தேர்தல் பரிசு பொருள் கொடுப்பதில் தகராறு ! இளம்பெண் தற்கொலை ! நடந்தது என்ன ?
திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 8000 ரூபாய் கூப்பன் விநியோகத்தின்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிவரும் நிலையில் ...
தேர்தல் பரிசு பொருள் கொடுப்பதில் தகராறு ! இளம்பெண் தற்கொலை ! நடந்தது என்ன ?
திருச்சியில் தேர்தல் பரிசு பொருட்கள் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் 25 வயது பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேர்தல் பரபரப்புக்கிடையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சி மாவட்ட போலீசார் விரிவான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், “திருச்சிராப்பள்ளி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாழைக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த சிந்துஜா (25) என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 13.04.2026 ஆம் தேதி இரவு சுமார் 07.30 மணியளவில் திமுக கட்சியினர் கொடுக்க சொன்ன பரிசு பொருட்களை வாழைக்கட்டையைச் சேர்ந்த 1. ராஜா 2. ராஜேந்திரன் 3.ரவிக்குமார், 4.ராஜ்குமார் 5.சுரேஷ்குமார் ஆகியோர் சேர்ந்து மேற்படி கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். அதன்படி, மேற்படி சிந்துஜா தனக்கு பரிசு பொருள் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மேற்படி நபர்கள் எங்களது பங்காளிகள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு மட்டும் தான் கொடுப்போம் என்று கூறியுள்ளனர்.

அதற்கு மேற்படி சிந்துஜா, நான் வேட்பாளர் வாக்கு சேகரிக்க வரும்போது கேள்வி கேட்பேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேற்படி பரிசு பொருள் வழங்கியோர்கள் சிந்துஜாவின் முடி மற்றும் சுடிதார் பிடித்து இழுத்து, அசிங்கமான வார்த்தையால் திட்டி கீழே கிடந்த துடைப்பைக்கட்டையால் அவரை அடித்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
அதன்பிறகு மனஉளைச்சலில் இருந்து வந்த சிந்துஜா (14.04.2026)- ஆம் தேதி வெளியூரில் இருந்த வீட்டிற்கு வந்து கதவைத் தட்டிய தனது கணவரிடம் இவ்வளவு பிரச்சனை நடந்துள்ளது நீ யாரையும் கேட்க மாட்டியா என திட்டியுள்ளார். அதற்கு பிரசாந்த் காலை பார்த்துக்கொள்ளலாம் இப்போது நீ போய் தூங்க செல் என்று கூறியள்ளார்.
உடனே மேற்படி சிந்துஜா, அவரது கணவரான பிரசாந்தை வெளியே போடா என்று தள்ளிவிட்டு, கதவை தாழிட்டு உள்ளே சென்றுவிட்டார். உடனடியாக பிரசாந்த் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்க்கும்போது சேலையில் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டிருந்தார். உடனடியாக சேலையை அறுத்து இறக்கி அருகில் உள்ள சுகம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது அங்கே சிந்துஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுசம்பந்தமாக, இறந்த சிந்துஜாவின் தாயார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் காவல் நிலைய குற்ற எண். 65/26, U/s 296(b), 115(2), 351, 79, 108 BNS r/w 4 of TNWH ACT r/w 171, 123(1) (a) of the Representation of People ACT 1951 ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் எதிரிகளான 1 ராஜா 2. ராஜேந்திரன் 3.ரவிக்குமார், 4.ராஜ்குமார் 5.சுரேஷ்குமார் 6.ராஜா மனைவி புஷ்பம் 7.ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி 8.ரவி மனைவி கார்த்திகா 9.அங்குமணி ஆகியோர்களில் 1. ராஜா 2. ராஜேந்திரன் 3. ரவிக்குமார் 4. ராஜா மனைவி புஷ்பம் 5.ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி 6. அங்குமணி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை இலஞ்சமாக கொடுத்து ஓட்டுக்கள் வாங்குவதை தவிர்த்து, நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கும் மக்கள் எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் சுயசிந்தனையோடு வாக்களிப்பதை உத்தரவாதப்படுத்தும் நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு கெடுபிடிகளையும், தீவிர கண்காணிப்பையும் பலப்படுத்திவரும் நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இந்த துயர சம்பவத்தையும் அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட 8000 ரூபாய் கூப்பன் விநியோகத்தின்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிவரும் நிலையில், பரிசு பொருள் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு என்பதையும் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதையும் போலீசார் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
- அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.