நாளும் பெருகும் மோசடிகள் : தும்பை விட்டு வாலை பிடிக்கலாமா ?
தமிழகத்தில் ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ்., நியோமேக்ஸ், FQL உள்ளிட்ட பெரும் நிதி மோசடி வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிக்காரர்கள் பெரும் வேட்டையை நடத்தி ஓய்ந்த நிலையில்தான் முதல் புகாரே போலீசில் பதிவாகிறது என்ற அவலம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
ஒருபுறம், குறிப்பாக பொருளாதார மோசடிகளை விசாரிப்பதற்கென்றே இயங்கிவரும் போலீசின் சிறப்புப்பிரிவான பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் பற்றாக்குறை மற்றும் அவர்களது பணிச்சுமை ஒருபுறமிருக்க, மோசடிகளின் பரிமாணத்தோடு ஒப்பிடுகையில், வருவாய், பதிவுத்துறை, சைபர் கிரைம் மற்றும் மாவட்ட போலீசார் உள்ளிட்டு பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்த கட்டமைப்பு மாற்றத்தை பெறுவதன் அவசியத்தை கோருகின்றன.
இதைவிட, மிக முக்கியமாக ஏமாற்றுப்பேர்வழிகள் பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்தான் வசூல் வேட்டைக்கான கூட்டங்களை நடத்தி வருகிறார்கள் சமீபத்தில் அம்பலமான FQL மோசடியை பொருத்தவரை குக்கிராமங்களிலும்கூட, மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டங்களைப்போல நடத்தியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம், முன்னரே கண்டறிந்து தடுக்க முடியாமல் போனது எப்படி?
சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் பயன்படுத்தும் எடை தராசுகளின் துல்லியத்தை சரிபார்க்க அதிரடி ஆய்வுகள் நடைபெறும் நிலையில், வெளிப்படையாக போர்டு வைத்து மோசடியில் ஈடுபடும் சிட்பண்ட் உள்ளிட்ட மோசடி நிறுவனங்களில் எந்த அதிகாரியும் அதிரடி சோதனைகளை நடத்துவதில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது?
இப்படி ஒரு முறையான கண்காணிப்பும், அதிரடி சோதனைகளும் இல்லாமல் போனதால்தான், ஏறத்தாழ வங்கிகளின் கிளை போலவே மாவட்டம் தோறும் அலுவலகத்தை நியோமேக்ஸ் நிறுவனத்தால் நடத்த முடிந்திருக்கிறது என்கிற உண்மையும், இந்த விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
”தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக” மாறிப்போன இந்த விவகாரம் குறித்து, விரிவாக அலசுகிறது, இந்த காணொளி.
நாளும் பெருகும் மோசடி தும்பை விட்டு வாலை பிடிக்கலாமா?
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.