இருபிறவியா அல்லது இருமேனியா?
இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் ! தொடர் – 14
இருபிறவியா அல்லது இருமேனியா? என்ற குழப்பமான தரவுகள் இருப்பதை கடந்த தொடரில் பார்த்தோம். அந்த குழப்பத்திற்கான தெளிவை இந்த தொடரில் பார்ப்போம்.
4.11 இருபிறவியா அல்லது இருமேனியா?
பல நூற்றாண்டுகளாக இருமேனி கடலோரப் பகுதியில் “இருபிறவி” சங்குகள் கிடைத்தமைக்குத் தகுந்த சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. அதாவது முஸ்லீம்கள் இருமேனி ஊரை உருவாக்குவதற்கு முன் சங்கு வியாபாரிகளும், சங்கு குளிப்போரும் ‘இருபிறவி” ஊருக்கு வருடம் வருடம் சென்று கொண்டிருந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் பறவர்களும், கரையர்களும் பின் முஸ்லீம்களும் இங்கு “இருபிறவி” சங்குகளை எடுத்தும், விற்றும் வந்துள்ளனர். நாளடைவில் சங்கு தொழிலில் முஸ்லீம்கள் அதிகமான ஈடுபாடு கொண்டதால், அங்குக் கிடைக்கும் “இருபிறவி” சங்குகளை வேதாளை, பெரியபட்டினம், கீழக்கரை போன்ற ஊரிலுள்ள சங்கு தொழிலுள்ளவர்கள் பல நூற்றாண்டுகளாகத் தெரிந்து வைத்துள்ளனர்.
இருமேனியில் கிடைக்கும் இருபிறவி சங்கு பார்ப்பதற்குக் கொஞ்சம் ஜாதி சங்கு போலவும் (Turbinella pyrum var.auta) கொஞ்சம் பட்டி போலவும் (Turbinella pyrum var.obtuse) காணப்படும். அதனால் அந்தப் வகையை “இருபிறவி” என்று அந்த பகுதி மக்கள் அழைத்திருக்கின்றனர். ஆனால் உண்மையில் “இருபிறவி” என்றால் என்ன? இரண்டு முறை அல்லது இரண்டு தடவை பிறப்பது அல்லது அவதரிப்பது. அப்படியென்றால் இருபிறவி சங்கு இரண்டு முறை பிறந்ததா? இல்லை! இருபிறவி சரியான பெயர் அல்ல.
சரித்திர, விஞ்ஞானக் கட்டுரைகளில் இருமேனி இல்லை இருபிறவி தான் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், தேடினால் இருமேனி பெயர் கொண்ட சங்கு கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிக வழக்கீட்டில் இல்லாததால் இருபிறவி மட்டும் எழுதப் பெற்றிருக்கலாம். இருபிறவி சங்கு பல கட்டுரைகளில் இடம் பெற்றிருந்தாலும், பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் Hornel (1914), எழுதிய ஆரம்பக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவையே. Hornel (1914) சில வருடங்கள் தான் சென்னையில் இருந்திருக்கிறார். சில மாதங்கள் மன்னார் வளைகுடா, சோழமண்டலப் பகுதியில் வலம் வந்துள்ளார். அதனால் அதிகமாகப் பேசப்பட்ட அல்லது ஆராய்ச்சிகளில் தொடர்பு கொண்டவர்கள் “இருபிறவி” மட்டுமே தெரிந்தவர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு. குறுகிய காலம் இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் வேலை செய்த காலத்தில் அவர் செய்த ஆராய்ச்சி கட்டுரைகள் போற்றுதலுக்குரியது. அவருடைய கட்டுரை இல்லையெனில் இருமேனியை கண்டுபிடித்திருக்க முடியாது. அஃது ஒரு புதிராகவே இருந்திருக்கும். இருமேனி மக்கள் புதுபுது கற்பனையில் வளம் வந்து கொண்டிருப்பார்கள்.
முடிவுரை
இதுவரை ஆராய்ந்த மூன்று வகை சங்குகளின் எந்தச் சங்கு ‘இருமேனி சங்கு’ என்று அறிய வேண்டும். அதன் பெயரில் பல நூற்றாண்டுகளுக்குப் பின் ‘இருமேனி என்ற கிராமம்’ உருவாக்கப்பட்டது என்று நாம் சிந்திக்கும் போது முதல் வகையான சங்கு, இருமேனி என்ற பெயர் உள்ள சங்குகள் அல்ல. ‘பட்டி’ வகையைச் சார்ந்த மற்றுமொரு சங்கு இருமேனி கடல் பகுதியில் அதிகமாகக் கிடைத்ததால் அதற்கு இருமேனி பெயர் வந்தது என்று கூறுவதும் பொருத்தமாக இல்லை. ஏனெனில் இருமேனி தோன்றியது சில நூற்றாண்டுகளுக்கு முன்தான். ஆனால் சங்கு குளிப்பது, விற்பது வங்காளத்திற்கு அனுப்பியது எல்லாம் பல நூற்றாண்டுக்கு முன்பே நடந்து கொண்டிருக்கிறது. அப்போது இருமேனி என்ற ஊரே இல்லை. அதே நேரத்தில் அதிகமாக இந்தக் கடலோரத்தில் கிடைக்கும் சங்கு ‘பட்டி’ அல்லது ‘ஜமாய் பட்டி’ போன்ற பெயர்களைத் தவிர வேறு இருமேனி பெயர் இருப்பதாகத் தெரியவில்லை.
இதன் மற்றொரு கோணத்தை, இத்தொடரின் இறுதிப்பகுதியில் பார்ப்போம்.
தொடரும்







Comments are closed, but trackbacks and pingbacks are open.