தமிழக சிறைகளை திரிபாதி காப்பாற்றுவாரா ?

ஜெயில் பரிதாபங்கள் – 15

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழகத்தில் அடுத்தடுத்து சிறைக்கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. புழல் சிறையில் இரண்டு கைதிகள் தப்பியோடிய விவகாரம் தொடக்கமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் சிறைக்காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் சூடு தணிவதற்குள் கோவை மத்திய சிறையிலிருந்து கைதி தப்பியோடிய விவகாரம் பதற்றத்தை கூட்டியிருக்கிறது.

கூண்டோடு மாற்றம் :

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தேனி மாவட்ட சிறையில் கைதிகள் தப்பியோடும் சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பணியிலிருந்த சிறை போலீசார் 9 பேர் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்கள். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப்பதிலாக, ஏடிஜிபி சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

துறையின் இயக்குநராக பொறுப்பேற்ற சங்கர், அதிரடியாக கடலூர், மதுரை, சேலம் ஆகிய மத்திய சிறைகளின் சிறைத்துறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து அதிரடியை தொடங்கியிருக்கிறார்.

உயர்நிலை குழு விசாரணை :

கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்கதையாகி எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு ஆளான, த.வெ.க. அரசு தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் திரிபாதி ஐபிஎஸ் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து உத்தரவிட்டிருக்கிறது. இக்குழுவில், சிறைத்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் மற்றும் சிறை துறையின் முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் (ஓய்வு) ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்திருக்கிறது.

சிறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள்; தொழில்நுட்ப இடைவெளிகள்; சிறை போலீசாரின் பணிச்சுமை; மற்ற நாட்டில் உள்ள சிறைகளின் அனுபவங்கள் ஆகியவற்றை பரிசீலித்து தனது பரிந்துரையை இக்குழு அரசுக்கு வழங்கும் என தெரிவித்திருக்கிறார்கள்.

சாட்டையை சுழற்றிய சட்டப்பணிகள் ஆணைக்குழு :

இதுஒருபுறமிருக்க, ”சாப்பாட்டில் புழு இருக்கிறது. சித்ரவதை செய்கிறார்கள். உறவினர்கள் வந்தாலும் பார்க்க விடமாட்டேங்கிறாங்க.” என்பதாக, தேனி சிறையிலிருந்து தப்பியோடிய மீனாட்சி சுந்தரத்தின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தப்பட்டார்களா? என்பதை விசாரிக்குமாறு தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், கடலூர், மதுரை, சேலம், நெல்லை மாவட்டங்களில் இயங்கும் சிறைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு நவம்பர்-16 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அந்தந்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருக்கிறது, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு.

திரிபாதி ஐபிஎஸ்
திரிபாதி ஐபிஎஸ்

தப்பியோடும் சம்பவம் புதிதல்ல:

முதலில் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தமிழகத்திற்கு புதிதல்ல. கடந்த 1990 இல் ஆட்டோ சங்கர் சென்னை மத்திய சிறையிலிருந்து 5 கைதிகளோடு தப்பியோடி, பின்னர் ஓடிசாவில் பிடிபட்டிருக்கிறார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

1991 இல் வேலூர் மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதிகள் 8 பேர் சிறையின் மேற்கூரை ஓடுகளை தூக்கியெறிந்துவிட்டு தப்பியிருக்கிறார்கள்.

1995 இல் சென்னை மத்திய சிறையிலிருந்து தடா கைதிகள் 9 பேர் தப்பியிருக்கிறார்கள். இதையெல்லாம்விட, அதே ஆண்டில் வேலூர் கோட்டை திப்பு மஹாலில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 43 விடுதலைப்புலிகள் தப்பியோடிய சம்பவம்தான் தமிழக சிறைத்துறை வரலாற்றிலேயே ’தரமான தப்பியோடும் சம்பவமாக’ இன்றளவும் பேசப்படுகிறது. தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழத்திற்கு சுமார் 153 அடி நீளத்துக்கு சுரங்கம் தோண்டி, அதுவும் கோட்டையைச் சுற்றியிருந்த அகழியையும் கடந்து தப்பியோடினார்கள்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தின் கழிவறை ஜன்னல் வழியாக 7 சிறார்கள் தப்பியோடிய சம்பவத்தையும் தமிழகம் கண்டிருக்கிறது.

