அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வணிகம் – ஏலம் – சூதாட்டம் சூழ்ந்த மைதானங்கள் !

திருச்சியில் அடகு நகையை விற்க

இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட நவீன கிரிக்கெட் ஆட்டம், பிரிட்டிஷ் காலனி நாடுகளில் அதிகமாகப் பரவிய நிலையில்,  கிரிக்கெட்டிற்கு அதிகளவிலான ரசிகர்கள் கொண்ட நாடாக இருந்தது இந்தியாதான். உலக அளவிலான பெரிய நாடுகள் பலவும் கால்பந்து விளையாட்டில்தான் அதிக ஆர்வம் காட்டி வந்தன. அதிக மக்கள் தொகை கொண்ட சீனா உள்பட. மக்கள்தொகையில் இரண்டாவது இடம் கொண்ட இந்தியாவிலோ கிரிக்கெட் என்றால் மதமாக, உயிராக, உணர்வாக மாறியது.

வெள்ளைக்காரர்களுடன் விளையாடிய இந்திய உயர்சாதியினர், விடுதலைக்குப் பிறகு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ராஜவம்சத்தினர், ஜமீன்தார்களும் அவர்களுடன் சேர்ந்திருந்தனர். ரேடியோ, டி.வி ஆகியவற்றில் கிரிக்கெட் கமென்ட்ரிக்கும், லைவ் ரிலேக்கும் அதிக நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகள் 2 மணிநேரத்தில் முடிந்துவிடும். ஒவ்வொரு ஓவருக்கும் நடுவே விளம்பர இடைவெளி கிடைக்கக்கூடிய விளையாட்டும் கிரிக்கெட்தான். அதனால் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப இந்திய வணிக நிறுவனங்கள் பெரும் போட்டியிட்டன. அதில் அரசியலும் பணமும் பெரியளவில் விளையாடின. எவ்வளவு கொட்டிக் கொடுத்து ஒளிபரப்பு உரிமையை எடுத்தாலும், அதைவிட அதிகமாக லாபம் கொட்டும் என்பது வணிகக்  கணக்கானது.

கிரிக்கெட்டின் இயல்பான தன்மையும், அதனை இந்தியத்தன்மைக்கேற்ப கையாண்டதும் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மைதானங்கள் இல்லாத கிராமங்களில் கூட, களத்து மேட்டில் மூன்று குச்சிகளை நட்டு கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு நிலைமை வளர்ந்திருந்தது. சினிமா நட்சத்திரங்களுக்கு இணையான பெயரும் புகழும் பணமும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு குவியத் தொடங்கியது. பேஸ்ட், முதல் பூஸ்ட் வரை பல விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினர். கவாஸ்கர் – கபில்தேவ்வில் தொடங்கி விராட் கோலி-ரோஹித் சர்மா வரை எல்லாருமே விளம்பரப் படங்களின் நாயகர்கள்தான்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

கபில்தேவ்
கபில்தேவ்

கிரிக்கெட் என்பது ஒட்டுமொத்த அணிக்கான விளையாட்டு என்றாலும்,  அதிக ரன், அதிக சதம், அதிக சிக்ஸர், அதிக விக்கெட், அதிக கேட்ச் என ஒவ்வொன்றிலும் ஒருவர் சாதிக்க முடியும். அதனால், அணியின் வெற்றியுடன் தனிப்பட்ட புகழும் கிடைக்கும். இந்தப் புகழ், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் காய்க்கும் மரமானது. அதே பணத்தை அவர்களை வைத்தே தன் தோட்டத்திலும் காய்க்க வைக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. கணக்குப் போட்டு பல முயற்சிகளை மேற்கொண்டது.

ஐந்து நாள் போட்டிகள், ஒரு நாள் போட்டி, டி-20 என கிரிக்கெட்டின் காலத்திற்கேற்ற வளர்ச்சி  பல வித சிந்தனைகளை இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், முன்னாள் வீரர்களிடமும் உருவாக்கியது. ஆஸ்திரேலிய ஊடக அதிபர் பாக்கர் 1970களில் உருவாக்கிய பல நாடுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் அணியைப் போல, ஓர் இன்டர்நேஷனல் அணியுடன், உள்நாட்டு வீரர்களை விளையாட வைப்பது என்ற எண்ணம் உருவானது.

இந்தியாவின் புகழ்பெற்ற ஊடக நிறுவனமான ஜீ டி.வியின் ஜீ என்டர்டெய்ன்மென்ட் எண்டர்பிரைசஸ் சார்பில் இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் இந்த மூன்று நாடுகளையும் கொண்ட 9 உள்ளூர் அணிகளுடன் 5 சர்வதேச அணிகளும் கொண்டதாக ஐ.சி.எல். திட்டமிடப்பட்டது. இந்திய அணிக்கான முதல் உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனான கபில்தேவ் இதில் முக்கிய பங்கு வகித்து, விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்தார். அவருடன் முன்னாள் வீரர் கிரன் மோரேவும் இடம்பெற்றிருந்தார்.

