விசாரணைக்கு தடை கேட்ட நியோமேக்ஸ் ! நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?
நியோமேக்ஸ் வழக்கில் அதிரடி திருப்பமாக, டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணையை நிறுத்தி வைக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நியோமேக்ஸ் முன்னணி இயக்குநர்களின் பிணைய ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட வழக்குகளை, தனிச்சிறப்பான வழக்காக எடுத்து உயர்நீதிமன்ற நீதியரசர் பரதசக்ரவர்த்தி விசாரித்து வரும் நிலையில், இப்படி ஒரு கோரிக்கையை அவர் முன்பாக நியோமேக்ஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது, டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜி.முத்துக்குமரன் வழக்கை விசாரித்து வருகிறார். இவர், சாத்தான்குளம் போலீஸ் காவல் தந்தை-மகன் கொலை வழக்கில் போலீசார் 9 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்த நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நியோமேக்ஸ் வழக்கின் குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஏற்கெனவே, உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், நியோமேக்ஸ் முன்னணி இயக்குநர்கள், ஏஜெண்டுகளின் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டதோடு, அவர்களது நெருங்கிய உறவினர்களின் பட்டியலையும் சேகரிக்குமாறு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதுஒருபுறமிருக்க, நியோமேக்ஸ் விவகாரத்தில் சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷன் அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் நீதியரசர் விக்டோரியா கௌரி முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது. ஏற்கெனவே, இதே விவகாரத்தை நீதியரசர் பரதசக்ரவர்த்தி விசாரித்து வரும் நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற நியோமேக்ஸ் தரப்பின் வாதத்தை நிராகரித்துவிட்ட, நீதியரசர் விக்டோரியா கௌரி இந்த வழக்கில் பதிலளிக்க அனைத்து தரப்புக்கும் இரண்டு வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த பின்னணியில் இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறது, நியோமேக்ஸ். இதனை ஏற்க மறுத்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி, இனி வாரந்தோறும் நடைபெறும் விசாரணையை 15 நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.
மேலும், உறுதிப்படுத்தப்படாத புகார்தாரர்கள் விவகாரத்தை பொருத்தமட்டில், 577 பாண்டுகளை முற்றிலுமாக நிராகரித்தும்; 10619 பாண்டுகள் தங்களது தரவுகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும் நியோமேக்ஸ் தரப்பில் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு முறையாக தகவல் தெரிவித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து புகார்தாரர்களின் பட்டியலை விரைவில் சரிபார்த்து இறுதி செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும், விரிவான விசாரணை தொடர்பான விரிவான தகவல்கள் காணொளி வடிவில் …
Neomax | விசாரணைக்கு தடை கேட்ட நியோமேக்ஸ் ! நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?
— அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.