதான் என்றால் அது மிகையில்லை.
‘பாட்டல் ராதா’ வைப் பார்த்து நாடே திருந்தாவிட்டாலும் நான்கு பேர் திருந்தினாலே போதும். அதுவே படத்தின் வெற்றிக்கு சாட்சி.
— மதுரை மாறன்.