பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பதா ?
பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிக்கும் நோக்கில் ஒன்றிய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை. மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழுவின் தலைவருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, அவ்வமைப்பின் சார்பில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளரும் களப்பணியாற்றும் கல்வியாளருமான
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ”விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு இது நாள் வரை பொது விசாரணை நடத்தவில்லை. பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நேரடியாக ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் தரும் இந்த மசோதா, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கிறது. இந்த மசோதா மாநில அரசுகளிடம் பொறுப்பையும், ஒன்றிய அரசிடம் அதிகாரத்தையும் தருகிறது.

தேசியக் கல்விக் கொள்கை 2020 நடைமுறைப்படுத்த தேவையான கட்டமைப்பை உருவாக்குவதே இந்த மசோதாவின் நோக்கம். அதன்படி, இந்த மசோதா உருவாக்கும் ஆணையம், அதன் கீழ் இயங்கும் மன்றங்கள், மாநில அரசுகளிடம் தெரிவிக்காமலேயே, தனியாரையும், அன்னியப் பல்கலைக்கழகங்களையும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் செயல்பட அனுமதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும். அத்தகைய உயர் கல்வி நிறுவனங்கள் தங்களின் செலவுகளை ஈடுசெய்ய தேவையான கட்டணங்களை மாணவர்களிடம் வசூலித்துக் கொள்ளவும், உபரி வருமானத்தை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாமல், தேவையான அளவு கட்டணம் வசூல் செய்யும் தனியாருடனும், அன்னிய பல்கலைக்கழகங்களுடனும் போட்டிப் போட இயலாமல், அரசு உயர் கல்வி நிறுவனங்கள் பலவீனப்பட்டு, தனியார் கைவசம் செல்லும் சூழல் உருவாகும்.’’ என்பதாக எச்சரிக்கிறது, அந்த அறிக்கை.
மேலும், ‘’ இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 246 மற்றும் கூறு 41 ஆகியவற்றுக்கு எதிராக இந்த சட்டம் உள்ளதை விவாதிக்க கூட்டு நாடாளுமன்றக் குழு பொது விசாரணை நடத்த வேண்டும்’’ என்பதாக கோரிக்கையையும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் சார்பில் முன்வைத்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு








Comments are closed, but trackbacks and pingbacks are open.