எம்.ஜி.ஆரும் விடுதலைப்புலிகளும்
தமிழகத்தில் எந்த ஒரு பத்திரிகையை திறந்தாலும் ஒரே மாதிரிசெய்திகள் தான். அதில் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். உயிரோடு எரித்தும் கொல்லப்படுகிறார்கள். இலங்கைவாழ் மக்களின் துயரத்தை பார்த்த, கேட்ட தமிழக மக்களின் கண்கள் இரத்தம் சிந்துகின்றன.
இலங்கை இனப்படுகொலைக்கு கண்டன கணைகள் தமிழகத்தில் வீசப்பட்டன. மத்திய அரசுக்கு பல கட்சிகள் கோரிக்கைவைத்தன. குறிப்பாக 1983 ஜுலை மாதம் இலங்கைத்தீவில் எங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் திடீர் தாக்குதல்கள் தொடர்ந்தன.
சிங்களவெறியர்கள், சிங்கள காவல்துறை, சிங்கள இராணுவம், இவர்கள் கூட்டுச்சேர்ந்து, கொடூரத் தாக்குதல், கற்பழிப்பு, திருட்டுகள், கொலைகள், கொள்ளைகள் என பல நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர்.
இவைகள் வெளியில் நடந்தேறியவை. இலங்கை சிறையில் குட்டிமணி, தங்கத்துரை,ஜெகன் உள்ளிட்ட முக்கியப்போராளிகள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பின்பு கொல்லப்பட்டனர். இதற்கு முதல்வர் எம்.ஜி.ஆர் தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் ஒரு வார காலம் துக்கம் அனுசரிக்கவேண்டும் என்றார்.
2.8.1983 மாநிலம் தழுவிய பந்த்துக்கு முதல்வர் எம்.ஜி.ஆர் அழைப்பு விடுத்தார். அவருடைய நோக்கம் பிரதமர் இந்திராகாந்தியின் கவனத்தை ஈர்த்து, இலங்கை விவகாரத்தில் அவரை தலையிட வைப்பது. அதுபோல் எம்.ஜி.ஆர் நினைத்தது நடந்தது. மத்திய அரசு அலுவலங்கள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்படும் என பிரதமர் இந்திராகாந்தி அறிவித்தார்.
ஈழத்தமிழர்களின் விவகாரத்திற்கு மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டி தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர் தி.மு.க.வினர். இலங்கையில் இந்தியப்படை நுழைந்து தமிழ் ஈழத்தை உருவாக்கித் தருமானால், தமிழகத்தை காங்கிரஸ் கட்சியே ஆளட்டும் தி.மு.க 10ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்கக்கூட முயற்சி செய்யாது என்றார் கருணாநிதி.
ஈழப்போராளிகள் அனைத்துப்பிரிவினருக்கும் ஒரே இலட்சியம், ஒரேநோக்கம் தனி ஈழம் என்று தங்களுக்குள் பிரிவுகளுடன் தமிழகத்தில் நுழைந்து, ஆனால், பல பிரிவினைகளுடன் பிரிந்து கிடந்தனர்.
எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் போட்டிபோட்டுக்கொண்டு இலங்கை தமிழர்களை ஆதரிக்கின்றனர். நம்முடைய பங்களிப்பு என்ன? என்று யோசிக்கத் தொடங்கினார் இந்திராகாந்தி. அப்போது, அவரிடம் செல்வாக்கு மிக்க நபர்கள் சிலர் இலங்கைக்கு எதிராக அங்கும் சரி, தமிழகத்திலும் சரி, பல இளைஞர்கள் போராடுகிறார்கள். அவர்களை எல்லாம் ஒருங்கிணைந்து நாம் அனைவரையும் அழைத்து பேசுவோம்.
அதன் மூலம் இரண்டு லாபம். ஒன்று தமிழர்களின் ஆதரவு நமக்கு கிடைக்கும், மற்றொன்று அண்டை நாடான இலங்கையை தட்டி வைக்கவும், குட்டிவைக்கவும் குறிப்பாக திரிகோண மலை துறைமுகத்தை நாம் கண்காணிக்க முடியும். எனவே, தமிழ்போராளிகளுக்கு மத்திய அரசு உதவுவதில் தவறில்லை என்றனர். உதவி என்றால் எப்படிப்பட்ட உதவி இந்திரா கேட்டார். ஆயுதங்கள், துப்பாக்கிகள் கொடுப்போம்.
நம் இராணுவத்தையும் உளவுத்துறை அதிகாரிகளையும் வைத்து பயிற்சிகள் கொடுப்போம். மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இந்த யோசனை பிடித்துபோய் ஆயுதம் மற்றும் பயிற்சிகொடுப்பதில் இந்திய உளவுத்துறை முதலில் தேர்வு செய்தது டெலோ இயக்கத்தை தான். தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் பயிற்சி பாசறைகள் அமைக்கப்பட்டன.டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ப்ளொட், ஈராஸ், விடுதலைப்புலிகள் எல்லோருக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
சென்னை பாண்டி பஜாரில் துப்பாக்கிச்சண்டை என்ற தகவல் எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இலங்கை சார்ந்த மூன்று பேர் கைது. அதுவும் ஆயுதங்களுடன். பத்திரிகைகளில் பிரபாகரன், உமா(முகுந்தன்)கைது பற்றிசெய்திகள், தமிழக காவல் துறை அதிகாரிகள் எம்.ஜி.ஆரிடம் பரபரத்தனர்.
தமிழ் இளைஞர்கள், அதுவும் ஆயுதங்களுடன். புரிந்துவிட்டது எம்.ஜி.ஆருக்கு. சூழ்நிலை புரிந்து கண்ணை அசைத்தார். பிரபாகரன், உமா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது, காவல்துறை அதிகாரிகளைப்பார்த்து குறிப்பாக உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸிடம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சொன்னது, ‘’பையன்கள் விஷயத்தில கொஞ்சம் பாத்துப்போங்கப்பா!’’ என்றார்.
– ஹரிகிருஷ்ணன்