இயற்கையின் விதிகளுடன் தொடர்புபடுத்தி கதைகளைக் கூறுதல் !
சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்க வேண்டும்? தொடர் – 02
இயற்கையை மையமாகக் கொண்ட சிறார் கதைகள் குழந்தைகளுக்கு நேர்மறையான எண்ணங்களையும், சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, படைப்பாற்றலை வளர்க்கும்.
மனித குலத்தின் வளர்ச்சிப் படிநிலைகளில் இயற்கை பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கையின்றி நாம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாம் சிறுவர்களாக இருக்கும் போது நமக்கு கற்பிக்கப்பட்ட பெரும்பாலான கற்பிதங்கள் கடவுள்களுடனும், பேய், பிசாசுகள் போன்ற மூடநம்பிக்கைகளுடனும் தொடர்புபடுத்தியே கூறப்பட்டது. உண்மை நிலையுடன் இயற்கை சார்ந்து நமக்கு ஒருபோதும் கற்பிக்கப்படவில்லை.
அதன் விளைவு நாம் இன்று இயற்கையை அழித்து ரசாயன வலையில் சிக்கிக் கொண்டு, சோற்று உருண்டைகளுக்கு பதில் மாத்திரை உருண்டைகளை விழுங்கிக் கொண்டிருக்கின்றோம். இயற்கையையின் இயல்பை மறந்து, ஆக்கப்பூர்வமான அறிவியல் தன்மையையும் இழந்து, அறிவியல் மூட நம்பிக்கையுடைய மானிடப் பதர்களாக மாறி மழுங்கிக்கொண்டிருக்கின்றோம்.
குழந்தைகளுக்கான இயற்கை கதைகளை உருவாக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளது.
எளிமையான மொழிநடை:
வார்த்தைகள் எளிமையாகவும், குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும். இயற்கையின் அழகை வர்ணிக்கும் போது உயிரோட்டமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
கற்பனைத் திறன்:
விலங்குகள், மரங்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் மனிதர்களைப் போலப் பேசுவது போலவும், சிந்திப்பது போலவும் கதைகள் எழுதுவது சிறுவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு:
இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம், மரங்களின் முக்கியத்துவம் மற்றும் உயிரினங்களின் மீது அன்பு செலுத்துதல் ஆகியவற்றை கதையின் வழியாக ஆழமாகப் பதிக்க வேண்டும்.

அறிவியல் உண்மைகள்:
கதைகளோடு சேர்த்து சிறிய அறிவியல் உண்மைகளையும் கூறலாம். உதாரணமாக, மழை எப்படி வருகிறது, விதை எப்படி முளைக்கிறது என்று சுவைபட கூறலாம்.
நேர்மறை முடிவுகள்:
கதையின் முடிவுகள் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருவதாக இருக்க வேண்டும். இயற்கை நமக்கு எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது என்பதை மையமாக வைக்கலாம்.
மேலும், இயற்கையை அழித்தால் மனித குலம் எதிர் காலத்தில் என்ன மாதிரி விளைவுகளை சந்திக்கும் என்பதைக் குறித்து கற்பனை நடையில் கதைகளை எழுதலாம். மேலும் அவ்விளைவுகள் ஏற்படாமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் கதைகளில் அவசியம் கூறுதல் வேண்டும்.
இயற்கை விதிகளுடன் தொடர்புபடுத்தி கூறுகின்ற கதைகளால் நம்முடைய அடுத்தத் தலைமுறை இயற்கையுடன் இணைந்து வாழும் தலைமுறையாக மாற்றம் பெறும். மேலும், இந்த பூமி எல்லோருக்குமானது என புவியில் வாழும் பல்லுயிர்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாத தலைமுறையாக வளர்ந்து வரும் என்பதில் ஐயமில்லை.
மனித அளவீடு சார்ந்த கதைகள் எப்படி கட்டமைக்க வேண்டும் என்பது குறித்து அடுத்த வாரம் பேசுவோம்.
(தொடரும்)
– கார்த்திகா கவின் குமார்
( எழுத்தாளர், கதைசொல்லி)
திருச்சி.







Comments are closed, but trackbacks and pingbacks are open.