இன்றும் இதயக்கனியாக எம்.ஜி.ஆர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெற்ற விருதுகளும், பரிசுகளும் பாராட்டுகளும் ஏராளம்! ஏராளம்!!.ஆனால் தான் பெற்ற விருதுகளிலேயே பெரிய விருதாக அவர் கருதியது பேரறிஞர் அண்ணா தன்னை ‘இதயக்கனி’ என்று கூறியதை தான். அண்ணாவின் இதயக்கனியாக இருந்தார். மக்களின் இதயக்கனியாக திகழ்ந்தார். இன்றும் திகழ்கிறார்.
பேரறிஞர் அண்ணா சொன்ன இதயக்கனி என்று இதயத்தோடு கனியை இணைத்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை அழைத்தார். அதுபோல் நடிகர் கமலஹாசனின் 100வது படவிழாவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவ்வாறாக பேசினார். நாங்கள் 100 படிகள் ஏறிவந்துவிட்டோம். நீங்கள் அதற்குமேல் 101 என்று மேலே செல்ல வேண்டும். எங்கள் அனுபவங்களையும் யோசனைகளையும் படிகளாக்கிக்கொண்டு, உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும். 1,2,3 என்று ஆரம்பத்திலிருந்தே நீங்கள் படிகளில் ஏற வேண்டியதில்லை. நாங்கள் அந்த படிகளை கடந்து வந்து விட்டோம் என்பதால் நீங்கள் எங்களுக்கும் மேலே உயர உயர செல்ல வேண்டும். உங்களைக்கண்டு உலகமே வியந்து போற்றுவதைக்கண்டு நாங்கள் பெருமைப்பட வேண்டும். இங்கே உள்ள கலைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்தாக இதனை தெரிவிக்க விரும்புகிறேன்.
அத்தகைய மாபெரும் விழாவில் அவர் பேசிய இந்த கருத்துக்கள், யாருக்காக, எதற்காக பேசினார் என்பது பலருக்கு புரியவில்லை. ஆனால் அந்த பேச்சை புரிந்த சாதாரண மனிதன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சொறிந்தார். ரத்த அழுத்தம் ஒவ்வொருவருக்கும் 120/80 இருக்க வேண்டும்.
அது கூடினால், குறைந்தால் உடல் நலத்திற்கு நல்லதல்ல. உடல் நலம் கெடுவதற்கு மனம் தான் முக்கிய காரணம் எதையும் சந்தித்து சமாளிக்கின்ற துணிவும், திறனும் உள்ளவர்கள் மனதையும் உடலையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். உடல்நலம் சீராக இருந்தால் எந்த சாதனையும் செய்யலாம். இப்படிக் கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான கூடியிருந்த கூட்டத்தில் முன்னாள் அமர்ந்திருந்த ஒருவர் மீது எம்.ஜி.ஆரின் பார்வை கனிவோடு பதிந்தது. தாய்பசு தனது கன்றை நாவினால் தடவி பாசத்தையும் பரிவையும் காண்பிப்பது போல, எம்.ஜி.ஆர். தனது பார்வையால் அன்பிற்குரியவரை ஆரத்தழுவிக்கொண்டு ஆறுதல் வழங்கினார். யார் அந்த மனிதர்? என்னதான் நடந்தது? என்பதை விவரித்தால்தானே விவரித்தால்தானே விசயம் புரியும் என்கிறீர்களா?
ஒரு நாள் இரவு சினிமாவில் கிளைமாக்ஸில் கடுமையான மழையும் மின்னலும், நெஞ்சை உலுக்கும் இடியும் கிளம்புவதைப்போல, உண்மையிலேயே பேய்மழை கொட்டிக் கொண்டிருந்தது. சென்னை நகரத்தின் மத்திய பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து பெண்மணி ஒருவர் கலவரத்தால் முகம் வெளிறிப்போய் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தார். அருகில் இருந்த டாக்டர் ஒருவர் இல்லத்திற்கு சென்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தார்.
