நீட் தேர்வு மனஅழுத்தம்: மாணவர் தற்கொலை – கல்வி வணிகமயமாவதாகக் குற்றச்சாட்டு!
17.06.2026 கோவை மாணவர் மரணம் குழந்தைகள் நலனில் அக்கறையில்லா ஒன்றிய அரசை அம்பலப்படுத்தி உள்ளது!
குழந்தைகளின் துயரத்தைப் பற்றி கவலைப்படாத திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும்!
‘நீட்’ நடைமுறையை கடந்த மே மாதம் மூன்றாம் தேதி எதிர் கொண்டு, ஜூன் 21 அதே நடைமுறையில் மீண்டும் தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகரிக்க, தனது உயிரை கோயம்பத்தூர் மாணவர் மாய்த்துக் கொண்ட சம்பவம் இந்திய தேசத்தின் மனசாட்சியை உலுக்குகிறது!
மக்களிடம் இறுதி இறையாண்மை எனும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதிக்க மறுக்கும் திரு. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவி விலக வேண்டும்.
‘தகுதியை தீர்மானிக்க’, ‘வணிகமயத்தை ஒழிக்க’ என்று கூறியே ‘நீட்’ நடைமுறை திணித்தது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு.
மருத்துவக் கல்வியில் வணிகமயத்தை ஒழிக்க முடியாதது மட்டுமல்ல, பள்ளிக் கட்டணத்துடன் சேர்த்து, பயிற்சி கட்டணம் எனும் பெயரில் வணிகமயத்தை இரட்டிப்பாக்கி உள்ளனர்.
‘நீட்’ நடைமுறையில் 2025 – 2026 கல்வி ஆண்டில் குறைந்தபட்ச தகுதி என்பது பொதுப் பிரிவினருக்கு 144 மட்டுமே. அதாவது, மொத்த மதிப்பெண் 720, இதில் 144 எடுத்தால் போதும், ஐந்து வருடத்திற்கு ஒரு கோடிக்கு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய தயாராக இருந்தால், அந்த நபரால் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர முடியும்.
அதிக தகுதி உள்ளவர்கள் இருக்கும் போது, மிகக் குறைந்த தகுதிப் பெற்றவரை பணத்திற்காக வணிக நோக்கில் மருந்துப் படிப்பில் சேர்க்கும், தனியார் மருத்துவக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வணிக நடவடிக்கைகளுக்கு சட்டப்படியான பாதுகாப்பே ‘நீட்’.
பணம் இருப்பவர்கள் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்பதை ‘நீட்’ நடைமுறை உறுதிசெய்துள்ளது.
உயிரியல், வேதியியல், இயற்பியல் மூன்று பாடங்களில், ஒரு பாடத்தை படித்தால் கூட போதும், பணம் இருந்தால் ‘நீட்’ நடைமுறையில் மருத்துவப் படிப்பில் சேர்த்துவிடலாம்.
பாடங்களை முழுமையாக படிக்காமல் கூட மருத்துவராக முடியும் என்று அளவில் தரம் தாழ்ந்துள்ளது ‘நீட்’ நடைமுறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை.
தகுதியை உறுதிப்படுத்துவது, வணிகமயத்தை கட்டுப்படுத்துவது இரண்டு நோக்கமும் நிறைவேற வில்லை. இரண்டு நோக்கமும் தோற்றுப்போனது.
நோக்கம் தோற்றது, நோக்கமாக சொல்லப்பட்டதற்கு நேரெதிராக மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது என்பதை கடந்த பத்தாண்டு அனுபவம் நிரூபித்துள்ளது.
‘நீட்’ திரும்பப் பெற ஒன்றிய அரசு ஏன் முன் வர மறுக்கிறது?
‘நீட்’ பயிற்சி மையம் என்ற பெயரில் நடக்கும் கல்வி வணிகத்திற்கு துணை போகவும், தகுதி உள்ளவர்கள் இருக்கும் போது, தகுதியில் குறைந்தவர்களை மருத்துவப் படிப்பில் சேர்த்துக் கொள்ளும் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சட்டப் படி பாதுகாப்பதற்கு மட்டுமே ‘நீட்’ தற்போது நடைமுறையில் உள்ளது. வணிகமயத்தை ஒழிக்கவோ, தகுதியை உறுதிப்படுத்தவோ அல்ல.
மாணவர்களை வஞ்சிக்கும், பெற்றோரை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்க வைக்கும், சந்தையின் சூழ்ச்சியாக, வணிகத்தின் சூதாட்டமாக உள்ள ‘நீட்’ விலக்கிக் கொள்வது மட்டுமே தீர்வாக அமையும்.

“நீட்” நடைமுறையை இரத்து செய்து,
+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறையை சட்டப் படி உறுதிப்படுத்த வேண்டும் .
மாணவர்கள் நலனில் அக்கறையில்லாமல், கல்வி வியாபாரிகளுக்கு தூணை போகும் திரு. நரேந்திர மோடி தலைமையில் உள்ள ஒன்றிய அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.
நமது குழந்தைகளின் உயிரை, ஆரோக்கியமான வாழ்கையை உறுதிப்படுத்த வேண்டிய கடமை மனித சமுதாயத்திற்கு உண்டு.
‘நீட்’ நடைமுறையை திரும்பப்பெறு!
+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை நடத்து!
சந்தையின் சூழ்ச்சிக்கு அப்பாவி குழந்தைகள் பலியாவதை தடுக்க முன் வராத திரு. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசே பதவி விலகு!
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை







Comments are closed, but trackbacks and pingbacks are open.