அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சங்குத்தொழிலில் முஸ்லீம்கள் !

இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் !பாகம் – 06

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இந்திய கடலோரங்களில் சங்குத் தொழில் எப்படி அறிமுகமானது என்பதை கடந்த தொடரில் பார்த்தோம். இந்த தொழிலில் முஸ்லீம்கள் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதை சற்றே விரிவாக பார்ப்போம்.
4.3 சங்குத்தொழிலும், முஸ்லீம்களும்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரபியர்களும், பாரசீகர்களும் தென் இந்தியா கடற்கரை நகரங்களில் வாணிபம் செய்து வந்துள்ளனர். இதுபற்றிச் சங்க இலக்கியங்களில் கூறப்படும் யவனர்கள் பெரும்பாலும் அரபியர்களையும் பாரசீக வளைகுடாவிலிருந்து வந்தவர்களையும்குறிக்கும். இவர்களுடன் கிரேக்கர்களும், ரோமானியர்களும் அடங்குவர் என்று கூறுபவர்களும் உண்டு. இந்த அரபியர்கள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் முத்து, பவளம், தந்தம், துணிமணிகள், மசாலா பொருட்களை வாங்குவதுடன் இந்தியாவிலுள்ள பல துறைமுகங்களுக்கு வரும் கடல் மார்க்கத்தையும் கண்டும் அறிந்தும் வைத்திருந்தினர்.
இஸ்லாம் முகம்மது நபி (ஸல்) அவர்களால் சீரமைக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய அரபிகள், இந்தியக் கடலோரப் பகுதிகளில் வந்திறங்கி வியாபாரம் செய்தவர்களில் பலர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு நிரந்தரமாகக் குடியேறியுமுள்ளனர். இவர்களின் பண்பான வாழ்க்கை முறை பார்த்துப் பல இந்துக்கள் இஸ்லாமிய நெறியைத் தழுவினார்கள். இவ்வாறு கடலோரப் பகுதியில் குடியேறியவர்கள் தான் இந்தியாவின் ஆரம்ப முஸ்லீம்கள். இவர்களை “சோனர்கள்” என்று அழைத்தனர். சங்க இலக்கியத்திலுள்ள யவனர்கள் தான் சோனர்களாக மாறியதாகவும் அல்லது யவனர்கள் என்பது ஏமன் பகுதியைக் குறிப்பதாகவும் கூறுவர். சிலர் அரபியில் “சோனா” என்று அழைக்கப்படும் தங்கத்தைக் கொடுத்து இந்தியப் பொருள்களை வாங்கியதால் அவர்களைச் சோனர்கள் என்று அழைத்திருக்கலாம் என்றும் கூறுவர். இவர்கள் சுன்னத் ஜமாத்தையும் அதன் உட்பிரிவான ஷாபி மதகபுவையும் கடைபிடிக்கக்கூடியவர்கள்.
இவர்களின் கடல்மார்க்க வியாபார மூலமாக இந்திய மகா சமுத்திரத்தியுள்ள எல்லா நாடுகளிலும் வியாபாரம் செய்ததுடன், அதில் சிலர்அங்குள்ள பெண்களைத் திருமணம் செய்து நிரந்தரமாகவும் குடியேறினர். அதில் இந்தியாவின் கோவா பகுதியில் வாழும் “நவயாத்” முஸ்லீம்கள், கூர் பகுதியில் வாழும் “கோடாவா மாப்பிள்ளை” முஸ்லீம்கள், மலபார் (கேரளா) கடலோரப் பகுதியில் வாழும் மாப்பிள்ளை முஸ்லீம்கள், கர்நாடகா மங்களூர் பகுதியில் வாழும் “பியரி” முஸ்லீம்கள் மற்றும் மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் சிந்து அரபிக்கடலோர பகுதிகளிலும், தமிழ்நாடு, ஆந்திரா, வங்காளம், இலங்கை, மாலத்தீவு, பர்மா, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மேற்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் குடியேறி கடல் வாணிபம் செய்து வந்துள்ளனர். இவர்களின் சிறந்த வாழ்க்கை நெறியால் அங்கு வாழும் மக்கள் இஸ்லாத்தைத் தொடர்ந்து தழுவிக்கொண்டிருந்தனர்.
இந்தச் சோனகரில் சிலர் பணம் படைத்தவர்களாகவும், பல மரக்கலங்களை வைத்திருந்து, பல நாடுகளில் வியாபாரம் செய்தவர்களை “மரைக்காயர்” என்றும் அழைத்தனர். இன்னும் சிலர் இவர்கள் மொரோக்கோ நாட்டிலுள்ள “மரக்கேஷ்” என்ற இடத்திலிருந்து வந்ததால் இவர்களை மரக்காயர் என்று அழைக்கப்பட்டனர் என்றும் கூறுவர்.
கடலோரப் பகுதியில் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்கள் கடலையும், கடல் சார்ந்த தொழிலையும் தங்கள் வாழ்விற்கும், பொருளாதாரத்திற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் மீன் பிடித்தல், முத்து, பவளம், சங்கு குளித்தல் அது சம்பந்தப்பட்ட வியாபாரம் பல நாடுகளுடன் செய்தும் வந்துள்ளனர். இதில் சோழ மண்டலத்தைச் சார்ந்த மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தியில் கிடைக்கும் சங்குகள் மிக முக்கிய அங்கம் வகித்தது. இஸ்லாமிய அரபிகள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் காலடி வைத்தவுடனே அவர்களின் சங்கு தொழில் அதாவது சங்கு எடுப்பது, விற்பது தொடங்கிவிட்டது. இவர்களின் வருகைக்கு முன், மீன் பிடித்தல், முத்து, பவளம், சங்கு எடுப்பது, விற்பதில் மும்முரமாக இருந்தவர்கள் கடலோரம் பகுதியில் வாழ்ந்து வந்த பறவர்களும், கரையர்களும் தான். இவர்களில் பலர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவி அவர்களும் அரேபியர்களுடன் சேர்ந்து சங்கு குளிப்பது, பதனிடுவது மற்றும் விற்பதில் ஈடுபட்டனர்.
மரைக்காயர்களைத் தவிர மற்ற முஸ்லீம்களும், பறவர்களும் கூட சங்கு குளிக்கும் தொழிலாளர்களாக மாறிய பின்னணி குறித்து அடுத்த தொடரில் உரையாடுவோம்.
தொடரும் …

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.