திருட்டு போன 80 சவரன் நகை, 141 செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு !
திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை பதிவு செய்யப்பட்ட திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட 09 கொள்ளை வழக்குகள் மற்றும் 32 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 64 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்த கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட 80 சவரன் நகைகள், ஒரு வைர மோதிரம், ஒரு ஜோடி வைர தோடு, பணம் ரூ.49,700/-ம், வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 08 இரு சக்கர வாகனங்கள். 02 நான்கு சக்கர வாகனங்கள். ஒரு லேப்டாப், வெள்ளி பொருட்கள், காணாமல் போன 141 செல்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் ஆகியவைகளை எதிரிகளிடம் இருந்து பறிமுதல் செய்தும், எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின் நீதிமன்ற ஆணை ញ (09.05.2026) ம் தேதி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப. மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து அந்தந்த காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் நகை மற்றும் பொருட்கள் இழந்த நபர்கள் வசம் திரும்ப ஒப்படைத்தார்.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட 41 வழக்குகளில் புலன் விசாரணையை விரைந்து நடத்தி குற்றவாளியை கைது செய்தும், பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் ஆகியோரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப வெகுவாக பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இதேபோல், கடந்த 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரை திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 8 குற்ற வழக்குகளில் திருட்டுபோன 37 சவரன் தங்க நகைகள் பணம் ரூ.30,000/-ம், வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 இரு சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் காணமால் போன 125 செல்போன்கள் ஆகியவற்றை நீதிமன்ற ஆணை பெற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இகாய, அவர்கள் கடந்த (18.10.2025) திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட புகார்தாரர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதேபோன்று நகைகள், பணம், வாகனங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவை திருடு போனது தொடர்பாக கொடுக்கப்படும் புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் வழக்கின் உண்மைதன்மையை கண்டறிந்து அவ்வழக்குகளில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்தும், வழக்கில் சம்பந்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து பின் நீதிமன்ற ஆணை மூலம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பொருட்களை இழந்த நபர்கள் வசம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்படி நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களிடையே குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், காவல் நிலையத்திற்கு நேரில் செல்ல முடியாமல் இருக்கும் மூத்தகுடிமக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அவர்களது ஆண்ட்ராய்டு மொபைலில் காவல் உதவி ஆப் -ஐ பதிவிறக்கம் செய்து அதில் உள்ள பட்டனை கிளிக் செய்வதன் மூலம் சம்மந்தப்பட்டவரின் விபரங்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும் உடனடியாக அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து புகார்தாரர் இருக்குமிடத்திலயே அருகில் உள்ள காவல் நிலைய காவலர்கள் வந்து புகார்களை விரைவாக பெற்ற கொள்வதால் பொதுமக்களின் சிரமங்களை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்
மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் CCTV அமைப்பதன் முக்கியத்துவத்தையும், வெளியூர் செல்லும்போது தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தெரியப்படுத்துவதன் மூலமும் திருட்டு சம்பவங்களை பெரும்பாலும் தடுக்க முடியும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் இழந்த பொருட்களை மீட்டு கொடுத்தமைக்காக காவல் துறையினரை பாராட்டி சென்றனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.