என்ன விளையாடுறீங்களா? ரிமாண்ட் பண்ணிடுவேன் … கடுப்பான நீதியரசர் !
நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில் ஆத்திரமூட்டும் வகையிலான பல்வேறு சம்பவங்களையும்கூட மிக இயல்பாக கடந்து சென்ற நீதியரசர் பரதசக்ரவர்த்தியே, ஒரு கட்டத்தில் கடுப்பாகி, ”என்ன விளையாடுறீங்களா? எங்களை பார்த்தால் தமாஷாக தெரிகிறதா?” என நீதிமன்றத்தில் கடுமையாக பேசும் அளவுக்கு விவகாரம் மாறியிருக்கிறது.
செப்-18 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், 11 முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது.
ஏலத்தில் வெற்றி பெற்றவர்களில் 1420 பேர் இதுவரையில் எம்.எஸ்.டி.சி.க்கு செலுத்த வேண்டிய சேவைக்கட்டணத்தை செலுத்தவில்லை. இலட்சுமிபுரம் பகுதியில் 5.86 கோடி மதிப்பிலான 4.5 ஏக்கர் இடம் 60 கோடிக்கும் மேல் ஏலம் போயிருக்கிறது. வெறும் 20 இலட்ச ரூபாய் முதலீடு செய்திருந்த பாண்டியராஜன் என்ற ஒரே நபர் மட்டும் கோடிக்கணக்கிலான 30-க்கும் மேற்பட்ட பிளாட்டுகளை ஏலத்தில் எடுத்துவிட்டு தற்போது வேண்டாம் என்று மனு செய்திருந்த நிலையில்தான் இப்படி ஒரு கடுமையான வார்த்தைகளை நீதியரசர் பரதசக்ரவர்த்தி பேசியிருக்கிறார்.

17,338 பாண்டுகள் உறுதி செய்யப்படாத பாண்டுகளாக இருந்த நிலையில், அவற்றுள் முதற்கட்டமாக, 9284 பாண்டுகளும்; தற்போது 2295 பாண்டுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், எஞ்சிய 6689 பாண்டுகள் நியோமேக்ஸ் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலை பொருளாதாரக்குற்றப்பிரிவு இணையத்தில் வெளியிட்டும்; இந்த விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் விசாரித்து இறுதி செய்ய வேண்டுமென டான்பிட் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மதுரை உயர்நீதிமன்றத்துக்கு பின்புறமுள்ள நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில், 10.20 சென்ட் இடத்துக்கு, மதுரையை சேர்ந்த முன்னாள் மேயர் முத்து உரிமை கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எஃப்.ஐ.ஆர்-ருக்கு பிறகு நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஏஜெண்டுகளான கபில், முத்துக்குமார், சார்லஸ் உள்ளிட்டவர்கள் சுமார் 450-க்கும் அதிகமான சொத்துக்களை விற்றிருக்கிறார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், நியோமேக்ஸ் வழக்கில் சிக்குவதற்கு முன்பாகவே, அதாவது 2018 இலேயே நியோமேக்ஸ் நிறுவனத்திடமிருந்து இடத்தை வாங்கியிருந்தவர்களின் நிலத்தைக்கூட மறு பத்திரப்பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்ற விவகாரமும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கு ஆட்சேபனை தெரிவித்த 121 மூன்றாம் தரப்பினர்களுள் 11 பேருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அதில் 3 பேர் ஏலத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், எஞ்சிய 8 பேர் ஆட்சேபணையை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஏஜெண்டுகள் என்பதாக அடையாளம் காணப்பட்ட 860 பேரும் ஏல நடவடிக்கைகளில் பங்கேற்பதை தடை செய்ய வேண்டும்; அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இது, அமலாக்கத்துறைக்கு நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களே கொடுத்த பட்டியல். இதில் சில அப்பாவி முதலீட்டாளர்களும் சிக்கியிருக்கிறார்கள். இந்த பட்டியலை முதற்கட்ட ஆய்வு செய்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.
நான்கு கட்டங்களாக ஏலம் நடத்தியும் ஏலம் போகாத இடங்களை, 25% உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, மதிப்பீட்டாளர்கள் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையிலேயே மீண்டும் மறு ஏலம் விடுவதென நீதிமன்றம் முடிவெடுத்திருக்கிறது.
வழக்கின் விசாரணை மீண்டும் அக்-01 அன்று நடைபெறும்.
நியோமேக்ஸ் | என்ன விளையாடுறீங்களா? ரிமாண்ட் பண்ணிடுவேன்… கடுப்பான நீதியரசர் !
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.