கமிஷனுக்காக விதியை மீறும் அதிகாரி நடவடிக்கை எடுக்குமா இரயில்வே நிர்வாகம்

0

இந்திய இரயில்வே விதிமுறைகளின் படி உயர்அதிகாரிகள் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் கார்களை வாடகைக்கு வைத்துக்கொள்ளலாம். அதற்கான ஒப்பந்தத்தொகையினை இரயில்வே துறையே ஏற்றுக்கொள்ளும். இந்த விதியின் படி இந்தியா முழுவதிலும் உள்ள இரயில்வே கோட்டங்களில் எண்ணற்ற அதிகாரிகள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், தங்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகளையும் முறைகேடாக பயன்படுத்தி அதில் லாபம் அடையும் அதிகாரிகளும் தற்போது இரயில்வேத்துறையில் உலாவரத்தொடங்கியுள்ளனர்.

உதாரணமாக, தென்னக இயில்வே திருச்சிகோட்டத்தில் பணியாற்றும் சீனியர் டி.சி.எம் அருண்தாமஸ் கலாத்திகல். இவருக்கு 3 கார்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்குகின்றன. பொதுவாக, ஒப்பந்தில் இயங்கும் வாகனங்கள் வாடகை செல்லக்கூடிய எல்லோ போர்டு வண்டியாகவே இருக்க வேண்டும் (மஞ்சள் கலர் எண் பலகை கொண்ட வாகனம்). இவருக்கு இயங்கக்கூடிய இந்த 3 கார்களும் ஓன் போர்டு வண்டிகள்(வெள்ளை கலர் எண் பலகை கொண்ட வாகனம்).

இது பற்றி இரயில்வே துறையில் பணியாற்றுபவர்களிடம் பேசுகையில், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம் ஒன்போர்டு வண்டியை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கி ரயில்வேயிடமிருந்து வாடகையை பெற்றுக்கொள்கிறார். மேலும் வாகன உரிமையாளர்களிடம் இருந்து கமிஷனையும் பெற்றுக்கொள்கின்றார் அருண்தாமஸ் கலாத்திகல். பொதுவாக, ஓன்போர்டு வண்டிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையில் எப்சி போடுவதற்கான கால அவகாசம் இருக்கும். ஆனால், வாடகை வண்டியான எல்லோ(டி) போர்டுக்கு அவ்வாறு கிடையாது வருடம் ஒரு எப்சிக்கு விட்டே ஆக வேண்டும். 365நாட்களும் எப்படியும் அவர்கள் வாகனத்தை பயன்படுத்தப்போவதில்லை. ஆனால், இரயில்வே துறையில் இருந்து அவர்களுக்கு எல்லா நாட்களுக்கும் வாடகை பணம் வந்து கொண்டு தான் இருக்கும்.

சாதாரணமாக வாடகைவண்டிகள் வாங்கும் தொகையைவிடவும் இவர்களுக்கு சற்று கூடுதல் தொகையே இரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பெறுகின்றனர். அதன்படி மாதம் ரூ.30ஆயிரம் வரையில் கூட வரக்கூடும் என்கிறார்கள்.
இது பற்றி டெல்லியில் உள்ள தலைமை கண்காணிப்பு ஆணையாளர் அலுவலகத்திடம் புகார் தெரிவித்த தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாஜகவின் தேசிய குழு உறுப்பினருமான இலா.கண்ணன் கூறுகையில், திருச்சி ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் என்பதால், கோட்ட ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பது வழக்கம், இவ்வாறாக வரும் பொழுது ஒரு நாள் ஒன்போர்டு வண்டியில் இந்திய அரசு இலச்சினை ஒட்டப்பட்டிருப்பதைப்பார்த்து விசாரித்தேன்.

கமிஷனுக்காக ஓன்போர்டு வண்டிகளை சீனியர் டி.சி.எம் அருண்தாமஸ் கலாத்திகல் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. உடனே, இது குறித்த புகார் கடிதத்தினை தென்னக இரயில்வே திருச்சி கோட்ட மேலாளரிடம் கொடுத்தேன். பிறகு, அந்த வண்டியில் இருந்த இந்திய அரசின் இலச்சினை நீக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் அவர் மேற்கொண்டதாக தெரியவில்லை. எனவே, டெல்லி உள்ள தலைமை கண்காணிப்பு ஆணையாளரிடம்(சீப் விஜிலென்ஸ் கமிஷ்னர்), இந்த புகாரினை தெரிவித்தேன்.

 

 

புகார் கொடுத்து மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது தான், இந்த புகார் பற்றி நாங்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளோம் என்ற தகவல் எனக்கு வந்துள்ளது. நான் ஒரு வண்டிக்கு மட்டுமே இந்த புகாரினை அளித்துள்ளேன். ஆனால், தற்போது விசாரிக்கையில் அருண்தாமஸ் கலாத்திகல் இது போன்று 3 வண்டிகளை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ளார் என்கின்றனர் இரயில்வே துறை நண்பர்கள் என்றார்.

இது குறித்து சீனியர் டி.சி.எம் அருண்தாமஸ் கலாத்திகலிடம் கேட்டபோது, இலா.கண்ணன் உள்ளிட்டோர், அவர்களின் வேலையை முறையாக செய்யாமல், எனக்கு எதிராக பொய்யான கதைகளை கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.