அங்குசம் பார்வையில் ‘போலீஸ் ஃபேமிலி’
தயாரிப்பு : ‘ஆன் தி டேபிள் புரொடக்ஷன்ஸ்’ மலைச்சாமி ஏ.எம்.ராஜா. டைரக்டர் : எம்.பாலு, ஆர்ட்டிஸ்ட் : ராஜா மலைச்சாமி, ‘சித்தப்பு’ சரவணன், நிஷா துபே, காதல் சுகுமார், சுரேகா, ரோஜன் லியோன், ரத்னம், ஒளிப்பதிவு : ஜெயக்குமார் தங்கவேல், இசை : ஜெய கே.தாஸ், எடிட்டிங் :எம்.எஸ்.செல்வா, பி.ஆர்.ஓ. : ஏ.ஜான்.
கஞ்சா கேஸில் சிக்கிய இளைஞன் ஒருவனை ஸ்டேஷனில் வைத்து அடித்து துவைத்ததால் குற்றுயிரும் குலை உயிருமான அவனைத் தூக்கி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு இடத்தில் தூக்கிப் போடுகிறது சப் இன்ஸ்பெக்டர் ராஜா மலைச்சாமி, கான்ஸ்டபிள் காதல் சுகுமார் தலைமையிலான டீம். ஆனால் அவன் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடக்கும் செய்தியை டிவியில் பார்த்து அதிர்ச்சியாகிறது போலீஸ் டீம். தனது மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்க களம் இறங்குகிறான் சென்னை காசிமேட்டில் பெரிய ரவுடியாக இருந்து, திருந்தி இப்போது மதுரையில் அமைதியாக வாழும் தனசேகர் [ சித்தப்பு சரவணன் ].
தனது மகன் சாவுக்குக் காரணமான போலீஸ் ஃபேமிலியில் ஒவ்வொருவராக போட்டுத் தள்ளுகிறான் தனசேகர். கடைசியில் மிஞ்சியிருப்பது எஸ்.ஐ. ராஜா மலைச்சாமியும் கான்ஸ்டபிள் காதல் சுகுமாரும் தான். அவர்களின் கதி என்ன என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘போலீஸ் ஃபேமிலி’.
கதைன்னு பார்த்தா இதான். ஆனா திரைக்கதை படுத்தும்பாடு இருக்கே…நம்மால தாங்க முடியல சாமீ…… எஸ்.ஐ.ராஜாவாக தயாரிப்பாளர் ராஜா மலைச்சாமியே களம் இறங்கி கதிகலங்க வைத்துவிட்டார். இவரின் நடிப்பில் அப்படியொரு செயற்கைத்தனம். சில சீன்களில் திருதிருவென முழிக்கிறார். சீனியர் நடிகரான சித்தப்பு சரவணன் நடிப்பே படுசெயற்கையாக இருக்கும் போது, பாவம் தயாரிப்பாளர் ராஜா மலைச்சாமியால் மட்டும் என்ன நடித்துவிட முடியும்? அந்த லட்சணத்துல இருக்கு டைரக்டர் பாலுவின் டைரக்ஷன். கொஞ்சம் சுமாரான சினிமாவையாவது பாருங்க டைரக்டரே….
காதல் சுகுமாருக்கும் தனசேகருக்குமிடையே இருக்கும் ரிவெஞ்ச்சையாவது கரெக்டா ஸ்கிரிப்ட்ல கொண்டு வந்திருந்தாவது ஓரளவு சுமாரா இருந்திருக்கும். அதையும் கடைசி பத்து நிமிஷத்துலக் காட்டி கடுப்பேத்திட்டாக மைலார்ட். எம்.எல்.ஏ.வாக வரும் நடிகரை எங்கிட்டுத்தான் பிடிச்சாய்ங்களோ…?
ராஜா மலைச்சாமியின் மகள்களாக வரும் நடிகைகளும் சரி, மகள்களில் ஒருத்தியைக் காதலிக்கும் கெட்ட இளைஞனாக வரும் நடிகரும் சரி, ரொம்பவே பரிதாபமாகத் தெரிகிறார்கள்.
சம்பவங்களின் தொகுப்பை திரைக்கதையாக்கியதால் ஏற்படும் சலிப்பால் ஒளிப்பதிவைப் பத்தியோ, இசையைப் பத்தியோ பெரிதாக சொல்ல எதுவும் இல்லை.
பழி வாங்கும் எண்ணம் இருந்தால் மனுசனால நிம்மதியா வாழ முடியாது, மன்னிக்கும் குணம் இருக்கணும்’ என்பதைத் தான் சொல்ல நினைச்சிருக்கார் தயாரிப்பாளர். ஆனால் நம்மால்….?
அங்குசம் பார்வையில் ‘போலீஸ் ஃபேமிலி’ 33/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.