போலீசார் பற்றாக்குறை :

ஆக, இதுபோன்ற முன்னுதாரணங்கள் இருந்தும்கூட கைதிகளின் பாதுகாப்பு விசயத்தில் அசட்டையாக இருந்தது எப்படி என்பதுதான் இங்கே எழும் மையமான கேள்வியாக இருக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக, தேனி மாவட்ட சிறையில் சிறைக் கண்காணிப்பாளர் பதவியிடமே காலியாகத்தான் இருந்திருக்கிறது என்பதற்கும்; 200 கைதிகளை அடைக்க வேண்டிய இடத்தில், 334 கைதிகளை அடைத்து வைத்திருந்தார்கள் என்பதற்கும் யாரை பொறுப்பாக்குவது?

தமிழகம் முழுவதிலுமுள்ள 9 மத்திய சிறைகள் உள்ளிட்டு 140 சிறைகளில் அதன் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட அளவில் அடைத்துவைக்கப்பட்ட கைதிகளை கையாளுவதற்கேற்ற போலீசாரே பற்றாக்குறையாக உள்ள நிலையில், கூடுதலாக அடைக்கப்படும் கைதிகளுக்கு ஏற்ப சிறைக்காவலர்களை நியமிக்காதது யாருடைய பொறுப்பு?

இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றும் சிறைக்காவலர்களை, பணியிடமாற்றம் என்ற பெயரில் மாவட்டம் விட்டு மாவட்டம் பந்தாடி; மன உளைச்சலுக்கு மத்தியில் அவர்கள் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பது?

மேலும், சிறை வளாகத்திற்குள் கைதிகளுக்குள்ளாக சிண்டிகேட் அமைக்கும் சூழலை கண்காணிக்க, ‘மூவிங் பாரா’ என்ற நடைமுறையும் சிறை உளவுப்போலீசாரின் பங்களிப்பும் மிக அவசியமானவை என்கிறார்கள். இந்த விவகாரத்தில் கோட்டை விட்டதற்கு யாரை பொறுப்பாக்குவது?

ஜெயில் பரிதாபங்கள்மூடப்படும் கிளைச்சிறைகள் :

தற்போதைய சூழலில், மத்திய மற்றும் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகளில் 70% பேர் விசாரணைக் கைதிகள். அதிலும் அடிதடி, அனுமதியின்றி மணல் அள்ளியது உள்ளிட்ட சிறு குற்றங்கள், சொத்து தகராறில் உறவினர்களோடு சண்டையிட்டு கைதானவர்கள் என பலதரப்பட்ட கைதிகளும் ஒரே வளாகத்தில் அடைக்கப்படுவதால், அவர்களும் தொழில்முறை கிரிமினல்களாக மாறுவதற்கான புறவயமான சூழலை கொண்டிருக்கிறது என்பதாக எச்சரிக்கிறார்கள். இதற்கு தீர்வாக, மாவட்டம் தோறும் கிளைச்சிறைகளை மேம்படுத்த வேண்டும். சிறு குற்றங்கள் புரிந்த விசாரணைக் கைதிகளை தனியே பிரித்து அடைக்க வேண்டும் என்பதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால், இதற்கு நேர்மாறாக தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 14 கிளைச்சிறைகள் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கின்றன. தற்போதும்கூட, தேனி சம்பவத்தை காரணம் காட்டி, மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த தேனி – உத்தமபாளையம், விருதுநகர் – அருப்புக்கோட்டை, தூக்குக்குடி – ஸ்ரீவைகுண்டம், தென்காசி – சங்கரன்கோயில் ஆகிய 4  கிளைச்சிறைகளை மூட முடிவெடுத்திருக்கிறார்கள். அங்கு பணியாற்றிய சிறை காவலர்களை மாவட்ட சிறைகளுக்கு பணியிட மாற்றம் செய்து பாதுகாப்பை பலப்படுத்தப் போகிறார்களாம். கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா, சார்?

–              அங்குசம் புலனாய்வுக்குழு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.