பெயருக்குள் பொதிந்திருக்கும் எண் பொருத்தத்தில் மேலை நாட்டவர்களும் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில், மூன்றெழுத்து இரகசியம் (எம்.ஜி.ஆர்.) ஜோதிட உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதாவது, மருதூரைக் குறிக்கும் M எழுத்தையும் தகப்பனாரான கோபாலமேனனின் முதல் எழுத்தான G எழுத்தையும் இராமச்சந்திரன் என்கின்ற தனது முதல் எழுத்தான R ஐயும் ஒன்றிணைத்து M.G.R. என்று தனது பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொண்டவர். இப்பெயர்ச் சுருக்கத்தின் அதிர்ஷ்ட பலனே அவரது அனைத்து வெற்றிகளுக்கும் உறுதுணையாக அமைந்திருந்தது என்று ஜோதிட உலகில் வியப்புடன் பேசப்படுகிறது. “
நல்லவர்கள் மரித்தாலும் அவர்கள் நாமத்தையும் புகழையும் காலம் அழிப்பதில்லை என்ற கூற்றுக்கு இலக்கணமாகத் திகழ்பவர்
எம்.ஜி. இராமச்சந்திரன்.
ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சட்டவிதிகளையும் மீறி ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த சரித்திர நாயகனான இவர், தமிழக மக்கள் மனதில் மட்டுமன்றி உலக மக்கள் மனதிலும் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறார். இவரின் புகழை எந்தக் காலத்திலும் எவராலும் எட்டிவிட முடியாது.
இந்தியாவிலுள்ள கேரளாவிலிருந்து வந்து ஈழவள நாட்டின் கண்டிமா நகரிலே குடியிருந்த மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியவதி அம்மையாருக்கும் 17.01.1917ஆம் ஆண்டு கடைக்குட்டியாக எம்.ஜி. இராமச்சந்திரன் பிறந்தார். இவருடைய உண்மைப் பெயர் ராம்சந்தர் நாயர். இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கவே ஈழத்தினின்றும் தமிழகத்திற்குத் தன் பிள்ளைகளுடன் குடிபெயர்ந்த அன்னை சத்தியவதி, வறுமையின் கோரப்பிடியில் வாடினார். பிள்ளைகளுக்கு ஒருநேரக் கஞ்சி ஊற்றவே கதியற்றுக் கலங்கினார். இதனால், எம்.ஜி.ஆர். 3ஆம் தரத்துடன் கல்விக்கு முழுக்குப் போட்டார்.
அன்னை தான் தெய்வம் என நினைந்து, தாய் சொல் தட்டாத உத்தமபுத்திரனாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தன் அன்னை வறுமையால் வாடுவதைச் சகிக்க முடியாத இவர், தனது 7ஆவது வயதில் அண்ணன் சக்ரபாணியுடன் இணைந்து நாடக மன்றங்களில் நடித்து வந்தார்.
பின்னர் 19ஆவது வயதில் ‘சதிலீலாவதி’ எனும் திரைப்படத்துடன் திரையுலகில் காலடி பதித்தார். தனது 30ஆவது வயதில் அதாவது, 1947ஆம் ஆண்டு ‘ராஜகுமாரி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்துப் பெற்றார். எனினும், வறுமை அவரை விட்டுப் போவதாக இல்லை.
இவ்வுலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற கார்ல் மார்க்ஸின் தத்துவத்திற்கிணங்க எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் மாற்றம் வந்தது. 30 வயதுக்கு மேல் ‘சந்திரோதயம்’ 40இற்கு மேல் ‘சூரியோதயம்’ என்று சடுதியாகத் திரையுலகில் வளர்ந்தார், இமயமென உயர்ந்தார்.
அறிஞர் அண்ணாவின் நிழலில் அருமைத் தம்பியாக வளர்ந்த இவர், நன்றி மறவாத நல்மனம் படைத்தவராகக் கடைசிவரை வாழ்ந்தார். தனது திரைப்பாடல்கள் மூலம் அண்ணாவை அவர் போற்றிவந்தார். எம்.ஜி.ஆர், தமிழகத்தில் முதலமைச்சராகிய முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர். பெரியார் வழி நின்று, பெருந்தலைவர் காமராஜர் கொள்கையைப் பின்பற்றி ஏழைகள் வாழ்வு ஏற்றம் காண உண்மையாக உழைத்த உத்தமரான எம்.ஜி.ஆர், ஏழைகளுக்குக் கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்தவர்.
“காலத்தை வென்றவன் நீ, காவிய நாயகன் நீ…” என்று அடிமைப்பெண் திரைப்படத்தில் ஜெயலலிதா பாடி நடித்தது போன்று எம்.ஜி.ஆர். காலத்தை வென்று வாழ்கிறார்.
– தொடரும்