முதுமை என்பது வாழ்வின் முடிவல்ல !
வாழ்க்கையின் நிறைவு அத்தியாயத்தில் அனுபவங்களை அசை போட்டபடி, அமர்ந்திருக்கும் முதியவர்களைப் பார்க்கும் போது நமது மனம் துயரப்படுகிறது. சிறகடித்துப் பறந்த வாழ்க்கையின் பரபரப்புகளின்றி ஓய்ந்திருக்கும் முதுமை. அடுத்த தலைமுறையால் ஒதுக்கப்பட்டும் ஓரங்கட்டப்பட்டும் தனிமையின் மனப்புண்களோடும்…எத்தனை… எத்தனை முதியவர்களைக் காண்கிறோம்.
பெருகிவரும் முதியோர்கள் :
உலகெங்கும் 11 பில்லியன் முதியவர்கள் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது உலக மக்கள் தொகையில் 14 சதவீதம்.
இந்தியாவில் …
இந்தியாவில் தற்போது முதியோர் எண்ணிக்கை 14.9 கோடி. இது நாட்டின் மக்கள் தொகையில் 12 சதவீதம். கிராமப் புறங்களில் இது 71 சதவீதமாக உள்ளது. வேலை தேடி இளையவர்களும் நடுத்தர வயதினரும் நகரங்களை நோக்கி வந்து விடுவதால் இந்த வித்தியாசம்.
தமிழ்நாடு :
தமிழ்நாட்டில் 2011 இல் 10.6 சதவீதமாக இருந்த முதியோர் எண்ணிக்கை 2026 இல் 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. 60 முதல் 69 வயதுடையோர் 9.7 சதவீதமும் 70 முதல் 79 வயதுடையோர் 5.4 சதவீதமும் 80 வயதுக்கு மேற்பட்டோர் 2 சதவீதமும் உள்ளனர்.
இலங்கை :
இலங்கையில் 2024 ஆம் ஆண்டின் கணக்கின்படி 39,21,124 முதியோர் உள்ளனர். இது இலங்கை மக்கள் தொகையில் 18 சதவீதம்.1981 இல் இலங்கையில் முதியோர் எண்ணிக்கை 6 சதவீதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண் முதியோரின் அவலம் :
பொதுவாக முதியோர்களில் பெண்களைவிட ஆண்களே அதிகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்திய முதியோர் எண்ணிக்கையில் 1000 ஆண்களுக்கு 1061 பெண்கள் உள்ளனர். இலங்கையில் உள்ள முதியோர் எண்ணிக்கையில் பெண்கள் 22,08,589 பேர் உள்ளனர். ஆண்கள் 17,12,535 பேர் உள்ளனர்.
சமூகத்திலும் குடும்பத்திலும் வேலை வாய்ப்பு களிலும் ஆண் முதியவர்கள் அதிகமானப் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். திருச்சி, செயிண்ட் ஜோசப் கல்லூரியை ஒட்டியுள்ள சாலை ஓரத்தில் ஒரு இரவில் 40-க்கும் மேற்பட்ட ஆண் முதியவர்கள் படுத்து உறங்குவதைக் காணலாம்.
பொருளாதார நிலை :
இந்தியா, இலங்கை உள்ளிட்டப் பல வளரும் நாடுகளில் 18 சதவீதம் முதியவர்களுக்கு குறைவான வருமானமே கிடைக்கிறது. ஆண் முதியவர்களுக்கு காவல் பணியும் பெண் முதியவர்களுக்கு வீட்டு வேலையும் மட்டுமே கிடைக்கிறது. இதுவும் நல்ல உடல் நிலையில் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
அரசு நலத்திட்டங்கள் :
உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் வயது முதிர்ந்தவர்களுக்குப் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நலத்திட்டங்கள் இதுவரை முழுமையானப் பயனைத் தரவில்லை.சொற்பமான அரசின் உதவித் தொகைகள் வாழ்வாதாரத்திற்குப் போதியதாக இல்லை.
