தமிழ்நாட்டில் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் நகர்வுகள் !
இந்திய அரசியலும் இசுலாமியர்களும் ! செய்ததும் செய்யத்தவறியதும் ! பாகம் – 06
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தனி அரசியல் செய்வது சரியானதா? என்ற கேள்விக்கான விடையை சென்ற தொடரில் பார்த்தோம். தமிழ்நாட்டில் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் நகர்வு என்னவாக இருக்க வேண்டும்? என்பது குறித்து இந்த தொடரில் பேசுவோம்.
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் இருக்கும் 7% வாக்கினை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு பலவீனப்படுவதால், நாமும் எதற்கு மேலும் ஓட்டை பிரிக்கவேண்டும் என, கனிசமான அளவு உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆனது அரசியல் கட்சி ஆரம்பிக்காததை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.
தமிழ்நாட்டில் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் நகர்வு என்னவாக இருக்க வேண்டும்?
கண்டிப்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கைச் சார்ந்தே இருக்க வேண்டும். ஏன்? ஏனெனில் இது ஏற்கனவே இந்தியத் தேர்தல் ஆணையம் கேரளாவால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சி. எனவே தமிழ்நாட்டிலும் “ஏணி” சின்னத்திலேயே போட்டியிடுகிறது. பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் “ஏணி” சின்னத்திலேயே போட்டியிடலாம். சின்னமும் ஏற்கனவே வேலூர், இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளான வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தினங்குப்பம் (கே.வி.குப்பம்), குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி, திருவாடனை, இராமநாதபுரம், முதுகுளத்தூர் மற்றும் பிற சட்டமன்ற தொகுதிகளான விழுப்புரம், பூம்புகார், கடையநல்லூர், மணப்பாறை, சிதம்பரம், பாபநாசம் என தமிழ்நாடு முழுவதும் பரவலாக சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.
இது தவிர தற்போதைய சட்டமன்ற தேர்தல் 2026ல் முஸ்லிம் கட்சி வேட்பாளர்கள் தனித்தனியாக 2+2+1+1 என மொத்தம் 6 இடங்களில் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரணியாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் திரண்டு திமுக கூட்டணியில் போட்டியிடும் பட்சத்தில் குறைந்தது 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடலாம். அதில் 7 தொகுதிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் தானாகவே, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆனது தமிழ்நாட்டில் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற்றுவிடும். அதேபோல் 2 நாடாளுமன்ற தொகுதியில் வென்றாலும் மாநிலக்கட்சி அங்கீகாரம் கிடைத்துவிடும். பின்னர் கட்சியை பொதுமக்களிடம் கொண்டு செல்வது எளிது. சிரமமான அரசியல் பாதையானது இறையருளால் எளிதாகும்.
அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் இணையும் பட்சத்தில் புதுச்சேரியிலும் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெறுவது மிகவும் எளிது. புதுச்சேரியின் ஆளுகைக்கு உட்பட்ட கேரளாவில் உள்ள மாஹேவில் தற்போதைய 2026 தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுகிறது. இன்ஷா அல்லாஹ்,வெற்றிபெறும். இந்த மாஹே தொகுதி, காரைக்காலில் காரைக்கால் கிழக்கு அல்லது மேற்கு தொகுதி, புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் ஹசன் பரரூக் மரைக்காயர் மற்றும் அவரது மகன் ஷாஜஹான் ஆகியோர் தொடர்ந்து வெற்றிபெறும் முஸ்லிம்கள் அதிகமுள்ள காலாபட்டு, லாஸ்பேட்டை, இது தவிர வில்லியனூர், புஸ்ஸி போன்ற தொகுதிகளில் ஏதாவது 3ல் மட்டும் வெற்றிபெறும் பட்சத்தில் புதுச்சேரியிலும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆனது மாநிலக்கட்சி அங்கீகாரம் பெறும்.
இறைவன் நாடினால், இந்த முன்னெடுப்புகள் சரியாகச் செல்லும் பட்சத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆனது கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலக்கட்சி அங்கீகாரத்தை அடுத்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் பெற்று விடும். இதேபோல் கேரளா எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகாவிலும், மாகாராஷ்டிராவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு நல்ல கட்டமைப்பு உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒரு மாநிலத்தில் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெறும் பட்சத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆனது 4 மாநிலங்களில் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெறுவதால் தேசியக்கட்சி அங்கீகாரம் பெற்றுவிடும்.
தொடரும் …
– H.உபைதுல்லாஹ்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.