அங்குசம் பார்வையில் ’ஓ.ம்’
கதைக்களம் முக்கால்வாசி ஆந்திரா, கால்வாசி தமிழ்நாடு. ஆந்திராவின் செம்மரக்கடத்தல் மாஃபியாக்களின் தமிழ்நாடு கனெக்ஷனில் ஆரம்பித்து துபாய், ஜப்பான், இந்தோனேஷியா என சர்வதேச நெட் ஒர்க்கைப் பற்றித்தான் சொல்ல நினைத்திருக்கிறார் டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி. இதற்கு தனுஷ், மெகா ஸ்டார் மம்முட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ், துபாய் அப்துல் ஹமீது கேரக்டரில் நஸ்ருதின் ஷா, அப்புறம் இன்ன பிற நடிகர்கள் ராஜ்குமார் பெரியசாமியின் நெட் ஸ்கிரிப்ட் ஒர்க்கிற்குள் வந்து, எல்லோரும் ஸ்லிப்பாகி, படமும் ஸ்லிப்பாகி பல்லிளித்துவிட்டது.
இந்தப் படத்திற்கு ‘ஓம்’ என டைட்டில் வைத்து சென்சாருக்குப் போன போது, “இது இந்து மதத்தைக் குறிக்கிறது. அதனால் ’ஓ’வுக்கும் ‘ம்’க்கும் நடுவுல ஒரு புள்ளி[.]யை வச்சுக்கங்க” என சென்சார் அறிவாளிகள் சொன்னதால் ‘ஓ.ம்’ என வைத்திருக்கிறார்கள். ஏன்யா சென்சார் அறிவாளிகளே… டைட்டிலைப் படிக்கிறவன் ‘ஓ’ புள்ளி ‘ம்’னா படிப்பான்? உங்க புத்தியில தீயவைக்க…
சரி, இப்ப படத்தோட மேட்டருக்கும் படம் நம்மை பாடாய்படுத்திய மேட்டருக்கும் வருவோம். ஆந்திராவின் புதிய முதல்வர் [ சந்திரபாபு நாயுடு கெட்டப். நல்லா கவனிங்க, சங்கி மெண்டாலிட்டி உள்ள நாயுடு கெட்டப்] பதவி ஏற்கிறார். பதவி ஏற்ற உடனே செம்மரக் கடத்தல் கும்பலை அடியோடு ஒழிக்கணும்னு உத்தரவு போடுகிறார். அந்த மாநில டிஜிபி, நிவேதா ரெட்டி [ சாய் பல்லவி] என்ற திறமை வாய்ந்த ஐபிஎஸ் ஆபீசர் தலைமையில் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்சை நியமிக்கிறார். சுறுசுறுப்பாக களத்தில் இறங்கும் நிவேதா ரெட்டி, துபாயில் இருக்கும் அப்துல் ஹமீது தான் இதன் தலைவன் என ஸ்மெல் பண்ணி, இண்டர்போல் உதவியை நாடுகிறார். அதே நேரம் தமிழ்நாட்டின் சென்னை பாடியநல்லூர் ஏரியாவில் ஏழைகளின் ஏந்தலாக இருக்கும் கார்த்திகேயனுக்கும் [மம்முட்டி] ஆந்திராவின் கோவர்தன ரெட்டிக்கும் செம்மரக் கடத்தலில் லிங்க் உண்டு என்பதை கண்டு பிடிக்கிறார்.
கார்த்திகேயனை பிடிக்க, அண்டர்கவர் ஆபரேஷனில் திருக்குமரனை[தனுஷ்] போட்டோகிராபராக்கி, அந்தக் கூட்டத்துக்குள் இறக்குகிறார். அதன் பின் நடக்கும் சீன்கள் எல்லாமே நடுக்காட்டில், நள்ளிரவில் கண்ணைக் கட்டி நம்மைக் காட்டுக்குள் தள்ளிவிட்டது போலாகிவிட்டது.
முதல் காரணம், முக்கியக் காரணம் தனுஷின் அரசியல் எண்ட்ரி திட்டம், முதல்வர் கனவு தான் என்பதில் சந்தேகமேயில்லை. இப்பெல்லாம் மேடையேறினாலே “ஓம் நமச்சிவயா…” சிவாய நம ஓம்…” என காவிப் பேச்சு தான் தனுஷின் வாயிலிருந்து கொட்டுகிறது. அதற்குத் தோதாக படத்திலும் சிவபெருமான், திருவண்ணாமலை அண்ணாமலையார், திருப்பதி வெங்கடாசலபதி, புட்டபர்த்தி சாய்பாபா, ஷீரடி சாய்பாபா, ரமண மகரிஷி, ஓம் டாலர் என ஒரே காவி மயம் தான்.
