பாரம்பரியச் சடங்குகளில் ஆண் பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் இடையே காட்டப்படும் வேறுபாடுகளைக் குழந்தைகள் எளிதில் உணரும் வகையில் கதையமைக்கலாம்.
கேள்வி கேட்கும் கதாபாத்திரங்கள்:
“அண்ணனுக்கு இல்லாத கட்டுப்பாடு எனக்கு ஏன்?” அல்லது “ஏன் என்னை மட்டும் தனியாக உட்கார வைக்கிறீர்கள்?” என்று கதை மாந்தர்கள் இயல்பாகக் கேள்வி கேட்பது போல் எழுத வேண்டும்.
ஆரோக்கியமான விவாதம்:
பெற்றோரோ அல்லது பெரியவர்களோ குழந்தைகளை அடக்காமல், அன்போடு உரையாடித் தவறான பழக்கங்களை மாற்றிக்கொள்வது போல் கதையை நகர்த்தலாம்.
தனிமைப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்த்தல்:
பூப்படைதல் சடங்கின் போது பெண் பிள்ளைகளைத் தனியறையில் அடைப்பது, பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது அல்லது விளையாட விடாமல் தடுப்பது போன்ற பழக்கவழக்கங்கள் அவர்களின் உளவியலைத் தாக்குகின்றன.
சுதந்திரத்தின் முக்கியத்துவம்:
சடங்குகள் என்ற பெயரில் ஒரு சிறுமியின் கல்வி, விளையாட்டு அல்லது இயல்பு வாழ்க்கை முடக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.
சமத்துவமான சூழல்:
பெண் குழந்தைகள் தங்கள் விருப்பப்படி சுதந்திரமாக இருக்கவும், தங்களின் அன்றாட வேலைகளைத் தடையின்றித் தொடரவும் உரிமை உண்டு என்பதை உணர்த்த வேண்டும்.
சிறுவர்களையும் (ஆண் பிள்ளைகளையும்) கதையில் உரையாட வைத்தல்:
பாலின சமத்துவம் என்பது பெண் பிள்ளைகளுக்கானது மட்டும் அல்ல; ஆண் பிள்ளைகளுக்கும் இதில் சம பங்கு உண்டு.
புரிதலை உருவாக்குதல்:
கதையில் வரும் சகோதரனோ அல்லது ஆண் நண்பனோ, பருவம் அடைதல் மற்றும் மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று என்பதைப் புரிந்து கொண்டு, ஆதரவாக நடப்பது போல் சித்தரிக்க வேண்டும்.
கேலி செய்வதைத் தடுத்தல்:
பெண் பிள்ளைகளின் உடல் மாற்றங்களைக் கேலி செய்யாமல், அவர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் அளிக்கும் பண்பை ஆண் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.
நேர்மறையான சொல்லாடல்கள் மற்றும் எளிய மொழிநடையில் கூறுதல் :
“தீட்டு”, “அசுத்தம்” போன்ற எதிர்மறையான அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சொற்களைத் தவிர்த்து, “வளர்ச்சி”, “ஆரோக்கியம்”, “இயற்கை” போன்ற நேர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.
சுவாரசியமான கதைப்போக்குகள் :
வண்ணமயமான சித்திரங்கள், நகைச்சுவை, மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் வழியாகக் கருத்தைச் சொல்லும்போது குழந்தைகள் அதை எளிதில் ஏற்றுக்கொள்வார்கள்.
உதாரணமாக, கதையின் நாயகி கயல் 12 – வயது உடையவள். ஓடிப் பிடித்து விளையாடும் சுட்டிப்பெண். அவளுக்கு உடலில் இயல்பான மாற்றங்கள் நிகழ்கின்றன. அவள் பூப்படைந்ததும் வீட்டில் பெரியவர்கள் கூடி, அவளைப் பள்ளிக்கு அனுப்பாமல் தனியறையில் அடைக்க முயல்கிறார்கள்.
கயல் தன் தாயிடமும் பாட்டியிடமும் இது இயற்கை அளிக்கும் வளர்ச்சிதானே, அதற்கு ஏன் தண்டனை என அன்பாகக் கேள்வி கேட்கிறாள். அவளது அண்ணனும் அவளுக்கு ஆதரவாகப் பேசுகிறான்.
முடிவில் பெரியவர்கள் தங்கள் தவறையும்,சடங்கின் மூடநம்பிக்கையையும் உணர்கிறார்கள். கயல் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று தன் கனவுகளைத் தொடர்கிறாள்.
பெண் பிள்ளைகளின் உடல் சார்ந்த சடங்குகளைப் பற்றிச் சிறுவர் கதைகளில் எழுதும்போது, பாரம்பரியத்தை அடியோடு எதிர்ப்பதாகக் காட்டாமல், அறிவியல் உண்மை, மனித உரிமை, மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மூடநம்பிக்கைகளைத் தகர்ப்பதாக இருக்க வேண்டும். இத்தகைய கதைகள் பெண் குழந்தைகளுக்குத் தங்களைப் பற்றிய சுயமரியாதையையும், ஆண் குழந்தைகளுக்குப் பாலினப் புரிதலையும் ஒரே நேரத்தில் உருவாக்கும்.
— கார்த்திகா கவின்குமார்






Comments are closed, but trackbacks and pingbacks are open.