குழந்தைகளுக்கு பக்கவாத நோய் வராமல் தடுக்க
முன்னோர்கள் அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் பக்கவாத நோய் இருப்பின் அவர்களின் குழந்தைகளுக்கு பக்கவாத நோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதை இந்த வாரம் பார்ப்போம்.
கெட்டப் பழக்கவழக்கங்களினால் 20 வயதிலேயே பக்கவாத நோயால் பாதிக்கப்படுவோரை, நான் எனது 20 வருட மருத்துவ அனுபவத்தில் இப்பொழுதுதான் அதிகமாகப் பார்க்கிறேன். நமது இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? என்ற கேள்விக்கு பதில் அனைவரும் அறிந்ததே.
என்ன தான் நமது இளைய சமுதாயம் மனம் போன போக்கில் சென்றாலும் அவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு நம்மைச் சேர்ந்ததுதானே. முதுமைக் காலத்தில் தன்னைப் பார்ப்பான் என் மகன், என்ற ஆறுதலோடு வாழும் பெற்றோர்களுக்கு, தன் மகனை கை, கால்கள் செயலற்று தங்களது உதவியோடு நடக்க வைக்கும் அவல நிலை இன்று உருவாகியுள்ளது. ஏன் இந்த அவலநிலை? சிந்திப்போம் வாசகர்களே.
நம் இன்றைய சமுதாயம்
தொலைக்காட்சி முன் தொலைந்து விட்டார்கள்
முகநூலில் முகவரியைத் இழந்து நிற்கிறார்கள்
கணினியின் முன் கற்பனை உலகத்தில் களிக்கிறார்கள்
சினிமா மோகத்தில் சிக்கி சிதைந்துவிட்டார்கள்
அலைப்பேசியில் மனதை அலைப்பாய விட்டார்கள்
WhatsApp-ப்பினால் உண்மை உறவுகளை மறந்து விட்டார்கள்
நமது வாழ்வின் நோக்கமே மகழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வது தான். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். இன்று உண்ணவும் உறங்கவும் தான் வீடு என்ற நிலை உருவாகியுள்ளது.
உண்டு, உறங்கி, வாழும் இடம் சத்திரமாகுமே தவிர வீடாகாது. பொழுது போக்கிற்காக செய்யப்பட வேண்டிய விசயங்களை வாழ்க்கையாகவே மாற்றிவிட்டால், பிறகு வாழ்க்கையும் விளையாட்டாகத் தானே இருக்கும். எளிதாக பணம் சம்பாதித்து வாழ்வது எப்படி என்று யோசிக்கும் நமது சமுதாயம், ஆரோக்கியமாக வாழ முதலில் தன்னை நேசிக்க வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள்.
ஆரோக்கிய வாழ்வு வாழ இதை கவனிப்போம்
அ – அன்பு அமைதி,
ஆ – ஆனந்தம், ஆரோக்கியம்,
இ – இன்சொல், இறையன்பு, இயற்கையோடு இயைந்து வாழ்வது
ஈ – ஈன்ற தாய் தந்தை மீது வைக்கும் பாசம்
ஊ – உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு
ஊ – ஊக்கமுடைமை
எ – எண்ணங்களில் நேர்மை
ஏ – ஏட்டுக்கல்வியை வாழ்வின் ஏணியாக்குதல்
ஐ – ஐம்புலன்களின் கட்டுப்பாடு
ஒ – ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவில் உறுதியுடன் இருத்தல்
ஓ – ஓம் என்ற பிரணவ மந்திரத்தை நித்தம் சிந்தையில் நிறுத்தி பிரபஞ்சத்தோடு பின்னி பிணைந்து வாழ்தல்
ஒள – ஒளசதம் (மருந்து) போல் உணவு உண்ணல்
ஃ – அஃகம் (தானியங்கள்) உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின்றி வாழலாம் என்பதை சிந்தையில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
கடந்த 29 வாரங்களாக பக்கவாத நோய் என்றால் என்ன? அந்நோய்க்கான காரணிகள் மற்றும் அறிகுறிகள் என்ன? அதற்கான சிகிச்சை மற்றும் தடுக்கும் முறைகள் என்ன? ஒருமுறை பாதிக்கப்பட்டால் மீண்டும் பக்கவாதம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சந்ததிகளை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன? என்பது பற்றி விரிவாகப் பார்த்தோம், இத்துடன் பக்கவாத நோய் பற்றிய கல்வி முடிவுக்கு வருகிறது. இனிவரும் வாரங்களில் பார்கின்சன்ஸ் என்ற நடுக்குவாத நோய் பற்றி
விரிவாகப் பார்ப்போம்.