தவெகவுக்கு தலைவலி!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுக்குள்ளாகவே தமிழக வெற்றிக் கழகம் மாநிலத்தில் ஆளும் கட்சியாகி இருக்கிறது.
தமிழகத்தை கடந்த 60 ஆண்டுகளாக ஆண்ட, இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் இருப்போம் என்று சொல்லிதான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. அப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துதான் மக்களும், இதுநாள் வரை அரசியலிலும், ஆட்சி நிர்வாகத்திலும் அனுபவமில்லாத தவெகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி இருக்கிறார்கள்.
விஜய்ஆனால், ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், தவெக சொன்ன மாற்றம் என்பது சாத்தியமாகுமா? இல்லை, கடந்த கால திராவிடக் கட்சிகளின் நிர்வாக போக்கே தொடருமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆட்சிக்கு வந்த இந்த கொஞ்ச நாட்களில் தவெகவும் அதன் தலைமையும் ஒரு விஷயத்தை உறுதி செய்திருக்கிறார்கள். அது, எங்களது கொள்கையும், எங்களின் அரசியல் எதிரியான திமுகவை ஒத்தே இருக்கும். அவர்களுக்கும் எங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக காட்டி வருகின்றனர்.
அப்படியானால், அவர்கள் சொன்ன மாற்றம்தான் என்ன என்ற கேள்விக்கு, கொள்கை, கோட்பாடுகளில் நாங்கள் திமுகவை ஒத்திருந்தாலும், வெளிப்படையான, அதிகார துஷ்பிரயோகம் இல்லாத, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகமாக எங்களது நிர்வாகம் இருக்கும் என்று தவெகவினர் கூறிவருகின்றனர்.
ஆனால், அதுவும் சாத்தியமாகுமா என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக தவெகவினர், அதிகாரிகளை அழைத்து ஆலோசிப்பதும், ஆய்வு என்ற பெயரில் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து அதிகாரிகளை கேள்வி கேட்பதும் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது.
அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்களில் ஆளும் கட்சியினரின் தலையீடு என்பது கடந்தகாலங்களில் ஆண்ட திராவிடக் கட்சிகள் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று.

கோபால்ஜீ
கோபால்ஜீ

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அவர்களாவது திரைமறைவில் நின்று செய்தார்கள். ஆனால், தவெகவினர் வெளிப்படையாக இறங்கி செய்வதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஒரு அரசியல்வாதிக்கும், மக்கள் பிரதிநிதிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.மக்கள் பிரதிநிதி, அதிகாரிகளை வேலை வாங்குவதும், அரசுத்திட்டங்களை, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வது என்பது வேறு.
ஆனால், ஆளும் கட்சி என்பதற்காக எந்த அரசியல்வாதியும் அரசு அலுவலகங்களில் புகுந்து நாட்டாண்மை செய்வது என்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். ஆட்சி மற்றும் அரசு நிர்வாகத்தில் நிகழும் அத்தனை முறைகேடுகளுக்கும் தொடக்கப்புள்ளி இதுதான்.
ஆளும்கட்சிப் பிரமுகர் என்ற பெயரில், அரசு அலுவலகங்களில் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டுவதுதான் முறைகேடுகள் அத்தனைக்கும் விதை.
ஆட்சிக்கு வந்த ஓரிரு வாரத்திலேயே அந்த வேலையை தவெகவினர் ஆரம்பித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் வலுக்கும் விதமாக அந்த கட்சியினரைப்பற்றி வரும் தகவல்கள் இருக்கின்றன.
இதை தவெக தலைமை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இல்லாவிட்டால் இது நிர்வாக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தவெகவுக்கு மிகப்பெரிய தலைவலியாக வளர்ந்து நிற்கும்.
ஏற்கனவே, தவெகவினர், அமைப்பு ரீதியில் கட்டுப்பாடான, ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புக்குள் அடங்காதவர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், கட்சிக்காரர்கள் எல்லோரும், அரசு திட்டங்களை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் இறங்குவது, மாநில நிர்வாகத்துக்கு மிகப்பெரிய தீங்காகிவிடும்

– கோபால்ஜீ – Publisher, Dinamalar, National Tamil Daily

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.