முதியோர் நல வணிகம் :
முதியோர்களை மையமாக வைத்து செய்யப்படும் வணிகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
முதியோர் இல்லங்கள் :
குடும்பங்களில் வைத்து முதியவர்களைப் பராமரிப்பது இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. கல்வியும் தொழில் வளர்ச்சியும் அதிகரித்த இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களை பிள்ளைகள் கவனிப்பது அருகி வருகிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன,
கட்டண முதியோர் இல்லங்கள் :
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டப் பண வசதி உள்ளவர்களை இலக்காகக் கொண்டு கட்டணம் செலுத்தும் முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றன. சாதாரண நிலையிலிருந்து நட்சத்திர விடுதி நிலை வரை கட்டணம் செலுத்தும் முதியோர் இல்லங்கள் இயங்கிவருகின்றன. இது நல்ல வருமானம் தரும் தொழிலாக உள்ளது.
இலவச முதியோர் இல்லங்கள் :
அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களின் நிதி உதவியுடன் ஏராளமான இலவச முதியோர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போன்ற சிறப்பு நாட்களில் இது போன்ற இல்லங்களுக்கு பலர் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இத்தகைய இலவச இல்லங்களில் தரமான உணவு மற்றும் பிற வசதிகளை வழங்குவதில் பல இடங்களில் குறைபாடுகள் உள்ளன.
வீட்டில் பராமரிப்பு :
முதியோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப விரும்பாதப் பிள்ளைகள் வீட்டுக்கே ஒரு பணியாளரை வரவழைத்து பெற்றோரைப் பராமரிக்கும் பொறுப்பை அந்தப் பணியாளரிடமே விட்டு விடுகின்றனர். பெரும்பாலும் பெண்கள் மட்டுமே இப்பணிக்கு அழைக்கப்படுகின்றனர். செவிலியர் ( Nurse) பயிற்சி பெற்றவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கின்றது. இவர்கள் ஹோம் நர்ஸ் (Home Nurse) என்று அழைக்கப்படுகின்றனர்.
முதியோரின் தேவைகள் :
வீடுகளிலும் இல்லங்களிலும் முதியோரை தனித்துவமாகக் கவனிப்பது மிகவும் அவசியம். எல்லோரும் உண்ணும் உணவை பெரும்பாலும் முதியோரால் உண்ணமுடியாது. எனவே முதியோருக்கு அவர்களுக்கேற்ற உணவுகளைத் தயாரித்துக் கொடுக்க வேண்டியது அவசியம். காற்றோட்டமான அறை, சரியான படுக்கை வசதிகள், குளிர் மற்றும் வெப்ப காலப் பாதுகாப்பு, சுத்தமான அதே வேளை முதியோர் பயன்படுத்தும் வகையிலான கழிவறை, உரிய மருத்துவ வசதி, வெளியே சென்று வருவதற்கான வசதிகள், பொழுது போக்கு அம்சங்கள், தகவல் தொடர்பு வசதிகள் முதலியன முதியோருக்கு மிகவும் அவசியமானவை.
முதியோர் சட்டங்கள் :
முதியோர் நலனைப் பாதுகாக்கும் சட்டங்கள் உள்ளன. இந்திய ஒன்றிய அரசு பெற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2007 என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. தமிழ்நாட்டில் மூத்தக் குடிமக்கள் நல விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூத்தக் குடிமக்களுக்கானத் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க சட்டமாக முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

முதியோர் பராமரிப்பின் பிரச்சினைகள் :
முதியோர் நலம் தற்காலத்தில் பெரும் இலாபம் தரும் வருமானமாக உருவாகி வருகிறது. முதியோரைப் பராமரிக்கும் பணியாளர்கள அவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்தால் போதும் என்று எண்ணுவதை பல இடங்களில் காணமுடிகிறது. அன்பும் அரவணைப்பும்தான் அவர்களின் எதிர்பார்ப்பு.
பயிற்சித் திட்டங்கள் :
இப்பணியில் ஈடுபடுவதற்கானப் பணியாளர்களுக்குத் தகுந்தப் பயிற்சித் திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம். முதியோரின் உடல் நலன் மற்றும் மன நலன் சார்ந்ததாக இப் பயிற்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.
நிறைவாக, நமது வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியில் நம்மை உருவாக்கியும் வளர்த்தும் ஆளாக்கிய நம் பெற்றோர்களே இன்று முதியவர்கள் என்ற நிலையில் உள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் மட்டுமின்றி தனி மனிதர்களுக்கும் பெரும் சொத்தாகும். எனவே, முதியவர்களை கருணையுடன் அணுக வேண்டியது நமது முதன்மையானக் கடமையாகும்.
வழக்கறிஞர் தமிழகன், திருச்சிராப்பள்ளி.






Comments are closed, but trackbacks and pingbacks are open.