பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் மந்திரி சபை
ஜுன் 15, 1977 தேர்தல் முடிவுகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வெற்றியின் கோபுரத்தில் அமர வைத்திருந்தன. அ.இ.அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கூட்டணி சக்கைபோடு போட்டிருந்தன. அ.இ.அ.தி.மு.க.விற்கு மட்டும் 130 தொகுதிகள். மார்க்சிஸ்ட் கம்யூ-12, அந்த கூட்டணியில் இடம் பெற்ற யூனியன் முஸ்லீம் லீக் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தன.
தி.மு.க.வை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்படும் என்று எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் சூளுரைத்தது போலவே நடந்தது. தி.மு.க. 48 இடங்களில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. ஊழல் புகார்கள், விசாரணை கமிஷன், பத்திரிக்கை விமர்சனங்கள், எம்.ஜி.ஆரின் கடுமையான எதிர்ப்பு இவையெல்லாம் தி.மு.க.வை புறம் தள்ளியது.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க. தான் பிறந்த ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றி அகில உலகத்தையே அண்ணாந்து பார்க்கச் செய்தது. 1967-ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.க. 138 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனால் தி.மு.க.விலிருந்து பிரிந்து தனியே வந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற ஒற்றைக்கட்சியோடு மட்டும் கூட்டணி வைத்து எம்.ஜி.ஆர்.பெற்றது 130 தொகுதிகள். மிருக பலத்துடன் ஆட்சியில் தி.மு.க. இருந்தது. அதை எதிர்த்து மிக சாதுர்யமாக எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் தடபுடலாக களத்தில் பந்தா காட்டாமல், யாரையும் பகைமை பாராட்டாமல் அரசியலை லாவகமாக கையாண்டு தன்னுடைய பரம எதிரியான கருணாநிதியை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினார்.
எம்.ஜி.ஆரின் வெற்றியை குறித்து வாழ்த்து சொல்வதற்காக ராமாவரம் தோட்டத்திற்கு வந்தவர்களுக்கு ஆச்சர்யம். எம்.ஜி.ஆர் அங்கே இல்லை. மீனவ நண்பன் திரைப்படத்தின் இறுதி கட்டம் சூட்டிங்கில் தண்ணீரில் இறங்கி விடிய விடிய தொப்பழாக நனைந்தபடியே எம்.ஜி.ஆர்.
நடித்து முடித்து விடைபெற்றார்.
30.06.1977-ல் ராஜ்பவனுக்கு விரைந்தது எம்.ஜி.ஆரின் கார். ஆளுநர் பிரபுலால் பட்வாரி தமிழகத்தின் தலைமகன் எம்.ஜி.ஆருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிறகு மற்ற அமைச்சர்கள் பதவியேற்றனர்.
1. எம்.ஜி.ஆர் – காவல்துறை, தொழில்துறை, சுகாதாரம்
2. நாஞ்சில் கி. மனோகரன் – நிதி
3. கே.நாராயணசாமி முதலியார் – சட்டம்
4. ஜி.ஆர். எட்மண்ட் – உணவு
5. எஸ்.ராமச்சந்திரன் – பொதுப்பணி
6. எஸ்.அரங்கநாயகம் – கல்வி
7. ஆர்.எம். வீரப்பன் – செய்தி
8. பி.சௌந்தரபாண்டியன் – அரிஜன நலம்
9. கே.காளிமுத்து – உள்ளாட்சி
10.எஸ்.ராகவானந்தம் – தொழிலாளர் நலன்
11. சி.பொன்னையன் – போக்குவரத்து
12.பி.டி.சரஸ்வதி – சமூக நலம்
13.ஜி.குழந்தைவேலு – விவசாயம்
14.ராஜா முகமது – கூட்டுறவு
1971-ல் தேர்தலின் வெற்றிக்கு பிறகு கருணாநிதியிடம் எம்.ஜி.ஆர் கேட்டது சுகாதாரத்துறை. அன்று கருணாநிதியால் மறுக்கப்பட்டது. இன்று எம்.ஜி.ஆர்.மடியில் அதே சுகாதாரத்துறை …..
– ஹரிகிருஷ்ணன்