மழையில் நனைந்து நெல்மணிகள் சேதம் ! விவசாயிகள் கவலை !
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வைரிசெட்டிபாளையத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது . இதில் தற்போது குறுவை நெல் அறுவடை முடிந்து சுற்றுவட்டார விவசாயிகள் தங்களது நெல் மணிகளை கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வந்து கொட்டி வைத்துள்ளனர்.
மங்கப் பட்டி புதூர், முருங்கப்பட்டி, நாகநல்லூர், கொப்பம்பட்டி ,முத்தையம்பாளையம், பசலிக்கோம்பை, சூக்லாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை கொண்டு வந்துள்ளனர். மேலும் கடந்த ஒரு மாதகாலமாக விவசாயிகளின் நெல் மணிகள் எடை போடாமல் காலதாமதப்படுத்தியதால், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் மழை நீரில் நனைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து வைரிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற விவசாயி பேசியபோது ,
“வைரிச்செட்டிப்பாளையம் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் காலதாமதப்படுத்தி வருவதால்,கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக நெல்மணிகள் மழையில் நனைந்து பெரும் சேதம் அடைந்துள்ளதாகவும், எடை போட்டு சாக்கு முட்டையில் உள்ள நெல்மணிகளும் கடந்த ஒரு மாத காலமாக எடுத்துச் செல்லாமல் கொள்முதல் நிலையத்திலேயே திறந்த வெளியில் வைத்துள்ளார்கள்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் சரியான விளக்கம் தருவதில்லை. நெல்லை பாதுகாக்க தார்ப்பாய் வழங்குவதில்லை, சுமார் 7500 மூட்டைகள் அளவில் உள்ள நெல் அனைத்தும் திறந்த வெளியில் உள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் பெரும்பாலான நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகி விட்டதாகவும்,நெல் கொள்முதல் நிலையத்திலேயே நெல்மூட்டைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கு குடோன் இருந்தும் , அதற்குள் நெல்லை கொண்டு வைக்க தனியாக வாடகை பணம் கொடுத்தால்தான் உள்ளேநெல் மூட்டைகளை அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் கூறுவதாகவும் வேதனை தெரிவித்தார் .
ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டிய நிலையில் 500 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்வதாகவும் , அவ்வாறு எடை வைத்த நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு தார்ப்பாய்களை வழங்கி இருந்த போதும் அதனை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தர மறுப்பதாகவும் கூறினார்.
தற்போது நெல் கொள்முதல் நிலையம் குறுவை நெல்லை கொள்முதல் செய்வதற்காக திறந்து ஒரு மாத காலம் ஆகியும்10 டோக்கன் அளவினான நெல் மூட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக தேங்கியுள்ள நெல் மணிகள் வீணாகி முளைக்கும் சூழலில் உள்ளது. மேலும் விவசாயிகள் அனைவரும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் மழையில் நனைந்த நெல்மணிகளை தனியாக பணியாளர்களைக் கொண்டு பணம் கொடுத்து மழையில் நனைந்த நெல்மணிகளை காய வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் மீண்டும் வேறு கோணிச் சாக்குகளை கொண்டு மாற்றுவதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளை மழையில் நனையாமல் பாதுகாக்க தார்ப்பாய் ஏன் தரவில்லை எனக் கேட்டால் விவசாயிகள் தான் தார்பாய்களை கொண்டுவர வேண்டும் எனவும் , அதற்கு வசதி இல்லை எனில் எதற்காக விவசாயம் செய்கிறீர்கள் என அதிகாரிகள் கேள்வி கேட்டு தங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் கூறினர்.
திறந்த வெளியில் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைப்பதற்கு அனுமதிப்பதில்லை எனவும், சுமார் 5 ஆயிரம் மூட்டைகள் வரை வைக்கக்கூடிய குடோனை திறக்காமல் பூட்டியே வைத்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் . குடோனில் நெல் மூட்டைகளை வைப்பதற்கும் தனியாக வாடகை பணம் தர வேண்டும் என விவசாயிகளை கட்டாயப்படுத்துவதாக கூறினார்.
இதேபோல் வைரிச்செட்டிப்பாளையத்தில் ஜம்பேறி செல்லும் வழியில் நெல் குடோன் ஒன்று பூட்டியே கிடப்பதாகவும் அந்த குடோனையும் விவசாயிகள் பயன்படுத்துவதற்கு தர மறுப்பதாகவும் தெரிவித்தனர். விவசாயிகளிடமிருந்து நெல்மணிகளை எடை வைத்த உடனேஒரு வார காலத்திற்குள் அங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டும். அதை விடுத்து மாதக்கணக்கில் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் இருப்பதாகவும், விவசாயிகள் அனைவரும் தங்களது மற்ற வேலைகளை விட்டுவிட்டு நெல் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுவதாகவும் , மேலும் தற்போது மழையில் பெரும்பாலான நெல் மூட்டைகள் நனைந்து உள்ளதால்அதனை காய வைத்து மீண்டும் எடை வைப்பதற்கு நேரமும் , பணமும் கூடுதலாக விரயமாவதாக கூறினர்.
இந்த குருவை நெல்லை சாகுபடி செய்வதற்கு தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 300 கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி நெல்லை அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் அதனை விற்பதற்கு பெரிய போராட்டமே நடத்த வேண்டி உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் மூட்டைக்கு எவ்வித கட்டணமும் வாங்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மூட்டைக்கு ரூ 30 முதல் 35 ரூபாய் வரை கட்டணமாக விவசாயிகளிடம் வசூலிப்பதாகவும் தெரிவித்தனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் , தொடர்ந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.
மேலும் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் உடனடியாக தங்களின் நெல்மணிகளை கொள்முதல் செய்யஅதிகாரிகள் முன் வர வேண்டும் எனவும் மேலும் காலதாமதப்படுத்தினால் அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.