சிறார் இலக்கிய முன்னோடி
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா (1922 – 1989) தமிழ் குழந்தை இலக்கிய உலகின் பிதாமகர் என்று போற்றப்படுபவர். ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும், 55-திற்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தம்முடைய எழுத்துத் திறமை அனைத்தையும் குழந்தை இலக்கியம் படைப்பதிலேயே செலவிட்டார். பல குழந்தை எழுத்தாளர்கள் உருவாகவும், வளரவும் முக்கிய காரணமாக இருந்தார். குழந்தைகளுக்கு எழுதுபவர்களை ஒன்று சேர்த்து 1950ஆம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம் நிறுவினார். 16 ஆண்டுகளுக்கு மேலாக 5 சிறுவர் பத்திரிகைகளின் பொறுப்பாசிரியராக இருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரம் என்னும் சிற்றூரில் 1922-ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் அழகப்ப செட்டியார் – உமையாள் ஆச்சி. உள்ளூரில் சு.கதி. காந்தி ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றார். பிறகு ராமச்சந்திரபுரத்திலுள்ள ஸ்ரீ பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப் பள்ளியில் 11வது வகுப்பு வரையில் படித்தார்.

பின்னர் பேராசிரியர்கள் கு.மதுரை முதலியார், இளவழகனார், டாக்டர் இராசமாணிக்கனார் ஆகியோரிடம் சில காலம் தமிழ் பயின்றார். அவரது 13 – ஆம் வயதில் கவிதை எழுதத் தொடங்கினார்.
1940 ஆம் ஆண்டில் ‘சக்தி’ அலுவலகத்தில் பொருளாளராகச் சேர்ந்தார்.
1941 – 1982 வரை இந்தியன் வங்கியில் பணியாற்றி காரைக்குடி வட்டார மேலாளராக ஒய்வு பெற்றார்.
இந்தியன் வங்கியின் அனுமதியோடு Ford Foundation நிறுவிய தென்மொழிப் புத்தக டிரஸ்டின் குழந்தைப் புத்தக சிறப்பு அலுவலராக 1957 – 1962 வரை பணிபுரிந்தார்.
பொறுப்பாசிரியராக இருந்த பத்திரிகைகள்
1944 – 1951 புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘பாலர்மலர்’, ‘டமாரம்’, ‘சங்கு’
1951 முதல் 1954 ‘பூஞ்சோலை’
1983 முதல் 1989 கல்கி நிறுவனத்தின் சிறுவர் மாத இதழான ‘கோகுலம்
தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும், கேரளம், கர்நாடகம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்றநாடுகளில் வெளியான நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் இவரது பாடல்களும், நாடகங்களும் இடம் பெறுகின்றன.
இவருடைய வாரிசுகளில் ஒருவரான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருதாளர் எழுத்தாளர் முனைவர் தேவி நாச்சியப்பன் அவர்கள் சிறார் இலக்கியத்தில் தொடர்ந்து தடம் பதித்து வருகிறார்.
சிறார் திரைப்படக் கட்டுரைகள்
என் அப்பாவின் டிராகன் – ஆசிரியர் – ஞா.கலையரசி
இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது.
குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அரிவாள் வெட்டு, கொலை, கொள்ளை போன்ற வன்முறைக்காட்சிகள் நிறைந்த பெரியவர்களுக்கான தமிழ்த் திரைப்படங்களையே, நம் குழந்தைகளும் பார்க்கிறார்கள். இம்மாதிரியான வன்முறைக்காட்சிகள் அவர்கள் மனதில் வன்மத்தையும், வெறுப்பையும் விதைக்கின்றன. எனவே சிறந்த சிறார் திரைப்படங்களைத் தேர்வு செய்து, குழந்தைகளுக்குக் காட்ட வேண்டியது நம் கடமை.
“13 சிறார் திரைப்படங்கள் பற்றிய அளவான அறிமுகம். ஒரு நாவலைப் படிப்பதைப் போல இருந்தது, ஒவ்வொரு கட்டுரையும். ஏனெனில் பெரும்பாலான படங்கள், ஒரு சிறார் நாவலைத் தழுவியே எடுக்கப்பட்டிருக்கும். இதனை வாசிக்கும் சிறுவர்கள் முதலில் இந்தப் படங்களைத் தேடிப் பார்ப்பார்கள். கூடவே அந்த நாவல்களையும் தேடிப் படிப்பார்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் வாசித்து விருப்பமான திரைப்படங்களைத் தங்கள் குழந்தைகளுக்குப் போட்டுக் காட்ட, இது ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக அமைந்துள்ளது” என்று தம் முன்னுரையில் சிறார் எழுத்தாளர் விழியன் பாராட்டியுள்ளார்.
‘காற்றை வசப்படுத்திய சிறுவன்’ என்பது முதல் கட்டுரை. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டைச் சேர்ந்த வில்லியம் கம்குவாம்பா என்ற சிறுவன் செய்த சாதனையை இப்படம் விவரிக்கின்றது.
‘சார்லியும் சாக்லேட் தொழிற்சாலையும்’ என்பது இரண்டாவது திரைப்படக்கட்டுரை. இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஆங்கிலச் சிறார் எழுத்தாளர் ரோல் தால் (Roald Dahl) எழுதிய ‘Charlie and the Chocolate Factory’ என்ற பிரபல நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதே எழுத்தாளர் எழுதிய ‘மட்டில்டா’ நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் குறித்து மூன்றாவது கட்டுரை பேசுகின்றது. இரண்டு சிறந்த ஈரானியப் படங்கள் குறித்த கட்டுரைகள் இதிலுள்ளன.
உலகளவில் பிற மொழிகளில் வெளிவந்த சிறந்த சிறார் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் இந்நூல், சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்க மிகவும் உதவும்.
— கார்த்திகா கவின்குமார்







Comments are closed, but trackbacks and pingbacks are open.