சண்டிகர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், லாகூர், டாக்கா போன்ற உள்ளூர் அணிகள் உருவாக்கப்பட்டதால் திறமையான புதிய – இளைய கிரிக்கெட் வீரர்கள் கிடைத்தனர்.  ஒரு தரப்பின் கட்டுப்பாட்டிலேயே இருந்த இந்திய கிரிக்கெட்,  பரந்துபட்ட அளவில் வளரக்கூடிய வாய்ப்பு தெரிந்தது. அப்படி ஒரு நல்ல சூழலை அனுமதித்து விடுவார்களா?

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

2007 முதல் 2009 வரை செயல்பட்ட ஐ.சி.எல் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தர மறுத்தது.  நாங்களும் அனுமதி தர முடியாது என ஐ.சி.சி. கை விரித்தது. ஐ.சி.எல். அமைப்பை விட்டு கபில்தேவ்வும் கிரன் மோரேவும் வெளியேற வேண்டிய சூழல் உருவானது. அத்துடன் இந்திய  கிரிக்கெட் லீக் எனப்படும் ஐ.சி.எல். மூடுவிழா கண்டது.

இதைத்தான் எதிர்பார்த்திருந்தோம் என்பது போல காத்திருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். போட்டிகளை 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. உள்ளூர் அணிகளைக் கொண்ட டி-20 விளையாட்டுகள் பெரும் பொருட்செலவில் நடத்தப்படுகின்றன.

கோடியில் ஏலம் போகிற பிரபல விளையாட்டு  வீரர்கள், இலட்சங்களில் ஏலம் போகிற வீரர்கள் என இதில் தரவரிசையும் உண்டு. ஓர் அணிக்காக நன்றாக  விளையாடியவரை அடுத்த முறை இன்னொரு அணியின் உரிமையாளர் அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கும் முறையும் உள்ளது. ஆயிரம் – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அடிமைகளை ஏலத்தில் எடுத்து, அவர்களை போட்டிக் களத்தில் பலியாட்களாகப் பயன்படுத்தியதை வரலாறு சொல்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் அதன் அதிநவீனத் தொழில்நுட்ப வடிவம்.

கோவி.லெனின்
கோவி.லெனின்

ஏலமும் வியாபாரமும் இருந்தாலே அதில் மோசடியும் சேர்ந்து கொள்ளும். அதனால்தான் ஐ.பி.எல். போட்டிகளில் பெட்டிங், மேட்ச் பிக்சிங் சூதாட்ட சர்ச்சை உருவாகி, அணிகளுக்கு தடை விதிக்கும் நிலையும் உருவானது. ஆனாலும், ஐ.பி.எல். சீசன் வந்தால் அவையெல்லாம் மறந்து போய்விடும். எப்படியாவது டிக்கெட் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பே அதிகமாக இருக்கும்.

இந்தியாவா, பாகிஸ்தானா என்கிற ‘கிரிக்கெட் தேசபக்தி’க்கு மாறாக, மும்பையா, சென்னையா, பெங்களூரா என்கிற ‘மாநில பக்தி ’ வெளிப்படத் தொடங்கியது. எதையும் விரைவாகவும் விறுவிறுப்பாகவும் எதிர்பார்க்கும் 90 கிட்ஸ், 2கே கிட்ஸ் ஆகியோருக்கு ஐ.சி.சி. அணிகளின் ஆட்டங்களைவிட ஐ.பி.எல். அணிகளின் ஆட்டங்களே கவர்ந்தன. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களே இடம்பெறாமல் விளையாட முடியும் என்ற நிலை உருவானது பற்றி அதன் ரசிகர்கள் கவலைப்படவில்லை. பச்சைத் தமிழன் போல மஞ்சள் ஜெர்ஸி தமிழனான தல தோனி களமிறங்கினால் போதும், விளையாடக்கூட வேண்டாம் என்கிற மனநிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது கிரிக்கெட் விளையாட்டு.

காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுக்கொண்டே பயணிக்கும் வலிமை கொண்டது. வரலாறு ஒவ்வொன்றையும் தோண்டி எடுத்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். ஐ.பி.எல் என்பது காலம் புரட்டிப் போட்ட கிரிக்கெட் பயணம். ஐ.பி.எல்.லுக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது என்பது வரலாறு தோண்டி எடுத்துச் சொல்லும் உண்மை.

(ஓவர்)

—    கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளா்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.