செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள், விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் மூலம் உரிய தொழில்நுட்பத்தினை கடைபிடித்து செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு திரு.சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஐந்து லட்சம் சிறப்பு பரிசு மற்றும் ரூபாய் ஏழாயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிக்கு குறைந்தபட்சம் 2ஏக்கர் நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ இருக்கலாம். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் இரகத்தை சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். மேலும் விவசாயி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும். இப்போட்டியில் பங்குபெறும் விவசாயிகளின் வயலில் குறைந்தபட்சம் 50 சென்ட் பரப்பளவில் பயிர் அறுவடை செய்யப்படும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதி கொண்ட விவசாயிகள் இப்போட்டியில்; பங்குபெற விரும்பினால் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் அட்டையுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை நேரில் அணுகி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவு கட்டணமாக ரூபாய் நூற்றுஐம்பது மட்டும் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டி நடுவர்கள் முன்னிலையில் பயிர் அறுவடை செய்யப்படும். வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குநர் அவர்களின் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்திடுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.