படத்தில் சாய்பல்லவி முன்பு உட்கார்ந்து விசாரணை செய்யப்படும் போது மட்டும் தான் நம்ம மம்முட்டி என்ற நல்ல நடிகர் வெளிப்படுகிறார். மற்ற சீன்களிலெல்லாம் ரொம்பவும் பரிதாபமாக தெரிகிறார்.அதிலும் அந்த ஜெயில் கலவரக் காட்சியில் என்ன பண்ணனும்னு மம்முட்டிக்கும் தெரியல, என்ன பண்ண வைக்கிறதுன்னு டைரக்டருக்கும் தெரியல. அதனால சுத்தி கைதி ரவுடிகள் கத்தி, கடப்பாரையுடன் பாயும் போது, தேமேன்னு நின்னுக்கிட்டிருக்கார் மம்முட்டி.
படத்தில் கொஞ்சம் ஆறுதல் அளிப்பவர் சாய் பல்லவி தான். ஆனால் ஜெயில் கலவரத்தில் அவர் பலியாகும் போது பார்வையாளனுக்கு பரிதாப உணர்வு ஏற்படமால் போனதற்கு ராஜ்குமார் பெரியசாமியைத் தான் குற்றம் சொல்ல வேண்டும்.
படத்தில் முற்றிலும் வீண்டிக்கப்பட்டிருப்பவர் தனுஷின் மனைவியாக வரும் ஸ்ரீலீலா தான். இவருக்கே இப்படின்னா மற்ற கேரக்டர்களைப் பற்றிக் கேட்கவா வேணும்? அதிலும் சர்வதேச மாஃபியாவான நஸ்ருதீன் ஷாவை, ஏதோ சைதாப்பேட்டை மார்க்கெட் சந்துக்குள்ள புகுந்து புடிச்சிட்டு வர்ற மாதிரி காட்டுறாய்ங்கப்பா…
இந்த இம்சை பத்தாதுன்னு மியூசிக் டைரக்டர் சாய் அபயங்கரின் பின்னணி இசை இம்சை தாங்க முடியல. நட்டநடு ராத்திரியில நடுக்காட்டுக்குள்ள என்கவுண்டர்ல அப்பாவிகளை அதிரடிப்படை சுட்டுத்தள்ளிக்கிட்டிருக்கும் போது என்னமோ ஒரு பாட்டு மாதிரி பின்னணி இசையப் போட்டதெல்லாம் அபத்தத்திலும் அபத்தம்.
போலீசின் ’அண்டர்கவர் ஆபரேஷனை’ பக்கா டீடெய்லுடனும் கதை-திரைக்கதையுடனும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு[1995] ’குருதிப்புனல்’ படத்தில் சொல்லியிருப்பார் கமல்ஹாசன். அந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி பார்த்தாரான்னு தெரியல. அட அது கூட வேணாங்க… இந்த 2023-ல் வெற்றி ஹீரோவாக நடிச்ச ‘ரெட் சாண்டல் வுட்’ன்னு ஒரு படம் வந்துச்சு. இதையாவது பார்த்திருப்பாரான்னு கேட்ட கண்டிப்பா பார்த்திருக்கமாட்டார். ஏன்னா அது சின்ன நடிகர், சின்ன பட்ஜெட் படமாச்சே.
இந்த ஓம்-ன் செம்மரக்கடத்தல் தான் அந்த ‘ரெட் சாண்டல்வுட்’-ன் கதை. அதே ஜவ்வாது மலை பழங்குடி மக்கள் படும் துயரம் தான் திரைக்கதை. க்ளைமாக்ஸில் அந்த மக்களின் வாக்குமூலங்களுடன் படத்தை பக்காவாக எடுத்திருந்தார் டைரக்டர் குரு ராமானுஜம்.
அதாகப்பட்டது மக்களே…. வறுமை துரத்துவதால் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு, போலீஸின் ஃபேக் எண்கவுண்டரில் சாகும் திருவண்ணாமலையின் ஜவ்வாது மலை பழங்குடி இன மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள் ‘பொலிடிக்’ ஹீரோ தனுஷும் ‘டேக்டிக்’ டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமியும். ஆனால் அதை நேர்மையுடன் சொல்ல வக்கற்றுப் போய், சிவபெருமான், அண்ணாமலையார், வெங்கடாசலபதி, புட்டபர்த்தி சாய்பாபா, ரமண மகரிஷி, ஷீரடி சாய்பாபா, இவர்களையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு, “அண்ணாமலையாருக்கு அரோகரா…” போட்டிருக்கிறார்கள்.
எத்தனை சாமிகளை வேண்டுமானாலும் எத்தனை சாமியார்களை வேண்டுமானாலும் கும்பிடுங்கள். அது உங்களின் தனிப்பட்ட விருப்பம். அதை சினிமாவில் திணிக்க முயற்சிக்காதீர்கள். இப்ப என்னாச்சு…எந்த சாமியும் எந்த சாமியாரும் உங்க ‘ஓம்’-ஐக் காப்பாற்றலையே… கதை தாங்க காப்பாற்றும்…
அங்குசம் பார்வையில் ’ஓ.ம்’ 39/100
— கரிகாலன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.