மருத்துவம் சார்ந்த 20 பி.எஸ்.சி பட்டப் படிப்புகள் – ஓர் அறிமுகம் !
12 ஆம் வகுப்பு பரீட்சை எழுதி விட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவரா நீங்கள்? பன்னிரெண்டாம் வகுப்பில் பயாலஜி / உயிரியல் துறையைத் தேர்ந்தெடுத்து மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் ஆர்வம் இருப்பவரா நீங்கள்? நீட் பரீட்சை எழுதாமல் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கொண்டே படிக்கத்தகுந்த மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகள் குறித்து அறிய ஆர்வம் இருப்பவர்களா நீங்கள்?
- பி.எஸ்சி விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொழில்நுட்பம் ( Bsc Accident & Emergency Care Technology)
இந்தப் படிப்பில் – அவசர சிகிச்சைப் (CASUALTY & EMERGENCY DEPARTMENTS) பிரிவில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கு உதவும் வகையிலும் சிகிச்சைக்கான அடிப்படை அனைத்தும் பயிற்றுவிக்கப்படும்.
- BASLP ( BSc Audiology Speech Language Pathology ) பி எஸ்சி செவிப்புலவியல் பேச்சு மொழி சார்ந்த நோயியல் தொழில் நுட்புணர்.
இந்த படிப்பில் மனிதர்களின் செவித்திறன் குறைபாடு , செவிப்புலன் மற்றும் பேச்சு அதை ஒட்டிய அனைத்து நோய்கள் மற்றும் அதைத் தீர்க்கும் வழிகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படும்.
- பிஎஸ்சி இதயம் சார்ந்த தொழில்நுட்பம் ( Bsc Cardiac Technology)
இந்தப் படிப்பில் இதயம் சார்ந்த உடற்கூறுயியல், இயங்குவியல், நோயியல் , நுண்ணுயிரியில், மருந்தியல் , மருத்துவ உபகரணங்கள் , மருத்துவ இயற்பியல் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.
- பிஎஸ்சி இதய நுரையீரல் ரத்த ஓட்ட தொழில் நுட்பம் (Bsc Cardio pulmonary Perfusion Techonology)
இந்த படிப்பு சார்ந்த இதயம் மற்றும் நுரையீரலுக்கான அடிப்படை மருத்துவ கல்வி புகட்டப்படும்.
- பிஎஸ் சி மருத்துவ ஊட்டச்சத்தியல் தொழில்நுட்பம் (Bsc Clinical Nutrition)
இந்தக் கல்வியில் அடிப்படை & மேம்பட்ட ஊட்டச்சத்தியல் , உணவு சார்ந்த பரிந்துரை வழங்குதல் போன்றவை குறித்து களப்பயிற்சி வழங்கப்படும்.
- பி எஸ்சி தீவிர சிகிச்சை தொழில்நுட்பம் (BSc Critical Care Technology)
இந்தப் படிப்பில் அடிப்படை மருத்துவ கல்வியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் (INTENSIVE CARE) நோயாளிகளை கண்காணிப்பது குறித்து அடிப்படை மற்றும் மேம்பட்ட கல்வி வழங்கப்படும்.
- பிஎஸ்சி டயாலசிஸ் டெக்னாலஜி (Bsc Dialysis Technology)
சிறுநீரக துறை சார்ந்த அடிப்படை மருத்துவ கல்வி, சிறுநீரக செயலிழப்பில் உயிர்காக்கும் சிகிச்சையான டயாலசிஸ் கற்றுத்தரப்படும்.
- பிஎஸ்சி – நரம்பியல் மின் இயங்குவியல் தொழில்நுட்பம் (Bsc Neuro Electro Physiology )
இந்த படிப்பில் மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த அடிப்படை மருத்துவக் கல்வியுடன் ஈஈஜி எனப்படும் மூளை மின் இயங்குவியல் பரிசோதனை செய்வதற்கான பயிற்சி வழங்கப்படும்.
- பிஎஸ்சி மருத்துவ ஆய்வக நுட்புணர் (Bsc Medical Laboratory Technology)
இந்த படிப்பில் மருத்துவ சமூகவியல் (sociology) மற்றும் நோயரின் மனோதத்துவவியல் ( psychology) அடிப்படை மருத்துவ துறை சார்ந்த கல்வி ( Basic life sciences) கற்றுத் தரப்படும்.
