வானதி சீனிவாசன் … எல்.முருகன் … இவர்களால் பாஜகவுக்கு கேடுதான் !
வானதி சீனிவாசன், எல்.முருகன் இவர்கள் பற்றி பாஜக தொண்டர்கள் புரிந்து கொள்ள என் அனுபவத்தை இந்த பதிவில் விரிவாக எழுதுகிறேன். நான் பாஜகவில் 32 வருடங்களாக தொடர்ந்து பயணித்து வருகிறேன். என்னால் பாஜகவில் சேர்க்கப்பட்ட பிரைவேட் ஸ்கூல் ஆசிரியர் நண்பர் ஒருவர் என்னுடனே பாஜகவில் பயணிப்பார். பொதுவாக ஆசிரியர்கள் அவ்வளவு எளிதில் பாஜகவில் சேர மாட்டார்கள். ஆனால், அந்த ஆசிரியர் நண்பர் என்மீதுள்ள நம்பிக்கையில் பாஜகவில் இணைந்து என்னுடன் பணியாற்றினார்.
அவருக்கு நான்கு ஆண்டுகள் முன் சிறுநீரகம் செயல் இழந்து மாற்று சிறுநீரகம் வைக்க ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நிலை. அப்போது அவரது மனைவி நான் எனது கணவருக்கு எனது சிறுநீரககத்தை தருகிறேன். என்னிடம் கையில் இரண்டு லட்சம் பணம் மட்டுமே உள்ளது ஆப்ரேஷன் செலவு 8 லட்சம் ஆகும் என்றார்கள். உங்கள் நண்பரை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அவரது மனைவி கண்ணீர் விட்டு கேட்டு கொண்டார்.
நான் எனது நண்பர்கள் வழியாக சிறுக சிறுக அவரது மனைவி வங்கி கணக்கில் 2 இலட்சம் வரை போட வைத்தேன். இன்னும் 4 இலட்சம் பணம் தேவை. நான் பிரதமர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொடுத்தேன். அந்த காப்பீடு வழியாக 5 இலட்சம் கிடைக்கும் என்று நினைத்தேன். மருத்துவமனையில் இருந்து பிரதமர் காப்பீடு அலுவலகத்திற்கு அனுப்பிய அப்ளிகேஷன்ஸ் ட்ராப் ஆகி காப்பீடு தொகை ஓகே ஆகவில்லை. இதனால் ஆப்ரேஷன் தள்ளி போகிறது. ஆப்ரேஷன் செய்யும் வரை டயாலிசிஸ் செய்ய வேண்டும் இதற்கு மாதம் மாதம் நாற்பது ஆயிரம் வரை செலவு ஆகுகிறது.

பிரதமர் காப்பீடு தொகை கிடைக்காமல் ட்ராப் ஆனதை வானதி சீனிவாசன், எல்.முருகன், கேசவ விநாயகம் என எல்லா பாஜக தலைவர்களையும் போனில் தொடர்பு கொண்டு விபரமாக சொல்லி, பிரதமர் காப்பீடு ட்ராப் ஆனதை கிளியர் செய்து தர உதவி கேட்டேன். பாஜக தலைவர்கள் எவரும் அதற்கு சிறு உதவி கூட செய்ய முன்வரவில்லை. நொந்து போனேன் எனது நண்பருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று தனிமையில் அழுது உள்ளேன்.
கடைசியாக வானதியிடம் அப்போது பிஏ வாக பணியாற்றிய ஆதித்தியா நீங்கள் வேதனைபடுவது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆனால், நீங்கள் நினைப்பது போல் பாஜக தலைவர்கள் வழியாக உங்களுக்கு நிச்சயமாக உதவி கிடைக்காது. அதனால் நான் தனிப்பட்ட முறையில் எனக்கு பழக்கம் உள்ள தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி பழனி மாணிக்கம் அவர்களிடம் சொல்லி உங்களுக்கு உதவ சொல்கிறேன் என்று கூறினார்.
அப்போது பழனிமாணிக்கம் எம்பி, எங்களிடம், ”ஏன் பாஜக தொண்டர்களுக்கு கூட பாஜக தலைவர்கள் உதவி செய்ய மாட்டார்களா? திமுக எம்பி நான் தான் உதவ வேண்டும் பாருங்கள்” என்று கேட்டார். பழனிமாணிக்கம் கேட்ட வார்த்தை என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சிய மாதிரி இருந்தது.

30 ஆண்டுகளாக எதற்காகவும் திமுக தலைவர்களிடம் உதவி கேட்டு போகாத நான் அன்று எனது நண்பர் உயிரை காக்க திமுக எம்பி உதவியை நாட வேண்டிய நிலை வந்துவிட்டதே என்ற வேதனை அன்று எனக்கு நாக்கை பிடுங்கி கொண்டுமாதிரி அவமானத்தில் துடித்தேன்.
