தேசிய அங்கீகாரத்தை இழந்த கம்யூனிஸ்டுகள் !
கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேசிய அங்கீகாரத்தை ஏன் இழந்தன என்பதற்கான ஆராய்ச்சி கட்டுரைகளை நானும் இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன். பிபிசி தவிர வேறு எதிலும் கட்டுரைகள் கிடைக்கவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேசிய அங்கீகாரத்தை இழந்ததற்கு ஒட்டுமொத்தமாக சொல்லப்படுகின்ற மிக முக்கிய காரணம் பொருளாதார மாற்றங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.
மேற்கு வங்கம் மாதிரியான மாநிலத்திலும் திரிபுராவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 25 வருடங்களுக்கும் மேலாக ஆண்டு இன்று முற்றிலும் காணாமல் போனதற்கான காரணங்களோ உண்மையோ யாரும் பெரிதாக விவாதிப்பதில்லை. அரசியல் ஆய்வாளர்கள் இதுகுறித்து பெரிய அளவில் ஏதேனும் ஆய்வு கட்டுரைகள் கொடுத்திருக்கிறார்களா என்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எனக்கு கிடைக்கவில்லை.
அதேதான் திராவிட கட்சியான திமுக தனது அந்தஸ்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதற்கான காரணம் சரியான தலைவர் இல்லை என்பது மட்டுமில்லை. கட்சி உள் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது என்பதை திமுக புரிந்து கொள்ளவில்லை என்பதும் தான்.
குறிப்பாக சாதிய பலம் கொண்ட தலைவர்களை தாண்டி அங்கு வேறு தலைவர்கள் உருவாக முடிவதில்லை. பெண்களுக்கு சிறிதளவு கூட இடமில்லை. இளைஞர்களை கட்சிக்குள் அடுத்த கட்டத்துக்கு கொண்டு வர வேண்டும் என்கிற சிந்தனை இல்லாத எந்த கட்சியுமே அதன் அந்தஸ்தை இழக்க வேண்டி வரும். இது அதிமுகவுக்கும் பொருந்தும்.
அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளாத எந்த கட்சியுமே தன்னுடைய அந்தஸ்தை இழக்க வேண்டிய சூழல் உலகம் முழுவதும் இருக்கிறது என்பது மட்டுமே உண்மை.
— நாச்சியாள் சுகந்தி






Comments are closed, but trackbacks and pingbacks are open.