அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘நீளிரா’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : “ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ’ கார்த்திகேயன் எஸ்., கார்த்திக் சுப்புராஜ் & ஸ்பிரிட் மீடியா ரானா டகுபதி. இயக்கம் : சோமிதரன். நடிகர்-நடிகைகள் : நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவையூர், சித்து குமரேசன், கபிலா வேணு, நவயுகா, ஸ்வாதி கிருஷ்ணா, நமச்சிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், கஜராஜ். ஒளிப்பதிவு: செல்வரட்னம் பிரதீபன், இசை : கே, எடிட்டிங் : ராதா ஸ்ரீதர், ஸ்டண்ட் : தினேஷ் சுப்பராயன், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்

இலங்கையில் உள்நாட்டுப் போரை நிறுத்தி சமாதானம் செய்வதற்காக சென்ற இந்திய அமைதிப்படை [ ஐபிகேஎஃப்] மையம் கொண்டிருந்த காலத்தில் ஈழத்தமிழ்ப் பகுதியில் நடந்த ஒரு திருமண வீட்டில் ஒரு இரவு முழுக்க நீடிக்கும்  பதட்டமும் பயமும் தான் இந்த ‘நீளிரா’.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நீளிராஒரு பாழடைந்த சினிமா தியேட்டரில் முகாமிட்டிருக்கும் ஐபிகேஎஃப்பின் உயர் அதிகாரியிடம் திருமண வீட்டின் தலைவர் அனுமதிக் கடிதம் வாங்கும் காட்சியுடன் தான் படம் தொடங்குகிறது. ‘சிலோன் டீயின் பெருமை பேசியபடி அந்தக் கடிதத்தை இந்திய ராணுவ அதிகாரி [ கஜராஜ்] கொடுப்பதிலிருந்தே தெரிந்துவிடுகிறது அமைதிப்படையின் அடிப்பட்டை நோக்கமும் குணமும். கடிதத்தை வாங்கிவிட்டு வெளியே வந்து மேற்பகுதியில் துப்பாக்கியைப் பிடித்தபடி நிற்கும் இந்திய ராணுவ வீரனை ஏக்கத்துடனும் பயத்துடனும் பார்க்கும் அந்த தமிழனின் பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.

அந்த வீட்டில் திருமண ஏற்பாடுகளும் திருமண பலகாரங்களும் செய்யும் வேலைகளை பல கதைகளைக் கதைத்தபடி செய்கிறார்கள் பெண்கள். திருமணப் பெண் சித்து குமரேசன் முகத்தில் புன்னகை இருந்தாலும் மனசுக்குள் ஒருவித இறுக்கம் தெரிகிறது. சித்துவின் தாயார் கபிலா வேணுவின் முகமோ வெறுமை அடைந்துள்ளது. அந்த வெறுமையிலும் புலிப்போராளிகளுக்கு உணவு சமைத்துக் கொடுக்கிறார்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

பழைய ரணங்களையும் புதிய வலிகளையும் அசைபோடுகிறார்கள் ஆண்களும் பெண்களும். விடிந்தால் திருமணம். இந்தச் சூழலில் தான் போராளிகள் இந்த இடத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலுடனும் கையில் வரைபடத்துடனும் வருகிறார்கள் நவீன் சந்திரா தலைமையிலான நான்கைந்து ஐபிகேஎஃப் வீரர்கள். அந்த வீட்டை நோட்டமிடுகிறார்கள், பிறகு அந்த வீட்டுக்குள் நுழைந்து திருமண வீட்டாரை சிறை பிடிக்கிறார்கள்.

அமைதியாக பொழுது புலர்ந்ததா? அமைதிப்படை என்னவானது? ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் நமது மனசுக்குள் வலியையும் வேதனையையும் சுமந்து ஈழத்தமிழினத்திற்கு இன்று வரை விடிவு காலம் பிறக்கவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சுடன் தான் தியேட்டரைவிட்டு வெளியே வந்தோம்.