- பிஎஸ்சி மருத்துவ சமூகவியல் (BSc Medical Sociolgy )
மருத்துவத் துறை சார்ந்த அடிப்படை மருத்துவ கல்வி. சமூக நலன், சமூகம் சார்ந்த மருத்துவம், சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகள், மனித உரிமை, மருத்துவமனை நிர்வாக அடிப்படை, பேரிடர் மேலாண்மை , சூழலியல் போன்றவற்றில் கல்வி புகட்டப்படும்.
11 . பிஎஸ்சி அணுக்கதிர் மருத்துவம் (BSc Nuclear Medicine )
இதில் எக்ஸ் ரே அணுக்கதிர் கொண்டு உடலியலில் ஏற்படும் மாற்றங்கள், பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு போன்றவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படும்.

- பிஎஸ்சி அறுவை அரங்கம் மற்றும் மயக்க மருந்தியல் தொழில் நுட்பம் (Bsc Operation Theatre & Anesthesia Technology)
அடிப்படை மருத்துவ கல்வியுடன் மயக்க மருந்து தரப்பயன்படும் கருவிகள் குறித்தும் அதை உபயோகித்தல், அவற்றை தொற்று நீக்கம் செய்தல், பராமரித்தல் குறித்தும் கற்றுத் தரப்படும்.
13.பிஎஸ்சி கண் பார்வை அளவையியல் (Bsc Optometry )
இந்தப் படிப்பில் கண் சார்ந்த நோய்கள் கண்டறியும் முறைகள், பார்வைக் குறைபாடுகளைக் களைய பரிந்துரைக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கல்வி புகட்டப்படும்.
- பிஎஸ்சி மருத்துவ உதவியாளர் (Bsc Physician Assistant )
மருத்துவத்துறையின் அடிப்படை கல்வி உடற்கூறியியல் இயங்குவியல். மருத்துவத்துறையில் அனைத்து துறைகளிலும் சென்று பணிபுரிந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு .
- பிஎஸ்சி செயற்கை உறுப்புகள் & மாற்றுத்திறனாளிகள் உதவிக் கருவி தொழில்நுட்பம் (Bsc Prosthesis & Orthotics )
செயற்கை உறுப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் கருவிகள் உருவாக்குதல் மற்றும் அதைப் பொருத்துதல் குறித்த கல்வி போதிக்கப்படும்.
- பிஎஸ்சி ஊடுகதிரியல் & ஊடுகதிர் படமெடுக்கும் தொழில்நுட்பம் (Bsc Radiography & Imaging)
எக்ஸ்ரே கருவிகள் , சிடி ஸ்கேன் கருவிகளை பராமரித்தல், அதன் மூலம் எடுக்கப்படும் படங்களை இருட்டறையில் கழுவுதல் , சிடி ஸ்கேன் எடுத்தல் ஊடுகதிர் கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுதல் போன்றவை குறித்து கற்றுத் தரப்படும்.
- பிஎஸ்சி ஊடுகதிர் சிகிச்சை தொழில்நுட்பம் (BSc Radiotherapy Technology )
எக்ஸ் ரே எனும் ஊடுகதிரை பயன்படுத்தி புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் கல்வி புகட்டப்படும். ஊடுகதிர் சிகிச்சை அளிக்க உதவும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் அதை பராமரித்தல் , சரியாக பயன்படுத்துதல் குறித்தும் கல்வி புகட்டப்படும்.
- பிஎஸ்சி மருத்துவ ஆவண அறிவியல் (Bsc Medical Record Science )
இந்தத் துறையில் மருத்துவ அடிப்படை கல்வி அனைத்தும் புகட்டப்படும். அத்துடன் மருத்துவ ரீதியான ஆவணங்களை பராமரிக்கும் கலை பயிற்றுவிக்கப்படும்.
- பிஎஸ்சி நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் (Bsc Respiratory Therapy)
இந்த படிப்பில் நுரையீரல் சிகிச்சை சார்ந்த அடிப்படை மருத்துவ கல்வி புகட்டப்படும்.
- பிஎஸ்சி மருத்துவ ஆய்வு பரிசோதனை & ஆய்வுத் தகவல்கள் மேலாண்மை தொழில்நுட்பம் (Bsc Clinical Trial & Clinical Data Management)
மருத்துவத் துறையில் மருந்துகள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம்.
இதில் அவரவர்க்கு உகந்ததை இன்னும் மேலதிகமாக ஆராய்ந்து விருப்பத்திற்கேற்ற படிப்பை படிக்கலாம்
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.








Comments are closed, but trackbacks and pingbacks are open.