அரிதான வலம்புரி சங்கு !
இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் ! பாகம் – 09
கடந்த தொடரில் கடல்வாழ் சிற்றினத்தின் ஒரு வகைதான் சங்குகள் என்பதையும் அதன் வகைகளையும் பார்த்தோம். முந்தைய தொடரில் குறிப்பிட்ட, ஐந்து வகை சங்குகள் போக மிகவும் அரிதான வலம்புரி சங்கு Turbinella pyrum வகைகளைச்சார்ந்த வகைகள் தான். இவை பெரும்பாலும் லட்சத்தில் ஒன்று அல்லது 2 லட்சத்தில் ஒன்று தான் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இவை தனியான வகையோ அல்ல. பிறப்பின் கோளாறு. அதாவது மனித இனத்திலோ அல்லது மிருக இனத்திலோ நாம் காணும் Genetic Mutation மூலமாக உருவாகும். வலம்புரி அல்லது தட்சிணாமூர்த்தி சங்கு மன்னார் வளைகுடா மற்றும் சோழ மண்டலக் கடற்கரையில் எப்பவாவது கிடைப்பதுண்டு. எல்லாக் கடல்களிலும் கிடைக்கும் பொதுவான சங்குவிற்கு “வாமாவர்தி” என்று பெயர் உண்டு.
இதற்கிடையில் “இரு பிறவி” என்று அழைக்கப்படும் ஒரு வகை சங்கு மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியில் அரிதாகக் கிடைப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். இவை பிறப்பால் மாறுபட்டவை. முக்கியமாக, அதிகமாகக் கிடைக்கக் கூடிய இரண்டு வகையான சங்குகளாகிய ‘ஜாதி’ மற்றும் ‘பட்டி’ சங்குகளின் வெளிப்புறக் குணங்களைத் தன்னகத்தே அடக்கி உருவாகியவை. இந்த வகையான சங்குகளை இரு பிறவி என்று அழைத்தார்கள். இவைகள் இருமேனி கடல் பகுதிகளில் அதிகமாகக் கிடைப்பதாகவும் கூறுகின்றனர் (கமால்,2015).
4.5 இந்தியக் கடல்பகுதியில் சங்குகள் கிடைக்கும் பகுதிகள்
இந்தியாவின் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் ஓரங்களில் குமரி முனையிலிருந்து கோடியகரை வரைக்கும் சங்குகள் அதிகமாகவும், கோடியகரையிலிருந்து சென்னை கடல் வரை மிதமாகவும், சென்னை கடலிலிருந்து ஆந்திராவின் கோதாவரி ஆற்று முகப்பு வரை மிகக் குறைவாகவும், வலுவில்லாத சங்குகளாகவும் தான் கிடைக்கின்றன. சோழ மண்டக் கடற்கரையில் குமரிமுனையிலிருந்து சென்னை கடல் வரைக்கும் கிடைக்கும் சங்குகளை Turbinella pyrum var.obtusa அல்லது தமிழில் ‘பட்டி’ என்று அழைப்பார்கள். இதுபோல் தென்மேற்கு அரபியே கடல் ஓரங்களில் கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரைக்கும் அதிகமான சங்குகள் கிடைக்கின்றன.திருவனந்தபுரத்திலிருந்து கட்ச் வளைகுடா வரைக்கும் சங்குகளைக் காண்பது அரிதாக இருப்பதாகவும் அதன்பின் குஜராத்தின் ‘கட்ச்’ வளைகுடா பகுதியில் அதிகமாக, நல்ல தரமான சங்குகள் கிடைப்பதாகவும் தெரிகிறது. இந்திய அரபி கடல்களில் கிடைக்கும் சங்குகள் மிகத் தரமான, விலை மதிக்கத்தக்க Turbinella pyrum var.acuta வகையைச் சார்ந்தது என்றும், இதைத் தமிழில் ‘ஜாதி’ சங்கும் என்றும் அழைக்கின்றனர்.
இவைகளில் நல்ல, வளமான சங்குகள் கிடைக்கும் இடங்கள் தென் கோடியில் அமைந்திருக்கும், மன்னார் வளைகுடாவும், பாக் ஜலசந்தியும் தான். இங்கு 10 முதல் மீட்டர் ஆழங்களில் அதிகமாக நல்ல சங்குகள் கிடைப்பதாகவும் மற்றும் இலங்கை கடல் ஓரங்களில், கிழக்கு கரையிலுள்ள புத்தளம் முதல் தெற்கு கரையிலுள்ள திரிகோணமலை வரைக்கும் அதிகமான நல்ல சங்குகள் எடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் இந்தியர்கள்தான் ஆரம்பத்தில் இலங்கை சங்கு குளிப்போர்களாக இருந்தார்கள். இலங்கை சுதந்திரத்திற்குப் பின் இந்தியர்கள் அங்குச் செல்வதில்லை. அதனால் சங்கு எடுப்பதும் வெகு காலமாகக் குறைந்துவிட்டது. இது தவிர இந்தியக் கடலில், மற்றுமொரு வித்தியாசமான சங்குகள் அந்தமான மற்றும் நிகோபார் தீவுகளில் கிடைக்கின்றன. அவை மிகப் பெரிதாகவும், அழகாகவும் இருக்கின்றன. அவற்றை Turbinella pyrum var.fuses என்று அழைக்கிறார்கள்.
அடுத்த தொடரில், தமிழகத்தில் இராமநாதபுரம் பகுதியில் நடைபெறும் சங்குத்தொழில் குறித்து பேசுவோம்.
(தொடரும்)







Comments are closed, but trackbacks and pingbacks are open.