‘ஒன் மேன்’ சினிமாவும் துணை நின்ற மாமனிதர்களும்!
‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ படங்களின் மூலம் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தவர் சங்ககிரி ராச்குமார். இப்போது உலக சாதனையாக ‘ஒன் மேன்’ என்ற படத்தை எடுத்துள்ளார். கதை-நடிப்பு [அதுவும் எல்லா கேரக்டர்களும்], ஒளிப்பதிவு, எடிட்டிங், மிக்ஸிங், வி.எஃப்.எக்ஸ், கலர்கிரேடிங், கிரேன் ஆபரேட்டர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் செய்ய வேண்டிய வேலைகளை தான் ஒருவரே செய்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார் தமிழன் ராச்குமார்.
இந்த ,ஒன் மேன்’ படத்தின் பிரஸ் ஷோவுக்கு முன்பாக பிரஸ்ஸை சந்தித்தார் ராச்குமார். இந்தப் படத்தை வெளியிட மட்டுமல்ல, இதற்கு முந்தைய படங்களையும் வெளியிட உறுதுணையாக நின்ற டைரக்டர் சேரன், நடிகர் சத்யராஜ், இப்போது பெரிதும் துணை நின்ற டைரக்டர் லெனின் பாரதி, வி.எஃப்.எக்ஸ்.ஸ்டுடியோ அதிபர் ஏ.ஆர்.கே.ராஜராஜா ஆகியோரை மேடை ஏற்றினார் ராச்குமார்.

அப்போது அவர் பேசும் போது, “என் வாழ்வில் சேரன் அண்ணன் தான் மிகவும் முக்கியமானவர். அதே போல் தோழர் சத்யராஜ், தோழர் லெனின் பாரதி உட்பட பல இயக்குனர்கள் உள்ளனர். இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. அதனால் கலைப்புலி தாணு சாரைச் சந்தித்து நிலைமையைச் சொன்னேன். அவர் உடனே பிவிஆர் நிர்வாகத்திடம் பேசினார். “தமிழராகிய நீங்கள் பெரிய சாதனை செய்துள்ளீர்கள். உங்களுக்கு உதவ வேண்டியது எங்கள் கடமை” எனக் கூறி, தியேட்டர்கள் கிடைப்பதற்கு உதவினார்கள். அதே போல் ஏ.ஆர்.கே.ராஜராஜா சார், அவரின் ஸ்டுடியோ சாவியையே என்னிடம் ஒப்படைத்துவிட்டார். இப்படி இந்த ‘ஒன் மேன்’ ரிலீசாக துணை நின்ற அனைத்து மாமனிதர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகை சகோதரர்கள் நல்ல ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என உருக்கமாகப் பேசினார்.
சத்யராஜ் பேசும் போது, “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தான் எனக்கும் ராச்குமாருக்குமிடையே நட்பு உருவாகக் காரணம். எப்படியாச்சும் ஜெயிக்க வைங்கன்னு என்னுடைய படம் ரிலீசாகும் போது மீடியாக்கள்கிட்ட நான் கேட்டதில்ல. ஏன்னா படம் நல்லாயிருந்தா நல்லாயிருக்குன்னு எழுதப் போறாங்கன்னு விட்ருவேன். ஆனா இந்த ஒன் மேன் படத்தை எப்படியாச்சும் ஓட வைங்கன்னு கேட்டுக்குறேன்” என்றார்.

மற்ற மூவரும் பேசிய பிறகு ‘ஒன் மேன்; ஷோ ஆரம்பமானது.
சாதனையாளர்கள் விருது வாங்கும் நிகழ்ச்சிக்காகச் செல்ல ஆயத்தமாகும் ராஜாவுக்கு [ராச்குமார்] மரணப்படுக்கையில் கிடக்கும் தாயைப்[ராச்குமார்] பற்றியும் கவலை இல்லை, குடும்ப உறவுகளைப் பற்றியும் கவலை இல்லை. இந்த உலகத்தை தான் மட்டுமே ஆளவேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற வெறி. இதனால் தாயின் கதறலைக் கண்டு கொள்ளாமல் காரில் கிளம்புகிறார்[ கார் டிரைவரும் ராச்குமார் தான்]. போகும் வழியில் பூமா, ஜாக்கி, ரூபி ஆகிய மூன்று நண்பர்களையும்[ இவர்களும் ராச்குமார் தான்] காரில் ஏற்றிக் கொண்டு போகிறார்.
காட்டுப் பகுதியில் போகும் போது கார் ரிப்பேராகிறது. அதனால் காரிலிருந்து இறங்கி, ஐவரும் காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கே பாழடைந்த ஆராய்ச்சிக் கூடம் இருக்கு. அங்கே கிடக்கும் வீடியோவில் ஒரு விஞ்ஞானி[ இவரும் அவரே] ஒருவர் பேசுகிறார். அதிலே தான் கண்டுபிடித்த ஊசியில் சிவப்புத் திரவத்தை தங்களின் உடலுக்குள் செலுத்திக் கொண்டால், உலகில் உள்ள மனித இனம் பத்து நாட்களுக்க்கு மடிந்துவிடும். பச்சை திரவத்தைச் செலுத்தினால் மீண்டும் மனிதர்கள் உயிர் பெறுவார்கள்” என விஞ்ஞானி பேசியிருக்கிறார்.
இதைக் கேட்டதும் டிரைவர் தப்பித்து ஓடிவிடுகிறார். மற்ற நால்வரும் சிவப்பு திரவத்தைச் செலுத்திக் கொள்கிறார்கள். உலகெங்கும் சிவப்பு பரவி, மனிதம் இனம் மடிகிறது. இதை மகிழ்ச்சியாகப் பார்க்கும் நால்வரும் உலகெங்கும் சுற்றுகிறார்கள். ராஜாவின் பேராசையும் உலகை தனி ஒருவனாக ஆளவேண்டும் என்ற வெறியும் மற்ற மூவரையும் காவு வாங்குகிறது. இறுதியில் ராஜாவும் செத்து மடிகிறான்.
இதான் இந்த ‘ஒன் மேன்’ ஷோவின் சுவாரஸ்யமான கதைக்களம். இந்த நல்ல கதைக்களத்துடன் களமிறங்கி, கம்ப்யூட்டர் தொழில்நுட்படத்தில் ஆல் ஏரியாவிலும் புகுந்து விளையாண்டு, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டார் தோழர் சங்ககிரி ராச்குமார். அனைவரும் செத்த பிறகு அமெரிக்க நகரங்கள், டிரெயினில் சாகசம், கார் சேஸிங், ஹெலிகாப்டரில் சாகசம் என தனிமனிதனாக சாதனை படைத்திருக்கிறார் ராச்குமார். படத்தில் வரும் போலீஸ், தியேட்டரில் பார்க்கும் 300 பேர் என அனைவருமே ராச்குமார்கள் தான்.
150 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள், 50 கோடி டைரக்டர்கள், 300 கோடி கிராபிக்ஸ் சித்துவிளையாட்டுகள் என 500 கோடியைக் கொட்டி படம் எடுத்தாலும் பல்லிளிக்கிறது. ஆனால் தனி ஒரு மனிதனாக இந்த ‘ஒன் மேன்’-ஐ உருவாக்கிய தமிழன் சங்ககிரி ராச்குமார், போற்றுதலுக்குரியவர், பாராட்டுக்குரியவர்.
–ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.