மருத்துவரின் துணைவியார் தனது கணவர் வீட்டில் இல்லை என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கதவை தாளிட்டுக்கொண்டார் அவசரஅவசரமாக. காரணம். நல்ல மனிதரான டாக்டர் வெளியே பேசும் சத்தம் கேட்டு எழுந்து வந்துவிடக்கூடாதே என்ற பரோபகார சிந்தனைதான் அந்த பெண்மணிக்கு. வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மழையில் நனைந்தபடி பதட்டத்துடன் அங்கும் இங்கும் அலைந்தபடி இருக்கும் அந்த பெண்மணியிடம் என்னவென்று விசாரித்தார். தனது கணவர் உடல் நலம் சரியின்றி துடிதுடிப்பதை அந்த பெண்மணி கண்ணீர் மல்க தெரிவித்தார். உடனே எதிர்வீட்டில் இருந்த அந்த காவல்துறை அதிகாரி தனது மகனை அனுப்பி ஒரு ஆட்டோ பிடித்து வருமாறு கூறினார்.
அதன்பின் எல்லாமே சொல்லி வைத்தாற்போல சுறுசுறுப்பாக நடந்தது. அந்த பெண்மணியின் கணவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ராமாவரம் தோட்டத்திற்கு அந்த காவல்துறை அதிகாரி தொலைபேசியில் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் நடந்ததை கூறிவிட்டார். இரவு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை நடந்ததோ இல்லையோ ஒவ்வொரு மணிக்கொருமுறை எம்.ஜி.ஆரின் விசாரணை நோயாளிக்கு அதிக தெம்பை தந்தது. அந்த நோயாளிக்கு இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. அவரது துணைவியும் கவலையோடு கணவரின் அருகிலேயே கண்விழித்து இருந்தார். தமிழகத்தின் அன்றைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அந்த சாமானிய மனிதருக்காக இரவு முழுவதும் விழித்திருந்து விசாரித்தபடி இருந்தார். நமக்கு எதுவும் ஆகிவிடாது. அப்படியே எது நடந்தாலும் நமக்காக கவலைப்படவும் கண்ணீர் விடவும் “மனித தெய்வம்” ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கைதான் நோயாளியை அந்த கொடிய இரவிலிருந்து மீட்டுக்கொண்டு வந்தது.
மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் நோயாளிக்கு தீவிர சிகிச்சை அளித்ததை விட மிகத்தீவிரமாக எம்.ஜி.ஆர். இவ்வளவு ஈடுபாட்டுடன் கேட்கின்ற அளவும் தொடர்பும் பழக்கமும் எப்படி ஏற்பட்டது என்று கேட்பதில் அதிக ஆர்வம் காண்பித்தனர். எப்படியோ மருத்துவமனையிலிருந்து விடுபட்டு அந்த நோயாளி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவர் பணிபுரிந்த அலுவலகத்திலிருந்து மாத ஊதியத்தை மாதாமாதம் ஒரு அலுவலர் கொண்டு வந்து கொடுத்தார். அவர் அலுவலகத்திற்கு எப்போது வந்தாலும் சரி, வராமல் இருந்தாலும் சரி மாதம் தவறாமல் ஊதியத்தை அவர் வீட்டிலேயே கொண்டுபோய் கொடுத்துவிடுங்கள் அவர் அண்ணா நாளிதழிலும், எனக்காகவும் விசுவாசமாக பாடுபட்டவர் என்று எம்.ஜி.ஆர். கூறியதாக அலுவலக ஊழியர் தெரிவித்த இன்னும் பல வார்த்தைகள் நோயாளியின் கண்களை அருவியாக்கின. எவ்வளவு பெரிய உள்ளம். அதனால்தான் பொன்மனச்செம்மல் என்று வாரியார் கூறியதை மக்கள் பூரிப்போடு போற்றுகின்றனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை மனதால் வணங்குகிறார்கள்.
-ஆர்.பி.பூபேஷ்