குடிநீர் பிரச்சனை… பின்னணியில் “பண்ணையார் அரசியலின் ஜாதி கணக்கு ”
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குடிநீர் பிரச்சனையை மையமாக கொண்டு உருவான போராட்டம், தற்போது அரசியல் மற்றும் சமூக பதற்றங்களுடன் கூடிய பரபரப்பான சூழ்நிலையாக மாறியுள்ளது.
சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை அருகே இனாம் மீனாட்சிபுரத்தில், நீண்ட நாட்களாக குடிநீர் வழங்கப்படாததை எதிர்த்து 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் கழுகுமலை மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. “அடிப்படை தேவையான தண்ணீரையே வழங்க முடியவில்லை” என மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
அரசியல்–சமூக நிழல்கள்
இந்த பிரச்சனை, சாதாரண குடிநீர் தட்டுப்பாட்டைத் தாண்டி அரசியல் மற்றும் ஜாதி சார்ந்த கோணத்தில் பார்க்கப்படத் தொடங்கியுள்ளது. சாத்தூர் தொகுதியில் கடும் அரசியல் போட்டி நிலவி வரும் நிலையில், சில தரப்பினர் சமூக அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் ஜாதி பதற்றத்தை சுட்டிக்காட்டி, “இது மற்ற பகுதிகளுக்கும் பரவுமா?” என்ற அச்சமும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. மேலும், ஒரு முக்கிய கட்சி வேட்பாளர் தொடர்பாக, “இந்த பதற்றத்தை மற்ற இடங்களிலும் தூண்டும் முயற்சி நடக்கிறதா?” என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
அதே நேரத்தில்,“பண்ணையார் சாத்தூரிலும் தனது அரசியல் ஜாதி வேலைப்பாட்டை தொடங்கியிருக்கிறாரா?” என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் பிரச்சனை – புதிய சர்ச்சை
குடிநீர் மோட்டார் பழுதை அரசு அமைப்புகளை தவிர்த்து, சில அரசியல் சார்ந்தவர்கள் நேரடியாக சரிசெய்து தண்ணீர் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், “தேர்தல் நேரத்தில் இது வாக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியா?”என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
காவல்துறை தலையீடு
போராட்டம் தீவிரமடைந்தபோது, ஒரு தரப்பினர் வாகனத்தில் இருந்து ஆபத்தான பொருட்களுடன் வந்ததாக தகவல் வெளியாகி, காவல்துறை அவற்றை துரிதமாக பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்.
மேலும், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த மத்திய மாவட்ட செயலாளர், தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதுடன், காவல்துறை கண்காணிப்பில் உள்ளவராகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால்,
“அவர் எப்படி சம்பவ இடத்திற்கு வந்தார்?”
“அவரது வாகனம் பறிமுதல் செய்யப்படுமா?”
“மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படுமா?”
என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு பின்னர், நேற்று இரவு மீண்டும் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுவதால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, சிவகாசி காவல்துறை கண்காணிப்பாளர் ஆனில் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் மற்றும் சில தரப்பினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இதனால் மக்களிடையே அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.
மேலும், “இந்த பிரச்சனையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால், அடுத்தடுத்து கடுமையான வன்முறை சம்பவங்கள், படுகொலைகள் போன்ற நிலைகள் உருவாகும் அபாயம் உள்ளது” என சில வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணியில் யார்?
இந்த முழு சம்பவத்திலும், பதற்றத்தை தூண்டும் வகையில் ஒரு முக்கிய நபர் பின்னணியில் செயல்படுகிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், சமூக ஓட்டுகளை உறுதிப்படுத்த ஓட்டுகளைப் பிரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால், “சொந்த சமூகத்தினருக்குள்ளேயே பதற்றம் அதிகரித்து, ஜாதி கலவரமாக மாறுமோ?” என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.
— அங்குசம் தேர்தல் குழு








Comments are closed, but trackbacks and pingbacks are open.