பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகளில் மிகவும் முக்கியமானது சர்க்கரை நோய். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
Dr. அ.வேணி MD., DM (NEURO)
மூளை நரம்பியல் நிபுணர்.
சர்க்கரை நோயாளிகள் முதலில் கவனிக்க வேண்டியது உணவு மற்றும் உடற்பயிற்சி. எதை உண்ணலாம் என்று தெரிந்து வைத்திருப்பதை விட, பல மடங்கு முக்கியம் எதை உண்ணக்கூடாது என்பதை தெரிந்துகொள்வது தான். மைதா, பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து நமது பாரம்பரிய உணவுகளை உட்கொண்டோமேயானால் சர்க்கரை வியாதியினால் வரும் பின்விளைவுகளை குறைத்துக் கொள்ளலாம்.
குதிரை வாலி, சாமை மற்றும் கேழ்வரகு இவற்றை அதிகமாக உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவை ஓரளவு கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். பூமிக்கு கீழ் விளையும் கிழங்கு வகைகளை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், இதில் கார்போஹைட்ரேட் அளவு சற்று அதிகமாக உள்ளது. பழங்களில் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், தர்பூசணி ஆகிய நான்கு பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்கள் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு அவ்வளவாக அதிகரிப்பதில்லை.
இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலானோரின் மனநிலையில் தவறான சில மாற்றங்கள் இருப்பதை என்னால் உணர முடிகிறது. நாம் நன்றாக ஆரோக்கியமாக வாழ்வதற்காகத் தான் உணவு உண்கிறோம் என்பதையை மறந்து, ‘இதைக் கூட சாப்பிடாமல் வாழ்வது என்ன வாழ்க்கையா!’… என்ற மனநிலை பெரும்பாலான மக்களிடையே அதிகரித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது.
மனதையும், உணவுப் பழக்கத்தையும் நெறிப்படுத்தாமல், நாம் வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழ வேண்டும் என மனக்கோட்டை கட்டுவதால் பலன் ஒன்றும் இல்லை.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”
ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்ததை அறிந்து பின்பு உண்டானாயின் அவன் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்று வேண்டுவதில்லை என்ற திருவள்ளுவரின் கூற்றுக்கு இனங்க, “பசிக்காமல் எதையும் உண்ண மாட்டேன்” என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும்.
பொரும்பாலான சர்க்கரை நோயாளிகள் மாத்திரை உட்கொண்டுவிட்டால் மட்டும் போதும் என நினைக்கிறார்கள். மாத்திரை மற்றும் உணவுக்கட்டுப்பாடு மட்டுமே சர்க்கரையின் அளவைக் குறைப்பதில்லை. நாம் நமது இன்சுலின் சுரப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்ய உடற்பயிற்சி அவசியம். எனவே, சர்க்கரை நோயாளிகள் நான் கீழே குறிப்பிடும் 10 விஷயங்களை உறுதிமொழியாக எடுத்து செய்யவேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
1. பசிக்காமல் உணவு உண்ண மாட்டேன்.
2. இரத்தத்தின் சர்க்கரை அளவை மிக விரைவாக அதிகரிக்கும் பொருட்களை எடுத்துக் கொள்ளமாட்டேன்.
3. உணவு அருந்துவதற்கு முன் சர்க்கரை மாத்திரை அல்லது இன்சுலினை தவறாமல் எடுத்துக்கொள்வேன்.
4. தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ அல்லது அலைபேசியில் உரையாடிக் கொண்டோ உணவருந்தாமல், உணவின் மீது கவனம் செலுத்தி நன்றாக மென்று விழுங்குவேன்.
5. தினமும் இரவில் 8 மணி நேரம் உறங்குவேன்.
6. பகலில் 30 நிமிடத்திற்கு மேல் உறங்கமாட்டேன்.
7. தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன்.
8. மனஅழுத்தம் தரக்கூடிய செயல்களை செய்ய மாட்டேன்.
9. எனது வேலைகளை நானே செய்து கொள்வேன்.
10. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் மற்ற உறுப்புகளின் செயல்கள் குறித்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவேன்.
இந்த பத்து விஷயங்களை செய்தாலே போதும் சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொண்டு ஆரோக்கியத்துடன் மகிழ்வோடு வாழலாம்.
சர்க்கரை நோயளிகளின் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.