சிதைக்கப்பட்ட தடுப்பரண்கள் … சட்டவிரோத தனியார் பாலம் … வெள்ள அபாயத்தில் குருமலைப்பட்டி !
”ஊருக்குள் வெள்ளம் வராமல் பாதுகாத்து நிற்கும் தடுப்பு அரண்களை சிதைத்துவிட்டார்கள். ஓடையின் குறுக்கே தனியார் பாலம் கட்ட அனுமதித்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு பெருவெள்ளம் வந்தால் எங்கள் ஊரே பாதிக்கும்” என்பதாக பதறுகிறார்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள புத்தாநத்தம் ஊராட்சியை சேர்ந்த குருமலைப்பட்டி கிராம மக்கள்.
பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கும் குருமலைப்பட்டி ஊர் நாட்டாண்மை மாசிலாமணியிடம் பேசினோம். “குருமலைப்பட்டியில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எல்லோருமே தாழ்த்தப்பட்ட மக்கள்தான். எங்க ஊரே கொஞ்சம் வித்தியாசமான ஊரு. கிழக்கால முத்துக்கருப்பை குளம். தெற்குல சூதான குளம். மேற்கால கருப்பூர் பெரிய குளத்தோட வாரினு ஊரை சுத்தி நாலு பக்கம் வாரியும் வாய்க்காலும்தான். பெருமழை வந்துச்சின்னா மொத்த தண்ணியும் ஊருக்குள்ளதான் நிற்கும். முதல்முறையா 2009 இல் மிகப்பெரிய வெள்ளம் வந்தப்போ, தீயணைப்புத்துறை அதிகாரிகள் வந்துதான் எங்க ஊரையே கயிறு கட்டி காப்பாத்துனாங்க.

மழை வெள்ளத்துல இருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு ரோடும், பாலமும் கேட்டதுக்கு 70 குடும்பம் இருக்கிற ஊருக்கு அதெல்லாம் செய்ய முடியாதுனு ஊரையே காலி செய்ய பாத்தாங்க. கடுமையா போராடி அத தடுத்து நிறுத்துனோம். பாலம் கட்டும்போதே, பெருமழையையும் தாக்குப்பிடிக்கிற மாதிரி இன்னும் கொஞ்சம் உயர்த்தி கட்டுங்கனு கோரிக்கை வச்சோம். இந்த அளவுக்குத்தான் டெண்டர் விட்ருக்காங்கனு சொல்லி மறுத்துட்டாங்க. 2014 இல் பாலம் மூழ்கிடுச்சி. அதுக்கு மேல தண்ணி போச்சு. அதற்குப்பிறகுதான், ஊருக்குள்ள தண்ணி உள்ள நுழையாம இருக்க சுத்தி தடுப்பு அரண்களை கட்டிக்கொடுத்தாங்க.
இப்படி ஒரு நிலைமையிலதான், பிச்சம்பட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவர் வெளிநாட்டில் வசிக்கும் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான சொத்தை பிளாட் போட்டு நல்லவிலைக்கு விற்றுத்தருவதாக பேசி பிளாட் போடுவதற்கான வேலையை செய்து வருகிறார். பொதுப்பணித்துறை அதிகாரிகளை எப்படியோ பேசி வாரியை கடக்க தனியார் பாலம் அமைக்க அனுமதியும் வாங்கிவிட்டார். பாலம் கட்டுகிறேன் என்று ஊருக்குள் வெள்ளம் வராமல் பாதுகாக்கும் தடுப்பு அரண்களை சேதப்படுத்திவிட்டார். 90 அடி உயரத்திற்கு எழுப்பப்பட்டிருந்த தடுப்பு அரண்களை சுமார் 30 அடி வரையில் சேதப்படுத்திவிட்டார்கள். இதில் பாலத்தையும் கட்டிவிட்டால், சிறு மழைக்கேகூட இயல்பாக பாய்ந்தோட வேண்டிய நீர் பாலத்தில் தேங்கி ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன்வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை” என்கிறார் அவர்.

“சம்பந்தபட்ட நிலத்தின் உரிமையாளர் இரண்டு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில், எப்படி அவரது பெயரில் பாலம் கட்ட அனுமதி தந்தார்கள் என்றுதான் புரியவில்லை. இது நிச்சயம் பேரழிவுக்குத்தான் வழிவகுக்கும்” என எச்சரிக்கிறார், ஒருங்கிணைந்த மணப்பாறை தாலுக்கா மானாவாரி மற்றும் இரவை பாசனக்காரர்கள் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அப்துல்லா.
இந்தக்குற்றச்சாட்டு குறித்து, பிச்சம்பட்டி பெரியசாமியிடம் பேசியபோது, “வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன். பிறகு பேசுகிறேன்.” என்றவர், அதன்பிறகு பேசவேயில்லை.
அரியாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறியாளர் சிவக்குமாரிடம் இதுகுறித்து கேட்டபோது, “தனிநபரின் நிலத்திற்கு குறுக்கே வாரி அமைந்திருக்கிறது. அதனை கடந்து அவரது நிலத்திற்கு செல்ல பாலம் கட்ட அனுமதி கோரியிருந்தார்கள். அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தரைவாடகையின் அடிப்படையில் பாலம் கட்ட அனுமதி வழங்கியிருக்கிறோம். இதில் எந்த விதிமீறலும் இல்லை.” என்கிறார், அவர்.
ஊரைச்சுற்றிலும் குளங்களும், காட்டாற்று வெள்ளம் பாயும் வாரிகளையும் கொண்ட பள்ளத்தாக்கைப்போல, அமைந்திருக்கும் குருமலைப்பட்டி ஊருக்குள் எந்நேரமும் வெள்ளம் பாய்ந்தோடலாம் என்ற அச்சத்தின்பிடியில் இருத்தப்பட்டிருக்கும் அக்கிராம மக்களின் அபயக்குரல் மாவட்டத்தை நிர்வாகத்தை எப்போதுதான் எட்டுமோ?
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.