ஆனால், ஆதித்தியா சொன்னதற்காக உடனடியாக பழனிமாணிக்கம் எம்பி டில்லி பிரதமர் காப்பீடு அலுவலகத்திற்கு நேரடியாக பேசி இன்சூரன்ஸ் ட்ராப் ஆனதை கிளியர் செய்து தொகை சாங்சன் ஆக எல்லா உதவியும் செய்தார்.
பாஜக ஆட்சியில் பாஜக பிரதமர் அலுவலகத்தின் வழியாக திமுக எம்பி பாஜக தொண்டருக்கு உதவுகிறார். ஆனால், பாஜக அமைச்சர் எல்.முருகனால் உதவி செய்ய முடியாதா? பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதியால் முடியவில்லையா? இவர்களால் முடியும். ஆனால் உதவ இவர்களுக்கு மனசு வராது. உதவி செய்ய மாட்டார்கள். எல்.முகருகனும் செய்ய மாட்டார். வானதியும் செய்ய மாட்டார். கேசவ விநாயகமும் செய்ய மாட்டார். 95 சதவீதம் பாஜக தலைவர்கள் பாஜக தொண்டர்களுக்கு உயிர் போகும் நிலை வந்தாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
பாஜக தொண்டர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும், எந்தவித மருத்துவ உதவியும் செய்ய மாட்டார்கள். நாம் உதவி கேட்டால், கண்டும் காணாமல் கடந்துபோய் விடுவார்கள்.
எனக்கு சமீபத்தில் ஹார்ட் அட்டாக் வந்தது. மேற்கண்ட அனுபவத்தால் போதுமான பணம் சேமித்து வைத்திருந்தேன். இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்தேன். அதனால் பாஜக தலைவர்களிடம் நாங்கள் பணம் உதவி எதிர்பார்த்திடவில்லை.
அதே நேரத்தில் மருத்துவமனையில் ஆப்ரேஷன் பற்றி டாக்டர்களிடம் பேச, நல்லபடியாக ஹார்ட் ஓப்பன் சர்ஜரி செய்ய பாஜக தலைவர்கள் பேசினால் ஆப்ரேஷன் நல்லபடியாக செய்வார்களே என்று பாஜக தலைவர்கள் உதவியை என் மனைவி எதிர்பார்த்தார்.
நான் இப்பவும் மாவட்ட பொறுப்பாளர். ஆனால், பாருங்கள் ஒரு பாஜக தலைவர்கள்கூட என்னை ஆஸ்பத்திரியில் திரும்பிக்கூட பார்க்கவில்லை. என் மனைவி, எனது 15 வயது மகன்களும் ஆஸ்பத்திரியில் திக்கு திசை தெரியாமல் தனியாக போராடி ரொம்ப சிரமப்பட்டு எனக்கு ஆப்ரேஷன் செய்து காப்பாற்றி இன்று வீட்டில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நான் எழுதியது நூறு சதவீதம் சத்தியமான உண்மை. இன்றும் நான் கட்சி மாறவில்லை. இன்றும் பாஜகவுக்காகதான் நான் பாடுபடுகின்றேன். இந்துத்துவ சித்தாந்த கொள்கையை விட்டு என்னால் விலக முடியாது. ஆனால், மோசமான சுயநலம் உள்ள தலைவர்கள் பாஜகவில் வளர கூடாது. எல்.முருகன், வானதி சீனிவாசன் போன்ற தலைவர்கள் நிச்சயமாக வளர கூடாது என்ற நோக்கில்தான் எழுதுகிறேன்.
தேர்தல் நேரத்தில் இவர்கள் பின்னால் போய் உழைத்து ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யவே எழுதுகிறேன். 2021 தேர்தலில் வானதிக்காக தேர்தல் பணியாற்றிய கோவை பகுதியில் தெருவோரம் தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் செய்யும் ஏழை தொண்டர் கடலை பாலன் இப்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வானதி சீனிவாசனிடம் உதவி கேட்டு கிடைக்காமல் உயிருக்கு போராடி வருகிறார்.
https://www.facebook.com/share/v/18RxQXiWdb/ இந்த பதிவில் எழுதி உள்ளேன். கடலை பாலன் பேட்டியும் அந்த வீடியோவில் உள்ளது பாருங்கள். வானதி சீனிவாசன் எல்.முருகன் போன்ற தலைவர்கள் பாஜகவில் வளரவிட கூடாது. இவர்களால் பாஜகவுக்கு கேடுதான் என்று இந்த நேரத்தில் தோலுரித்து காட்டவே எழுதுகிறேன்.
— ரகுராமன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.