அங்குசம் பார்வையில் ‘கட்டாகுஸ்தி-2’
குஸ்தி வீராங்கனையான தனது மனைவி ஐஸ்வர்யா லட்சுமி, தேசிய சாம்பியனாக வேண்டும் என்பதற்காக அவருக்கு எல்லா உதவிகளையும் கர்ம சிரத்தையாக செய்து, தனது மகள் மதிமலரை [ பேபி ஷாரா] பள்ளிக்கு அனுப்புவது, கூட்டி வருவது என வீட்டின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கிறார் விஷ்ணு விஷால். விளையாட்டு கோட்டாவில் ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டே குஸ்தியில் தேசியசாம்பியனாக ஒரு கோச்சிடம் தீவிரப் பயிற்சியும் மேற்ககொள்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு விருது கொடுக்கும் அமைச்சர், அந்த கோச்சுக்கு விருது கொடுக்காததால் அவரின் மனைவியே காரித்துப்புகிறார். இதனால் ஆத்திரமாகும் கோச், ஐஸ்வர்யா லட்சுமியின் சாம்பியன் கனவைத் தகர்க்க, விஷ்ணுவிஷால் மூலம் ஆயுர்வேத மருந்துகளை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொடுக்க வைக்கிறார். இதற்குப் பிறகு நடந்த போட்டியில் ஐஸ்வர்யா தோற்றுப் போவதுடன், ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, ஒரு வருடத்திற்கு குஸ்தி போட்டியில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்படுகிறது.
ஏற்கனவே தனது மகளின் க்ளாஸ் டீச்சர் மோக்ஷாவுக்கும் விஷ்ணுவிஷாலுக்கும் இடையே ஒரு ‘இது’ இருக்கு என தப்புக்கணக்குப் போட்டிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு போட்டியில் விளையாட தடைக்குக் காரணமே தனது கணவன் தான் என நம்பி, அவரிடமிருந்து குழந்தையைப் பிரித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். அங்கிருந்தபடியே விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குச் செல்கிறார். விஷ்ணு விஷாலுக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் விவாகரத்து கிடைத்ததா?
படத்தில் ஹவுஸ் ஹஸ்பெண்டாக விஷ்ணு விஷால். இந்தக் கதையில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல ஸ்பேஸ் இருக்கு எனத் தெரிந்தும் இந்தக் கதையுடன் அடாப்டாகி, தனக்கான ஸ்பேஸை ஸ்ட்ராங்காக அமைத்துக் கொண்டதில் தான் விஷ்ணு விஷாலின் சாமர்த்தியம் இருக்கிறது. அடர் தாடி, சாதாரண வேட்டி-சட்டையில் பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக படம் முழுவதும் நிரம்பியிருக்கிறார் விஷ்ணு விஷால். பள்ளியில் தனது மகள் ஷாரா டான்ஸ் ஆடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் பொறுக்க முடியாமல் ஐஸ்வர்யா லட்சுமி உக்கிரமாகும் போது தான் படத்தின் டெம்போ ஏறுகிறது.
“உனக்கு ஆம்பளங்குற ஈகோ வந்துருச்சு, உன்னை மாதிரியே உன் மகளையும் ஆக்கப் பார்க்குறே” என ஐஸ்வர்யா சீற, பதிலுக்கு விஷ்ணு விஷால், “ஒரு போட்டியில தோத்துப் போனாதான் உனக்கு எதுவுமே புரியும்” எனக் கூற…. இதான் கணவன்—மனைவிக்கிடையிலான நிஜ குஸ்திக்கு அஸ்திவாரமாக அமைகிறது. இது போல சில சீன்களில் பெண் சுதந்திரத்தையும் ஆணின் சுய கெளரவத்தையும் பேலன்ஸ் பண்ணி சமாளித்து ஜமாய்த்திருக்கிறார் டைரக்டர் செல்லா அய்யாவு.
