தன்னம்பிக்கையை சிதைக்காத கதைகள் !
சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்க வேண்டும்? தொடர் – 06
தன்னம்பிக்கையை இழந்தால் நம் சுயமதிப்பை இழக்க நேரிடும். வாழ்க்கையில் எவ்வகைச் சூழலிலும் நின்று போராடுவதற்கு மனவலிமை அவசியம். உடல் வலிமை பெற்றவர்கள் எல்லாம் பலசாலி கிடையாது. தன்னம்பிக்கையுடன் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பணியாற்றுபவர்களே சிறந்த பலசாலிகள். எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையை மட்டும் நாம் இழக்கக்கூடாது.
இளங்கன்று பயமறியாது என்பது போல சிறுவர்கள் இயல்பாகவே தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பெரியவர்களாகிய நம்முடைய குறுக்கீடுகள், கேலி கிண்டல்கள், தவறான ஒப்பீடு நிறைந்த மதிப்பீடுகளின் வெளிப்பாடு, தவறான கற்பிதங்கள் போன்றவை உள் நுழையாத வரை சிறுவர்களின் உலகம் தன்னம்பிக்கையுடன் உறுதியானதாக இருக்கும். இது சமூகத் தொடர்புகளை அதிகமாக உணரவைக்கும். நாம் சிறுவர்களுக்கு எவ்வகையில் தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறோம் என்பதில் தான் அவர்களின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் இருக்கிறது.
தன்னம்பிக்கை குறைந்தால் சிறுவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். தாழ்வு மனப்பான்மையும், சோர்வு உணர்வும் துளிர்க்கும்.நம்மைப் பற்றியும், நம் சமூகத்தினைப் பற்றியும் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். எனவே இவற்றிலிருந்து வெளிவர தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய உரையாடல்களும், கதைகளும் சிறார்களுக்கு அவசியம் தேவை. தன்னம்பிக்கை குறைந்தால் சூழல்களை சமாளிக்கும் திறன் குறைவதோடு, சிறுவர்கள் சமூக பொருத்தப்பாடற்ற சூழலுக்குத் தள்ளப்படுவார்கள்.

தன்னம்பிக்கை குறையும் இடத்தில் பதட்டமும், அச்ச உணர்வும் ஏற்படும். எனவே சின்னச் சின்ன வெற்றிகளையும் கொண்டாடக் கூடிய உரையாடல்களைக் கதைகளின் வழிக் கடத்தலாம்.
தன்னம்பிக்கை இல்லையென்றால் தோல்வி பயம் சிறார்களிடம் மிக எளிதில் வந்தடையும். நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கும். இவையெல்லாம் சிறுவர்களிடையே தன்னம்பிக்கையைக் குறைக்கும்.
சிறுவர்களுக்கு இளம்வயதிலேயே தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது அவர்களுக்கு சொல்லப்படும் கதைகளின் வழி கொடுக்கப்படுவது நம் ஒவ்வொருவரின் கடமை. பெற்றோர்கள், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், நண்பர்கள் இப்படி தன்னைச் சுற்றியுள்ளவர்கள் என பல்வேறு விதமான சூழலில் சிறுவர்கள் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தன்னம்பிக்கை எனும் உளவியல், குழந்தை பருவத்திலேயே தோன்றிவிடுகிறது.
தொடரும் …
— கார்த்திகா கவின்குமார், எமுத்தாளர், கதைசொல்லி







Comments are closed, but trackbacks and pingbacks are open.