திருவிழாவுக்காக வேட்டையாடி குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குட்டி நரி ! துறையூர் ஷாக் !
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த அம்மாபட்டி கிராமத்தில் உள்ள செல்வ மாரியம்மன் கோவில் திருவிழாவில், கிராம முக்கியஸ்தர்கள் விழாக் குழுவினர் சேர்ந்து பாரம்பரிய முறைப்படி நரி வேட்டைக்கு சென்றுள்ளனர்.
சுமார் இரண்டு வயதிற்கு உட்பட்ட குட்டி நரியை வேட்டையாடி கொண்டு வந்து உள்ளனர். கோவில் சன்னிதானத்தில் வைத்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் குட்டி நரியை வைத்து ஆடிப்பாடி கொண்டாடினர்.
ஒரு கட்டத்தில் நரி விழா கமிட்டினர் கையில் சிக்கி இறந்துவிட்டது என தெரிகிறது. வழக்கம்போல் திருவிழா முடிந்தவுடன் நரியை கொண்டு சென்று காட்டில் விடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
ஆனால், நரி வேட்டையில் கொண்டு வந்த குட்டி நரி கோயில் பிரகாரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இறைவனுக்காக நடத்தப்பட்ட நரி வேட்டையில் இறந்து போன நரியின் சடலம் சாலையோரம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது என்பது மிகுந்த வருத்தத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவிழாவில் நரியை வேட்டையாடி, பொதுமக்கள் முன்னிலையில் சுற்றி காண்பித்த நிலையில் , நரி பரிதாபமாக இறந்து போன சம்பவம் சமூக வலைதளங்கள் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வனத்துறை அதிகாரி சுப்பிரமணியனிடம் பேசியபோது, “இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் நிச்சயம் தண்டனைக்குரிய குற்றம். எங்களது குழுவினரை களத்தில் விசாரணை நடத்த அனுப்பியிருக்கிறேன்.” என்பதாக தெரிவித்தார்.
பாரம்பரிய பழக்க வழக்கம் என்ற பெயரில், அழிந்துவரும் அரிய வகை இனமான நரியை வேட்டையாடுவதை தடுக்க வேண்டுமென்றும்; குறிப்பான இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.
– ஜோஷ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.