“எனது அப்பா ஸ்தானத்தில் அண்ணன் சமுத்திரக்கனி”–‘ராமம் ராகவம்’ இயக்குனர் நெகிழ்ச்சி!
ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’. படத்தை ஜி.ஆர்.ஆர்.மூவிஸ் பேனரில் ரகு தமிழ் நாடெங்கும் வெளியிடுகிறார். நாளை மறுநாள்( பிப்ரவரி 21) வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் விழா நேற்று ( பிப்ரவரி 18) சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
இவ்விழாவில், இயக்குனர்கள் ‘சாட்டை’ அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ மணிமாறன், ‘திருடா திருடி’ சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ ஸ்டண்ட் சில்வா, ‘ரைட்டர்’ பிராங்க்ளின், ‘திரு. மாணிக்கம்’ நந்தா பெரியசாமி, ‘காதல் என்பது பொதுவுடமை’ ஜெயபிரகாஷ், ‘மலையன்’ கோபி, நடிகர் தம்பி ராமையா,பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன், நடிகர் தீபக், ஹரீஷ் ஆகியோருடன் சமுத்திரக்கனி, இயக்குநர் தனராஜ், தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு, கதாநாயகி மோக்ஷா, ப்ரமோதினி, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசியவர்கள்,
தயாரிப்பாளர் பிருத்தவி,
“தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் அப்பாவை அழைத்து, ‘ஐ மிஸ் யூ’ என படம் பார்ப்பவர்கள் சொல்வார்கள்”.
இயக்குநர் நந்தா பெரியசாமி,
“கல்லாக இருந்த என்னை மாணிக்கக்கல்லாக மாற்றினார் சமுத்திரக்கனி. ராமரால் அகலிகைக்கு வாழ்க்கை கிடைச்சது போல், அவரால் எனக்கு வாழ்க்கை கிடைத்தது. அவர் சிறகில்லா தேவதை. அனைவரையும் கை பிடிச்சு உயர கூட்டிட்டுப் போவார். ‘ராமம் ராகவம்’ பத்தின் ட்ரெய்லர் பார்க்கும்போது, என் மனதில் அப்பா மின்னல் போல் வந்துட்டுப் போனார். இதுதான் இந்தப் படத்தோட வெற்றி”.
இயக்குநர் சுப்ரமணிய சிவா,
“ராமம் என்றால் புகழ், ராகவம் என்றால் மகன். தாயாக யார் வேண்டுமானால் வாழ்ந்துடலாம். தாயின் வயிற்றில் பத்து மாதம் இருப்பதால் தாய்மை அனைவரிடமும் இருக்கு. ஒரு மனிதன் தாயாக வாழ்வது இயற்கையான விஷயம். தந்தையாக வாழ்வது தான் சிரமம்.
தந்தையின் கண்ணீர் அமிர்தம் போன்றது. தந்தையின் மனம் என்பது கடவுளின் மனது. கடவுள் மாதிரி ஆகணும்ன்னா நீங்க தந்தை ஆகணும். புது இயக்குநர் தன்ராஜ் வெற்றி பெற வாழ்த்துக்கள் “.
அறிமுக இயக்குநர் தனராஜ்,
“என் முதற்படத்துக்கு தோள் மீது கை போட்டு உதவிய கனி அண்ணனுக்கு ரொம்ப நன்றி. அந்தக் கை இதுவரை எனக்குத் துணையாக இருக்கு. அப்பாவாக 21 படங்கள் சமுத்திரக்கனி நடித்திருக்கிறாராம். படத்தின் ரிலீஸ் தேதியும் தேதி 21 ஆகக் கிடைச்சிருக்கு. இந்தப் படம் பார்த்தால், ‘ஒரு புது இயக்குநர் நல்லா படம் பண்ணான்’னு பெயர் வரும். நான் மகிழ்ச்சியா இருக்கேன். தசரதன் சொன்னதுக்காக ராமன் வனத்துக்குப் போனார். அது ராமாயணம். ராமுடு சொல்றதுக்காக அப்பா எங்க போனார் என்பதுதான் ‘ராமம் ராகவம்’. எனக்கு அப்பா இல்லை. இப்போ சமுத்திரக்கனி அப்பா இருக்கார். எனக்கு இந்தப் படம் குடும்பத்தைக் கொடுத்துச்சு. எனக்கு அம்மாவும் இல்லை. இப்போ இருக்காங்க. எந்த வீட்டிலும் ராகவன் போல் ஒரு மகன் இருக்கக் கூடாது. அதுதான் இந்தப் படம்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி,
“நான் கேரவன்ல இருந்து இறங்கி ஷாட்க்குப் போற கேப்பில், இந்தக் கதையைச் சொன்னான் தன்ராஜ் . ‘நிமிர்ந்து நில்’ தெலுங்கு ஷூட்டிங்கில் எல்லா வேலையும் செய்வான். அப்போ அவன் மீது தனிக் கவனம் வந்தது. ‘ஒரு கதை கேட்டேன். நீ நடிச்சா நல்லாயிருக்கும்’ என ‘விமானம்’ கதையைக் கேட்க வச்சது அவன்தான். விமானம் இயக்குநரின் கதை தான் இந்த ‘ராமம் ராகவம்’. இவன் கேட்டு வாங்கியிருக்கான். கதையைக் கேட்டதும், ‘அப்பா கேரக்டரா சரி பண்ணிடுவோம் . நீ சொல்ல வர்றது முக்கியமான விஷயம். சமூகத்துக்குத் தேவையான விஷயம்டா’ என்றேன்.
தமிழ்நாட்டுல கூட இப்படி 15 கேஸ் நடந்திருக்கு. வெளில இருந்து பார்த்தா அப்பா-மகன் கதையா தெரியும். ஆனா உள்ளுக்குள்ள வச்சிருக்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கான விஷயம். இந்தப் படம் பார்த்து, ஒரே ஒரு பையன் திருந்திட்டா போதும், இந்தப் படம் மாபெரும் வெற்றி. நல்ல படைப்பை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. பணத்தை விட, எத்தனை பேரின் மனசை கொள்ளையடி க்குதுங்கிறதுதான் ஒரு படைப்புக்கு முக்கியம். ராமம் ராகவம் அப்படிப்பட்ட படம்”.
— மதுரை மாறன்.