குஸ்தியில் ஆக்ரோஷம், தம்பி பாப்பாவுக்கு ட்ரை பண்ணும் விஷ்ணு விஷாலுடன் போடும் ஆட்டத்தில் லைட் கிளாமர், கணவனிடம் காட்டும் ஆத்திரம், டீச்சர் மோக்ஷாவின் தலைமுடி நீளம் எவ்வளவு என குழந்தை ஷாராவிடம் கேட்டு பெருமூச்சு விடுவது என ஐஸ்வர்யா லட்சுமி, நடிப்பில் அபார லட்சுமி.
இடைவேளை வரை கொஞ்சம் ஸ்லோவாகப் போகும் திரைக்கதையை, இடைவேளைக்குப் பின் கருணாஸ், அவரது மனைவி லிஸி ஆண்டனி, வக்கீல் காளிவெங்கட், டீச்சர் மோக்ஷா ஆகியோரின் காம்பினேஷனை வைத்து காமெடியால் தியேட்டரை கலகலப்பாக்கிவிட்டார் செல்லா அய்யாவு. அதிலும் க்ளைமாக்ஸில் ஸ்ட்ரிக்ட் நீதிபதியாக ரம்யா கிருஷ்ணன் எண்ட்ரியானதும் செம அப்ளாஸ்.
டீச்சராக வரும் மோக்ஷா. யாருய்யா இந்த மோக்ஷா?சும்மா ஜில்லுன்னு ஜிவ்வுன்னு இருக்காரேன்னு ஆல் ஜெனரேஷனையும் ஜொள்ளு விடவைத்துவிட்டார். கட்டாகுஸ்தியில் நம்மை ரொம்பவே கவர்ந்ததுன்னா…அது விஷ்ணு விஷாலின் மகளாக வரும் ஷாரா தான். அடேங்கப்பா… ஒவ்வொரு சீனிலும் நொடிக்கு நொடி எக்ஸ்பிரஷன்களை சேஞ்ச் பண்ணி, ஃபியூச்சரில் குட் பெர்ஃபாமென்ஸ் நடிகையாக நிச்சயம் ஜொலிப்பார் என்ற நம்பிக்கை தருகிறார் ஷாரா. ஐஸ்வயா லட்சுமியின் சித்தப்பாவாக முனீஸ்காந்த், விஷ்ணு விஷாலுடன் கனெக்ட் பண்ணி தனது பொண்டாட்டியை சந்தேகப்படும் டிடிஆராக கருணாகரன் ஆகியோர் இருக்கிறார்கள். ஊராட்சித் தலைவியானதும் தனது மனைவி லிஸி ஆண்டனி இங்கிலீஷ் பேசுவதை கேட்டு கருணாஸ் அதிர்ச்சியாகும் சீன் சூப்பர் காமெடி.
கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு கனகச்சிதம். க்ளைமாக்ஸில் ஐஸ்வர்யா லட்சுமியும் விஷ்ணு விஷாலும் மோதும் குஸ்திப்போட்டி சீனில் மட்டும் ஷான் ரோல்டனின் பின்னணி இசை நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது.
“தன்னோட பொண்டாட்டிக்கு பேரும் புகழும் கிடைக்கிறத எந்தபுருஷனும் விரும்புறதில்ல. ஆனா தன்னோட புருஷனுக்கு பேரும் புகழும் கிடைச்சா பொண்டாட்டியின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை” என டயலாக் வைத்திருக்கும் டைரக்டர் செல்லா அய்யாவு, க்ளைமாக்ஸில் நடக்கும் குஸ்திப் போட்டியில் விஷ்ணு விஷாலும் தோற்கக்கூடாது, ஐஸ்வர்யா லட்சுமியும் தோற்கக்கூடாது என்பதற்காக ஐஸ்வர்யா லட்சுமி கர்ப்பமாக இருப்பதாகக் காட்டி இருபாலினத்தையும் பேலன்ஸ் பண்ணியிருக்கிறார்.
‘கட்டாகுஸ்தி-2’ ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ஃபுல் எண்டெர்டெய்ன்மெண்ட் க்யாரண்டி, குட் மெசேஜ் வாரண்டி.
அங்குசம் பார்வையில் ‘கட்டாகுஸ்தி-2’ 68/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.