விடுதலைப்புலிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திம்பு பேச்சுவார்த்தை !
விடுதலைப்புலிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திம்பு பேச்சுவார்த்தை !
விடுதலைப்புலிகள் பிரபாகரனும் அவரது ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் எம்.ஜி.ஆரை அவசரமாக சந்தித்தனர். அவர்களை பார்த்த மாத்திரத்தில் அவர்களுக்கு தலைபோகிற அவசரம் என்று எம்.ஜி.ஆருக்கு புரிந்து விட்டது.
அவர்கள் “அய்யா நீங்கள் கொடுத்த பணத்தில் நிறைய ஆயுதங்கள் வாங்கிவிட்டோம். அவைகளையெல்லாம் டேங்கர்களில் நிரப்பி கப்பல் மூலம் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் சென்னைத் துறைமுகத்திலிருந்து அவைகளையெல்லாம் வெளியே எடுக்க முடியவில்லை.
நீங்கள்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றவுடன் எம்.ஜி.ஆர். தொலைபேசியை எடுத்து பேசினார். ஒரு பேப்பரில் ஏதோ எழுதினார்.
அந்தப் பேப்பரில் துறைமுகத்தில் பணியாற்றும் சுங்கத்துறை உயரதிகாரியின் பெயர் எழுதப்பட்டிருந்தது. நன்றிகளை எம்.ஜி.ஆருக்கு சொல்லிவிட்டு பிரபாகரனும் பாலசிங்கமும் புறப்பட்டனர்.
அடுத்த சில தினங்களில் ஆயுதங்கள் தாங்கி நின்ற டேங்கர் போலீஸ் பாதுகாப்புடன் விடுதலை புலிகளின் இருப்பிடமான திருவான்மியூர் வந்து சேர்ந்தது. பிரபாகரன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் அதிசயித்தார். நன்றியை நேரில் தெரிவிக்க விரும்பிய பிரபாகரனை நேரில் வரச்சொன்னார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் இல்லத்திற்குள் நுழைந்தபோது பிரபாகரன் கையில் ஏகே47 துப்பாக்கியை பரிசாகக் கொடுக்க கொண்டு வந்தார் பிரபாகரன்.
அதனை இயக்குவது எப்படி என்று எம்.ஜி.ஆருக்கு கற்றுத் தந்தார் பிரபாகரன். ‘தம்பி உதவி வேண்டும் என்றால், எப்பொழுதும் உடனே தயங்காமல் கேள் தருகிறேன்’ என்று உறுதி கூறி அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.
இப்படி எல்லாம் விடுதலைப்புலிகளுக்கு பணமும் பொருளுமாக கொடுத்து உதவிய எம்.ஜி.ஆரை, ஒரு கட்டத்தில் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, பூடானில் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தையின் மூலம் எம்.ஜி.ஆரை வைத்து பிரபாகரனை மடக்க நினைத்தார். அந்த உடன்படிக்கையின் சரத்துகளில் பிரபாகரனுக்கு உடன்பாடு இல்லை.
எனவே, எம்.ஜி.ஆரிடம் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று கூற, எம்.ஜி.ஆரும் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, தனி ஈழத்திற்கு உதவுமோ? அதை செய்யுங்கள் என்று கூறிவிட்டார்.
பிரபாகரனும் அந்த உடன்படுக்கையில் கையெழுத்திடுவதை தவிர்த்துவிட்டார். விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை உடனே பறிக்க நினைத்த மத்திய அரசு எம்.ஜி.ஆருக்கு நெருக்கடியைத்தந்தனர்.
எம்.ஜி.ஆரும் உளவுத்துறை அதிகாரி மோகன்தாசுடன் கலந்தாலோசித்து எந்த விதமான இடையூறுமின்றி, உயிர்சேதமின்றி ஒரே இரவில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்த விடுதலைப்புலிகளிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்ததும் ஒரு வரலாறே. அதையும் சாதித்தது எம்.ஜி.ஆர்.
-ஹரிகிருஷ்ணன்