‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் வெளியான ”லப்பர் பந்து”
‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ எஸ்.லக்ஷமண் குமார் தயாரிப்பு. இணைத் தயாரிப்பு : ஏ.வெங்கடேஷ். டைரக்ஷன் ; தமிழரசன் பச்சமுத்து. நடிகர்—நடிகைகள் : ‘அட்டக்கத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, காளிவெங்கட், பாலசரவணன், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர், டிஎஸ்கே. ஒளிப்பதிவு : தினேஷ் புருசோத்தமன், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : ஜி.மதன், ஆர்ட் டைரக்டர் : வீரமணி கணேசன், காஸ்ட்யூம் டிசைனர் : தினேஷ் மனோகரன். எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : ஷரவந்தி சாய்நாத். பி.ஆர்.ஓ. : ஏ.ஜான் இவா்கள் இணைந்த ”லப்பர் பந்து”.
பெரம்பலூர் மாவட்டமும் கடலூர் மாவட்டமும் தான் கதைக்களம். பெரம்பலூர் மாவட்டத்தின் கிரிக்கெட் டீமில் பவர்ஃபுல் பேட்ஸ்மேன் ‘கெத்து’ பூமாலை [ அட்டக்கத்தி தினேஷ் ]. விஜயகாந்தின் தீவிர ரசிகரான இவர் கிரவுண்டில் இறங்கியதும் “பொட்டு வச்ச தங்கக்குடம்” என்ற ‘பொன்மனச் செல்வன்’ விஜயகாந்த் பட பாடலைப் போட்டால், பூமாலையின் பேட்டில்படும் ல[ர]ப்பர் பந்து பனைமர உயரத்துக்குப் பறக்கும். ல[ர]ப்பர் பந்து 15 ரூபாய்க்கு விற்கும் காலத்தில் பூமாலை விளையாடுகிறார்.
லப்பர் பந்து 35 ரூபாய்க்கு விற்கும் காலத்தில் கடலூர் மாவட்ட கிரிக்கெட் டீமில் பெரிய பவுலராக இருக்கும் ஹரிஷ் கல்யாண், வீடு முழுக்க சிஎஸ்கேவின் மஞ்சள் பெயிண்ட் அடித்து தோனியின் படத்தை வரைந்து வைக்கும் அளவுக்கு தீவிர ரசிகர். ஒரு கல்யாணவீட்டில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கிறார், பரிதவிக்கிறார், காதலில் விழுகிறார். சஞ்சனாவும் இவரை காதலிக்கிறார்.
ஒரு கிரிக்கெட் மேட்சில் காளிவெங்கட்டின் டீமில் விளையாடுகிறார் ஹரிஷ் கல்யாண். எதிர் டீமில் தினேஷ் விளையாடுகிறார். இவரது மகள் தான் சஞ்சனா என்பது ஹரிஷுக்குத் தெரியாது. எதேச்சையாக அல்ல, திட்டமிட்டே சஞ்சனா வீட்டுக்குப் போகும் போது தான் பூமாலை தான் தனது காதலியின் அப்பா என தெரிகிறது ஹரிஷுக்கு. அப்போது வீட்டு டி.வியில் “என் வாழ்க்கை இப்படி ஆகும்ணு நினைச்சுக்கூட பார்க்கல” என புகைபிடிப்பதற்கு எதிரான அரசு விளம்பர வாசகம் ஒலிப்பது செம கிளாஸிக்கல் காமெடி.
சாதிய வேறுபாட்டை அடித்து நொறுக்கும் வலுவான கதையை அற்புதமான சீன்களை கட்டமைத்து திரைக்கதையாக்கி, பார்வையாளனை படம் முழுவதும் பரவச நிலையிலேயே வைத்திருக்கும் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கலாம். இந்த நல்ல வி[க]தைக்கு செழிப்பான விளைக்களம் அமைத்துக் கொடுத்த தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமாரை கை வலிக்க குலுக்கலாம், மனம் குளிர பாராட்டலாம்.
படத்தில் ஹீரோக்கள் ஹரிஷ் கல்யாணா? அட்டக்கத்தி தினேஷா? என்றால், இந்தக் கதைக்குள் தங்களைச் செலுத்திக் கொண்ட இருவருமே ரசிகர்கள் மனதில் ஹீரோக்களாக உயர்ந்து நிற்கிறார்கள்.
சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளிவெங்கட்டின் மகளாக வரும் அகிலா [ கேரக்டர் பெயர் ] போன்ற பெண் கதாபாத்திரங்களை உயர்வாகவும் மரியாதைக்குரியதாகவும் வடிவமைத்து பெருமைப்படுத்தியதற்காக இயக்குனருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
[ இந்தப் படம் குறித்த மேலும் பல ஆக்கப்பூர்வமான விமர்சனக் கருத்துக்களை நமது ‘அங்குசம்’ யூடியூப்பில் ஒலி வடிவில் கேட்கலாம் ]
–மதுரை மாறன்