புஷ்பவனம் குப்புசாமி ஆதங்கம் சரியா?
தமிழ் இயல் இசை நாடக மன்றத்திற்குதலைவராக நியமிக்கப்பட்டுள்ள குப்புசாமிக்கு வாழ்த்துகள். பதவியைப் பற்றி தாங்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஏற்புடையது அல்ல. இரு கழகத்தின் ஆட்சியிலும், என்னை ஏமாற்றி விட்டார்கள் என தினசரி பேட்டி கொடுத்துக் கொண்டுள்ளார்.
பதவி என்பது உழைப்புக்கும், தியாகத்திற்கும் தரும் அன்பளிப்பு தானே தவிர, நான் நாட்டுபுற பாடலை தினசரி பாடி வந்துள்ளேன். எனக்கும் பதவி வேண்டும் என கோரி இருக்கிறீர்கள். கழகங்கள் ஆட்சியில் எவரும் கண்டு கொள்ளவில்லை என்பதே உங்கள் ஆதங்கம்.
இம்மாதிரிய பதவிகள் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கட்டிலேறிய பின்பு அரங்கேறியவை. துறை சார்ந்த திறமையும், கொள்கை ஈடுபாடுகள் எப்படி என்பதின் அடிப்படையில் பதவியில் பகிர்ந்தளிக்கப்பட்டன. வாய்ப்பை பொறுத்து பதவி பெற்றோரும் உண்டு. செல்வாக்கினால் வந்தோரும் உண்டு. எதிர்பாராமல் தங்கள் சேவைகளை செய்தோரும் உண்டு.
கல்லூரி பேராசிரியர்களாக பணியாற்றிய ‘விஜயலட்சுமி -நவநீதகிருஷ்ணன்’ – நாடெங்கிலும் மட்டுமின்றி, உலக அரங்கிலும் நாட்டுபுறகலைச் சேவையை திறம்பட நடத்தி இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். பதவியை நாடவுமில்லை, பதவி கொடுப்பார் யாருமில்லை.
தாங்கள் நாட்டுபுறகலையை வர்த்தகமாக்கி நாடெங்கும் பிரபலமானவர். ‘சமுதாயத்தொண்டு’ என்கிற அளவுகோல் உங்களுக்கு ஒத்துவராது, பொருந்தாது. இயக்கவாடையின்றி இருந்தமையால் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தற்போதைய முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது.
கலை உலகில் ‘TMS’ என்கிற பாடகருக்கு அரசியல்வாதிகளோ திரை உலகமோ பதவிக்கு, பட்டதிற்கு, முன் மொழிந்ததில்லை. மறைந்த குடியரசுத்தலைவர் மாண்புமிகு A.PJ. அப்துல்கலாம் தாமாக முன் வந்து, பரிந்துரைத்து, ‘பத்மஸ்ரீ’ பட்டத்தை தருவித்து மகிழ்ந்தார்.
எல்லோரும் பாடுவார்கள். ஆனால் TMS குரல் ‘நடிக்கும்’ – என்று ‘குமுதம்’ – விமர்சித்தது உண்மையிலும் உண்மை. திரைத்துறையிலும், நாடகத்துறையிலும், கலையின் அடிப்படையில், தரும் பதவிகள் திறமை மட்டுமின்றி வர்க்கரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் மாறிவிட்டது.
திரையுலக பெரும் ஜாம்பவான்கள், எவ்வளவோ திறமையை காண்பித்து நடித்தும், பரிசுகளோ, பதவிகளோ எந்த மனிதனையும் தேடிச்சென்றதில்லை. கலையும் அரசியலும் தமிழகத்தில் இரண்டறக்கலந்து உலாவந்து கொண்டிருக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தால், தேடிவரும் பதவிகள் இல்லையேல் நாம் விலகித்தான் நிற்கவேண்டும்.
அரசியல்வாதிகளால் திறமைகள் அடிமையாகிறது. பதவி வேண்டுபவர்கள் அடிமைகளாகுங்கள். திறமையோடு வாழ்ந்து விட்டு போறவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருங்கள். உண்மைகள் ஊமைகளாகி விட்டன.
— அருணாச்சலம், மதுரை .






Comments are closed, but trackbacks and pingbacks are open.