கூட்டுறவு சங்க கடன் வசூல் நெருக்கடி – பலியான கரூர் விவசாயி !
கூட்டுறவு சங்க ஊழியர்களின் கடன் வசூல் நெருக்கடியால் கரூரில் விவசாயி திரு. கந்தசாமி மாரடைப்பால் மரணம் – தமிழ்நாடு அரசு உடனடியாக காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்தும் – துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் – பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.
கரூர் மாவட்டம், வாங்கல், முனியப்பனூரை சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி, அவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூட்டுறவு பயிர் கடன் பெற்றுள்ளார்.
தொடர்ச்சியாக உரிய விலை கிடைக்காததால் நஷ்டம் அடைந்ததால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.
அவருக்காக தனி நபர் ஜாமீன் அளித்த சிவசாமி f/o சரத்குமார் என்கிற விவசாயியாலும் கடனை செலுத்த இயலவில்லை.
மேலும் தற்போதைய தமிழ்நாடு அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தில் அந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கடன் தள்ளுபடியும் கிடைக்கவில்லை.
கூட்டுறவுத் துறையில் விவசாயிகளிடம் கடன் வசூல் நெருக்கடி என்பது கடந்த 30 ஆண்டுகளாக இல்லை.
ஆனால் தற்போது கடந்த இரண்டு மாதங்களாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் விவசாயிகளை தொடர்ந்து தினசரி அலைபேசியில் அழைத்து கடனை கட்ட சொல்லி நெருக்கடி கொடுப்பது, கடன் வசூல் அறிவிப்புகளை அனுப்புவது, சொத்துக்களை ஜப்தி செய்வதாக சொல்லி மிரட்டுவது, நான்கு பேரோடு சென்று விவசாயிகள் வீட்டுக்கே சென்று கடனை கட்ட சொல்லி நெருக்கடி கொடுப்பது என பல்வேறு வகைகளில் கடன் வசூல் நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள்.
அவர் கடன் பெற்றுள்ள R – 162 – நெரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சேர்ந்த ஊழியர்கள் அவருக்கு ஜாமீன் அளித்த திரு. சிவசாமி என்கிற விவசாயியை 20க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்களை திரட்டி கொண்டு சென்று பொதுவெளியில் வைத்து மிகக் கடுமையாக ஏளனப்படுத்தியுள்ளார்கள்.
மரணம் அடைந்த விவசாயி கந்தசாமி வீட்டிற்கும் சென்று நெருக்கடி கொடுத்துள்ளார்கள்.
இதனால் மிக கடுமையான மன உளைச்சலிலும் வேதனையிலும் விவசாயிகள் கந்தசாமியும் – சிவசாமியும் இருந்து உள்ளார்கள்.
மேலும் சிவசாமி அவர்களுக்கு ₹10 ஆயிரம் ரூபாய்க்கு கூட்டுறவு சங்க ஊழியர்களே ரசீது போட்டுக் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் முதல் ரசீதை வாங்கி விட்டாய் அல்லவா, உடனடியாக கடனை கட்டு என நெருக்கடி கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் தங்களின் மன வேதனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பி நியாயம் கேட்பதற்காக திருச்சி சமயபுரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கொடுத்த உத்தரவாதத்தின்படி கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து நடத்திய தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கிராம மக்களோடு வாகனத்தில் வரும் வழியில் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கந்தசாமி அவர்கள் இறந்துள்ளார்.
அவரது இறப்புக்கு காரணம் கடந்த இரண்டு மாத காலமாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் கொடுத்து வந்த தொடர் நெருக்கடிதான் காரணம் என கிராமத்து மக்கள் உறுதியுடன் தெரிவிக்கிறார்கள்.
எனவே விவசாயி கந்தசாமியின் அகால மரணத்திற்கு காரணமான கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது காவல்துறை மூலமாக உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திடவும் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்திடவும், நாட்டு மக்களுக்காக லாப நஷ்டம் பாராமலும் – அரசிடமிருந்து சம்பளம் ஓய்வூதியம் என எதுவும் இல்லாமல் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக உணவு உற்பத்தி செய்ததற்காகவும் கூட்டுறவு சங்க ஊழியர்கள் கொடுத்த நெருக்கடியாலும் ஏளனம் செய்த மன உளைச்சலாலும் போலி ரசீது கொடுத்து மிரட்டியதாலும் மரணம் அடைந்த கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்காகவும் ஒரு கோடி ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக வழங்கிட வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
வழக்கறிஞர் ஈசன் முருகசாமி
நிறுவனர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்






Comments are closed, but trackbacks and pingbacks are open.