தமிழ் சினிமாவில் இது புதுசு! முதல் பத்து நிமிட சீன்கள்! ‘அப்பா குட்டி’ விஜய் ஆண்டனி அதிரடி!
‘விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ தயாரிப்பில் மு.மாறன் டைரக்ஷனில் உருவாகியிருக்கும் படம் ‘அப்பா குட்டி’. இதில் கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி, இன்னொரு நாயகியாக ஹரிப்ரியா , பேபி லிதன்யா, மற்ற கேரக்டர்களில் ஹரிதா, மூணாறு ரமேஷ், பகவதி பெருமாள், ஜென்சன் திவாகர், அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஹரிப்ரியா இசை, முருகானந்தம் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : ராஜீவ் ராஜேந்திரன், இசை & எடிட்டிங் : விஜய் ஆண்டனி, பாடல்கள் : ஏகாதசி, அருண்பாரதி, ஸ்டண்ட் : ராஜசேகர், தமிழ்நாடு ரிலீஸ் : ஃபைவ் ஸ்டார் செந்தில், பி.ஆர்.ஓ.: ரேகா.
வரும் 20-ஆம் தேதி ‘அப்பா குட்டி’ ரிலீஸாவதால், படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நவ.09-ஆம் தேதி இரவு நடந்தது. இதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முதல் முயற்சியாக டிரெய்லரை வெளியிட்டுவிட்டு, படத்தின் முதல் பத்து நிமிடக் காட்சிகளையும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் திரையிட்டு அதிரடி கிளப்பினார் விஜய் ஆண்டனி.

விழாவில் படத்தில் நடித்த பெரும்பாலோர், டெக்னீஷியன்களுடன் சிறப்பு விருந்தினர்களாக, விஜய் ஆண்டனியின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டி தயாரிப்பாளர் தனஞ்செயன், டைரக்டர்கள் சசி, மந்திரமூர்த்தி, ஆனந்த், வினியோகஸ்தர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். மேடையேறிய அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தனஞ்செயன். விஜய் ஆண்டனியும் தனஞ்செயனும் இணைந்து பி.ஆர்.ஓ.ரேகாவுக்கு பூங்கொத்து கொடுத்து பெருமைப்படுத்தினார்கள்.
படத்தில் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் அப்பாவின் தியாகத்தைப் பற்றி இப்படம் பேசுவதை மறக்காமல் குறிப்பிட்டார்கள்.
தனஞ்செயன் பேசியது, “நான்கு மாதங்களுக்கு முன்பே நானும் என் மனைவியும் இப்படத்தைப் பார்த்துவிட்டோம். படம் பார்த்து முடித்ததும் எங்களின் கண்களில் கண்ணீர் கொட்டியது. பத்திரிகையாளர்களாகிய நீங்களும் நிச்சயம் கண் கலங்குவீர்கள். அப்படி நடக்கலேன்னா நான் மன்னிப்புக் கேட்கிறேன்”
சசி, “அருமையான தலைப்பு இது. இதை அமேஸான் ஓடிடியும் ஜி-5 டி.வி.யும் வாங்கியிருப்பது ரொம்பவும் மகிழ்ச்சி. இப்பல்லாம் ஒரு படத்தை எடுத்து ரிலீஸுக்கு முன்பே வியாபாரம் செய்வது சாதாரண விஷயமல்ல”

ப்ரீத்தி அஸ்ரானி, “அம்மாவின் தியாகத்தைப் பற்றி பல படங்கள் வந்திருக்கு. இதில் அப்பாவின் அன்பையும் தியாகத்தையும் சொல்லியுள்ளார் டைரக்டர் மாறன். இதில் என்னுடைய கேரக்டர் இளமையாக இருந்தாலும் முதிர்ச்சியான சிந்தனைகளைக் கொண்டது. இதில் செண்டிமெண்ட் மட்டுமல்ல, கமர்ஷியலாகவும் சீன்கள் இருக்கு. படம் நிச்சயம் ஜெயிக்கும்”.
மு.மாறன், “இதுவரை இயக்கிய மூன்று படங்களுமே க்ரைம்-த்ரில்லர் ஜானரில் வந்தது. இதான் என்னுடைய ஸ்டைல்னு யாரும் நினைச்சிடக்கூடாதுன்னு தான் உண்மைச் சம்பவத்தை மையமாக வச்சு இந்த அப்பா செண்டிமெண்ட் கதையை எடுத்துள்ளேன். ஒரு ஹீரோவாக கதையை ஓகே பண்ணிய விஜய் ஆண்டனி சார், ஒரு தயாரிப்பாளராக மிகவும் பொறுப்புடனும் தாராள மனதுடன் நடந்து கொண்டார்”.
விஜய் ஆண்டனி, “டைரக்டர் மாறன் மிகவும் திறமையானவர். பக்காவாக ப்ளான் போட்டு 60 நாட்களில் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட்டார். படத்தின் க்ளைமாக்ஸ் ரொம்பவும் சிறப்பாக வந்துள்ளது. எனக்கு எப்போதும் ஆதரவு தந்து ஊக்கப்படுத்தும் மீடியாக்கள், இந்தப்படத்திற்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது”.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.