போராளிகள் நான்கு பேர், அமைதிப்படையினர் நான்கைந்து பேர். இவர்களை மட்டுமே  வைத்துக் கொண்டு பெரிய போர்க்களத்தையே நம் கண்களுக்கு காட்சிப்படுத்தியிருக்கார் இயக்குனர் சோமிதரன். பீரங்கித் தாக்குதலைக் காட்டவில்லை, ஷெல் குண்டுகள் வீச்சு இல்லை, டாங்கிகளின் பயமுறுத்தல் இல்லை, சதைகள் பிச்சு எரியப்படவில்லை, ரத்தம் தெறிக்கவில்லை. இதெல்லாம் இல்லாமல் ஈழத்தமிழர்களின் உயிர் வதையையும் பயத்தையும் பதட்டத்தையும் காண்பித்து நெஞ்சம் பதைபதைக்க வைத்துவிட்டார் சோமிதரன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நீளிரா“ராணுவம் என்றால்… ராணுவம் தான்”, “எங்களிடையே சமாதானப்படுத்த வந்த நீங்கள் துப்பாகியைத் தூக்கிக் கொண்டு வந்துள்ளீர்களே”, “இந்தப் போருக்கு முடிவே கிடையாது” போன்ற வசனங்கள், இந்திய-பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்த ஈழத்தமிழர், நவீன் சந்திராவிடம் பேசும் அந்தக் காட்சி, அந்த திருமண வீட்டில் இந்தியப் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி ஆகியோரின் புகைப்படங்கள், ஐபிகேஎஃப்பின் இரண்டு அணிகளை போராளிகள் வீழ்த்தியதை வயர்லெஸ் உரையாடல் மூலமே உயர்த்திப் பிடித்தது இவையெல்லாம் சோமிதரனின் உள்ளத்தில் உள்ள உண்மைகள். நமக்குச் சொல்லும் சேதிகள். விஜயகாந்தின் சினிமா வீடியோ கேஸட், சோமிதரனின் சரியான சாய்ஸ்.

அந்தக் கல்யாண வீட்டின் கதவு தட்டப்படும் சத்தத்தைக் கேட்டால் நமக்கே ஈரக்குலை நடுங்குகிறது. இதே போல் துப்பாக்கிகளின் குண்டுச் சத்தங்கள், ஷெல் குண்டு சத்தங்கள் இவையெல்லாமே உளவியல் ரீதியாக நம்மை ரொம்பவே பாதித்துவிட்டன. ஒலிவடிவமைப்பாளர் தபஸ் நாயக்கின் உழைப்பு தெரிகிறது.

ரூபா கொடுவையூருக்கும் புலிப்போராளி டாக்டர் தேவனுக்குமிடையிலான [ சனந்த்] காட்சிகள் இல்லாத, உணர்வுகளால் வெளிப்படுத்தும் ஃப்ளாஷ்பேக்கால் நம் நெஞ்சம் கனக்கிறது.  ஐபிகேஎஃப் வீரராக நவீன் சந்திரா மிகவும் அருமையாக நடித்துள்ளார்.

கல்யாணம் பற்றிய இரண்டு நிமிட பாடல் மட்டும் தான். மற்றபடி திருமண வீட்டாரின் வலி, வேதனை, திகில், சிறிய அளவு மகிழ்ச்சி இவற்றை தனது பின்னணி இசையாலேயே உணர்த்திவிட்டார் கே.

தமிழர்களின் திருமணங்களில் இதுவரை நாம் பார்த்திராத, கேள்விப்பட்டிராத க்ளைமாக்ஸ் காட்சியும் அதன் நீட்சியாக கபிலா வேணுவும் அந்த சிறுவனும் நிற்பது. நம் கண்களுக்குள் ஊடுருவி நின்றார்கள்.

உலகத்தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த ‘நீளிரா’வைப் பார்க்க வேண்டும், வலியை உணர வேண்டும். இதைத் தயாரித்த டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம், தெலுங்கு கதாநாயகன் ரானா டகுபதி ஆகிய மூவரும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள், தமிழர்களின் நேசத்துக்குரியவர்கள்.

அங்குசம் பார்வையில் ‘நீளிரா’ 90/100

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.